தென்னிந்திய மொழி திரைப்படங்களுக்கான சர்வதேச விருதான சைமா விருது வழங்கும் விழா ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகிறது. கடந்த வருடம் மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இவ்விழா இந்த வருடம் துபாயில் ஆகஸ்ட் 6 மற்றும் 7ம் தேதி நடைபெற இருக்கிறது.
ஒவ்வொரு வருடமும் இவ்விழாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெற்றிகரமாக ஓடிய படங்களை தேர்வு செய்து அதில் சிறந்த படம், நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.
அதன்படி கடந்த வருடம் வெளியான சிறந்த படங்களை தேர்வு செய்து பட்டியலை சைமா குழுவினர் வெளியிட்டிருக்கின்றனர். அதில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’ சிறந்த துணை நடிகை, சிறந்த நடன அமைப்பாளர், சிறந்த பாடலாசிரியர், சிறந்த பாடகர், சிறந்த காமெடி நடிகர், சிறந்த அறிமுக இயக்குனர், சிறந்த நடிகை, சிறந்த நடிகர், சிறந்த படம் என 9 பிரிவுகளுக்கான விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது படக்குழுவினரை சந்தோஷத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதில் தனுஷ் மட்டுமே மூன்று பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார்.
விஜய் நடித்த ‘கத்தி’ படம் 8 பிரிவுகளுக்கும், சித்தார்த் மற்றும் பாபிசிம்ஹா நடித்த ‘ஜிகர்தண்டா’ 7 பிரிவுகளுக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.