ஆன்லைனில் எதை விற்கலாம்? எதையும் விற்கலாம். மளிகை சாமான்கள் முதல் வைர நகைகள் வரை சகலமும் கிடைக்கும் மாயாபஜார் இது. பொதுவாக பெண்களுக்கு நகையை நேரில் பார்த்து, ஆராய்ந்து, சிலவற்றை அணிந்துப் பார்த்து வாங்கினால்தான் திருப்தி. ஆனால் இன்றைய இளம் பெண்களுக்கு இதற்கெல்லாம் நேரம் இருப்பதில்லை. வேகமாக பறந்துக் கொண்டிருக்கும் போது அதுக்கேற்றபடி லைட் நகைகளைத் தான் அதிகம் விரும்புகிறார்கள். அதை கடை கடையாகத் தேடிப் போகாமல் வீட்டில் இருந்தபடியே ஈஸி ஷாப்பிங் செய்து ஆன்லைனில் வாங்கி விடுகிறார்கள். பிடித்த டிசைன்களை கம்ப்யூட்டர் மானிட்டரில் தேர்ந்தெடுத்தபின், எல்லா கோணங்களிலும் நகையைப் பார்த்து, ஜூம் செய்து, கடைசியில் செலெக்ட் செய்தபின் ஆன்லைனில் பேமெண்ட் செய்த சில நாட்களில் வீடு தேடி வரும் இந்த தங்க வைர நகைகளை அணிந்து மகிழ்கிறார்கள். இந்த ட்ரெண்டை புரிந்து கொண்டு, களத்தில் இறங்கி, தானே டிசைன் செய்த நகைகளை விற்பனை செய்ய witengold.com என்ற இணையதளத்தை துவங்கியுள்ளார் நடிகை தமன்னா. தன் புதிய முயற்சியைப் பற்றி விரிவாகப் பேசினார்.
‘சின்ன வயசிலே எனக்கு ஆப்பிள்னா ரொம்பப் பிடிக்கும். அம்மா ஆப்பிள் வடிவ தோட்டின் நடுவில் வைரம் பதித்து ஒரு நகை செய்யச் சொல்லி எனக்குப் போட்டு அழகு பார்த்தாங்க. இதுதான் ஜீவல்லரி பற்றிய என் முதல் ஞாபகம், எனக்கு எப்பவும் ரொம்பப் பிடிச்ச ஸ்டட் அதுதான். ஏற்கனவே அப்பா மும்பைல நகை வியாபாரம் செஞ்சிட்டு இருக்காரு. அவரோட யூனிட்டை இன்னும் விரிவாக்கத்தான் வெப்சைட் தொடங்கி ஆன்லைனிலும் நகை விற்பனையைத் தொடங்கினேன். ஷூட்டிங் நேரம் போக 18 காரட் தங்கத்தில் லைட் வெயிட் தங்கத்தில் வைரம் பொதித்த அழகழகான நகைகளை நானே டிசைன் செய்ய ஆரம்பித்துவிட்டேன்.
நான் எப்போது மும்பைக்குப் போனாலும் அப்பாவுடன் நிறைய நேரம் செலவழிப்பேன். நகை வியாபாரம் தவிர, அப்பா வைரங்களை வரவழைத்து அதைப் பட்டை தீட்டி நகைகள் செய்வதற்கு ஏற்ப வடிவமைத்து தரும் வேலையும் செய்து வருகிறார். அவரிடம் வைரத்தைத் தரம் பிரிப்பதிலிருந்து பல விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். ஷூட்டிங் இல்லாத சமயங்களில் இதைப் பற்றி மேலும் பல விஷயங்களைக் கற்றுக் கொள்வதிலும், வியாரத்தை விரிவாக்குவதிலும் கவனம் செலுத்துகிறேன்” என்றார் இந்த தங்க மங்கை.
வைட் அண்ட் கோல்ட் இணையதளத்தில் தற்போது ஆயிரம் நகைகளின் போட்டோக்கள் விலைப்பட்டியலுடன் அப்லோட் செய்யப்பட்டுள்ளது. வைரம், சஃபையர், ரூபி, எமரால்ட், ஓபல் மற்றும் முத்து உட்பட பல கண்ணைக் கவரும் ஜெம்ஸ்டோன்ஸ் பதித்த நகைகள் புத்தம் புதிய டிசைன்களில் உள்ளன. இந்த இணையத்தின் மூலம் டிசைனர் மோதிரம் வாங்க நினைத்தால், மோதிரத்தின் அளவை கண்டுபிடிக்க ஒரு இணைப்பு கொடுத்துள்ளார்கள். அதைச் சரியாக தேர்ந்தெடுத்து நம்முடைய விரல் அளவுக்கு ஏற்றாற்போல மோதிரம் ஆர்டர் செய்யலாம்.
நகையின் தரத்திற்கும் வேலைப்பாட்டுக்கும் ஏற்றாற் போல விலை பனிரெண்டாயிரத்தில் ஆரம்பித்து ஒரு லட்சம் ரூபாய் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ‘பெண்கள் ஏற்கனவே அழகானவர்கள், அவர்கள் அழகை மெருகூட்டுவதாக என்னுடைய இந்த டிசைன்கள் இருக்கும். எனக்கு ஒற்றைக் கல் நகைகள் ரொம்ப பிடிக்கும். சிம்பிளாக இருந்தாலும் கண்ணைக் கவரும் விதமாக அதை டிசைன் செய்தால் மிகவும் அழகாகிவிடும் என்கிறார். தமன்னாவைத் தவிர இன்னும் சில டிசைனர்களும் நிறுவனத்தில் உள்ளார்கள். அவர்களின் டிசைன்களையும் பார்த்து ஃபைனல் அப்ரூவ் செய்பவர் தமன்னாதான்.
‘எங்களுடைய இலக்கு 12000 லிருந்து 50000 ரூபாய் வரை வாங்குவோர்தான். டிசைனர் ஜூவல்லரி எல்லாம் மிகவும் விலை உயர்ந்தது என்ற எண்ணத்தை witengold – ல் நகை வாங்கும் போது மாற்றிக் கொள்வார்கள். அனைவரும் வாங்கக் கூடிய வகையில் விலை இருக்கும்படிதான் டிசைன் செய்து வருகிறேன்’ என்கிறார் தமன்னா.