தமிழ் சினிமாவில் காமெடி படங்களுக்கு பெயர்போன இயக்குனர் சுந்தர்.சி., தற்போது பேய் படங்களை எடுக்கும் இயக்குனராக வலம் வரத் தொடங்கிவிட்டார். இவர் இயக்கிய ‘அரண்மனை’ என்ற பேய் படம் அடைந்த பெரும் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார்.
இந்நிலையில், இவர் புதுமுக இயக்குனர் எஸ்.பாஸ்கர் இயக்கத்தில் உருவாகும் ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ என்ற பேய் படத்தையும் தயாரிக்கவிருக்கிறார். இப்படத்தில் நாயகனாக வைபவ் நடிக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ், ஓவியா, கருணாகரன், விடிவி கணேஷ், கோவை சரளா, சிங்கம்புலி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
சித்தார்த் விபின் இசையமைக்க, பானு முருகன் ஒளிப்பதிவை கவனிக்கிறார். இப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த ‘வின்னர்’ படத்தில் வடிவேலு பேசிய ‘ஹலோ, நான் வருத்தப்படாத வாலிப சங்க தலைவர் கைப்புள்ள பேசுறேன், யார் பேசுறது’ என்ற டயலாக்கை வைத்து, எதிர்முனையில் ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ என்ற டயலாக்கை ஒரு பெண் பேசுவதுபோல் உருவாக்கியுள்ளனர். இந்த டீசரைப் பார்க்கும்போதே படம் கண்டிப்பாக அனைவரையும் மிரட்டும் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.