Thursday, May 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா எமக்கான சினிமா: 1985 திம்புப் பேச்சுவார்த்தைக் காலம்! இயக்குனர் ந. கேசவராஜன்

எமக்கான சினிமா: 1985 திம்புப் பேச்சுவார்த்தைக் காலம்! இயக்குனர் ந. கேசவராஜன்

3 minutes read


தமிழ் மக்களின் போராட்ட உணர்வுகள் கலை, இலக்கியங்களாக பரவலாக வெளிக் கிளம்பி வந்துகொண்டிருந்தன. இந்தக் காலப்பகுதிக்கு பல வருடங்களுக்கு முன்பும் எழுத்திலக்கியங்கள் போராட்ட உணர்வைத் தாங்கி வெளிவந்தன.

எனினும் மற்றைய கலை வடிவங்கள் 1985 பகுதிகளிலேயே தீவிரமாகச் செயற்பட்டன.

வீதி நாடகங்கள், மேடை நாடகங்கள், இசை நிகழ்ச்சிகள் என்பன யாழ்ப்பாணமெங்கு பரவலாக நடந்தன. தன்னார்வத்துடன் கலைஞர் தாமாகவே முன்வந்து படைப்புகளைத் தந்தனர். நானும் அரியாலை இளைஞர்கள் சிலரை இணைத்து இரண்டு வீதி நாடகங்கள் செய்திருந்தேன்.

ஆனால் #சினிமா எனும் கலை வடிவம் இதற்குள் இணையவில்லை. ஏனெனில் எமக்கான சினிமா அப்போது உருவாகி இருக்கவில்லை. புதிதாக உருவாக்க நினைத்தாலும் சினிமாவுக்கான உபகரணங்கள் மற்றும் பிலிம்கள் என்பன நம்மிடம் இருக்கவில்லை. கொழும்பிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியாத அரசியல் மற்றும் பாதுகாப்புத் தரப்பு நெருக்கடி. ஏற்கனவே பொருளாதாரத் தடைகளும் கூடவே இருந்தன.

இந்த நிலையில் தான் சினிமா மீதும் போராட்டம் மீதும் தீவிர அக்கறை கொண்டிருந்த நானும் சில நண்பர்களும் அப்போது பெறக்கூடியதாக இருந்த வளங்களைக் கொண்டு நமக்கான சினிமாவை உருவாக்கும் முயற்சியில் இறங்கினோம். அப்போது எனக்கு வயது 22.
எழுத்தாளனும் தயாரிப்பாளரும் இயக்குநரும் நானே.

அன்று பெறக்கூடிய VHS வீடீயோ தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி சினிமாவை உருவாக்க முனைந்தோம். அப்போது சினிமாவுக்குரிய படத் தொகுப்பு வசதிகள் இல்லை. இசைச் சேர்ப்பு, ஒலிச் சேர்ப்பு, மீள் குரல் பதிவு என்பவற்றுக்கான தொழிநுட்பம் அறவே இருந்திருக்கவில்லை.

கமராவில் ஒளிப்பதிவு செய்யும் போது அதற்கான VHS கசட் டெக் தனியாகக் கமராவில் கேபிள் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். அது பற்றரியில் இயங்குவதாகும். அதற்குள் தான் ‘நமது’திரைப்படத்தின் மூலப்பொருளான VHS கசட் இருக்கும்.

அந்த டெக்கை ஒளிப்பதிவாளருக்கு அருகே ஒருவர் தோளில் கொழுவியிருப்பார். அது பெரும் பாரமாக இருக்கும்.

இப்படித்தான் எனது முதல் திரைப்படமான “தாயகமே தாகம்” படமாக்கப்பட்டது. அனேகமாக அந்த டெக்கைத் தோழில் சுமப்பவனாக அப்படத்தின் இயக்குநரான நான் இருந்தேன்.

ஒளியமைப்புக்கு அப்போது கிடைக்கக் கூடிய வீடியோ லைற், வேறு மின் குமிழ்கள், பல வண்ண செலபேன் தாள்கள் நெருப்புப் பந்தங்கள் ஈயக் கடதாசிகள், பிளைவூட், றெஜிபோம் சீற் என்பனவும், ஒளி வடிகட்டிகளாக வெள்ளை வேட்டி,வெள்ளைப் பொலித்தீள் சீற் என்பனவும் பயன்படுத்தப்பட்டன.

படப்பிடிப்புக்குழுவில் நானும் ஒளிப்பதிவாளர் ரகுமான் சுகூரும் மட்டுமே இருந்தோம். மற்றவர்கள் நடிகர்கள். நடிகர்கள் நடிப்புடன், மற்றைய வேலைகளான லைற் பிடித்தல் அரங்க வடிவமைப்பு மற்றும் பொருட்களைக் காவும் சுமைதூக்கி வேலைகளையும் செய்தனர். சில வேளைகளில் படப்பிடிப்பைப் வேடிக்கைப் பார்க்க வந்தவர்களும் இவற்றில் உதவி செய்வதுண்டு.

லொக்கேசன் மாறும் போது நடிகர்களையும் பொருட்களையும் தமது சைக்கிள்களில் ஏற்றி உதவியவர்களும் இந்தப் பார்வையாளர்கள் தான். அன்றைய காலத்தில் இப்போதுள்ளது போல் பரவலாக மோட்டார் சைக்கிள்கள் இல்லை.

“இயக்கப் படம் எடுக்கிறாங்கள்” எனும் செய்தி சிறுவர்களிடமும் சில ஆர்வலரிடையேயும் ஆர்வத்தை ஏற்படுத்திய போதும் பெரும்பாலான ஊரவர்களும் பிறரும் கேலியாகவே பார்த்தனர். எமது கலைஞரும் நாமும் பகிடி செய்யப்பட்டோம். அது எம்மை விரக்திக்குள் தள்ளிவிட்டிருந்தது. சில சமயங்களில் அனைத்தையும் கைவிடும் எண்ணம் கூடத் தோன்றியது.

எனினும் மீண்டும் விடாமுயற்சியாகத் தொடர்ந்தோம். படப்பிடிப்பு நடக்கும் போதே படத்தொகுப்பு, இசைச் சேர்ப்பு விடயங்களில் உள்ள தொழிநுட்பச் சவால்கள் பற்றிய கவலைகளும் தொடர்ந்து வந்தன.

ஒருவாறாகப் படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்த சவாலுக்கு முகம் கொடுக்கத் தயாரானோம்.

அவை அடுத்த பதிவில்.

இயக்குனர் ந. கேசவராஜன், ஈழத்தின் குறிப்பிடத்தக்க திரைப்படைப்பாளி. 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More