மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய படம் ‘பிசாசு’. இப்படத்தை இயக்குனர் பாலா தனது பி ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார். பேய் படமாக வெளியான இப்படத்தில் பிரயாகா பேயாக நடித்திருந்தார். இவருக்கு அப்பாவாக ராதாரவி நடித்திருந்தார். நாயகனாக நாகா நடித்திருந்தார்.
இப்படம் தற்போது கன்னடத்தில் ‘ராக்ஷஸி’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இப்படத்தை முருகதாஸின் உதவியாளர் அஷ்ரப் இயக்கி வருகிறார். இதில் கதாநாயகனாக நவரசன் நடிக்கிறார். நாயகியாக சிந்து லோகநாத் நடிக்கிறார். ராதாரவி நடித்த கதாபாத்திரத்தில் விஷாலின் அப்பாவான ஜி.கே.ரெட்டி நடிக்கிறார். இதற்கு முன் சில வேடங்களில் நடித்த ஜி.கே.ரெட்டி தற்போது முதல் முறையாக முழுநீள கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சென்னை பின்னி மில்லில் ஐஸ் பேக்டரி போல் செட் அமைத்து இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். இதில் ஜி.கே.ரெட்டி சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கியபோது அந்த இடத்திற்கு விஷால் திடீர் என்று விசிட் அடித்திருக்கிறார். பின்னர், தன் தந்தை நடிப்பதை பார்த்துவிட்டு படக்குழுவினரையும் வாழ்த்தி விட்டு சென்றுள்ளார்.