இந்திய கிரிக்கெட் கேப்டன் டோனியின் வாழ்க்கை வரலாறு ‘எம்.எஸ்.டோனி தி அன்டோல்ட் ஸ்டோரி’ பெயரில் உருவாகி வருகிறது. மும்பையில் உள்ள வாங்கடே மைதானத்தில் கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை தலைமையேற்று வழி நடத்தி வெற்றிப்பாதைக்கு அழைத்துசென்று உலக கோப்பை பெற்று தந்தார். சிறுவயதில் ராஞ்சியின் சாலைகளில் தொடங்கி அவரது சமீபத்திய சாதனைகள் வரை இப்படத்தில் சம்பவங்கள் இடம்பெறுகிறது.
டோனி கதாபாத்திரத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிக்கிறார். திஷா பட்டானி காதலியாக நடிக்கிறார். நீரஜ் பாண்டே இயக்குகிறார். இப்படத்தை வரும் 30ம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது. தனது வாழ்க்கை சரித்திரத்தை திரைப்படமாக்குவதற்கு உரிமையாக ரூ.40 கோடி டோனி பெற்றார் என்று அவ்வப்போது தகவல்கள் வெளிவந்தன. இதுகுறித்து இயக்குனர் நீரஜ் கூறும்போது,’கதை உரிமைக்காக வெளியில் கூறப்படும் அளவுக்கு பெருந்தொகை டோனிக்கு தரப்படவில்லை’ என்றார்.