திருமணத்திற்காக மும்பையில் இருந்து புறப்பட்ட நடிகை கத்ரீனா கைப்!

மும்பை,
இந்தி திரைப்பட நடிகை கத்ரீனா கைப் மற்றும் விக்கி கவுசால் இடையே திருமணம் நடைபெற முடிவானது. இதுபற்றிய தகவல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. கத்ரீனா தன்னை விட 5 வயது இளையவரான விக்கி கவுசாலை மணக்கிறார். இவர்களது திருமணம், ராஜஸ்தானில் உள்ள 700 வருட பழமையான சிக்ஸ் சென்ஸ் கோட்டையில் நடைபெறுகிறது.

அந்த கோட்டை கோடிக்கணக்கான செலவில், மலர்கள், வண்ண விளக்குகள் மற்றும் வரவேற்பு வளைவுகளால் அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. திருமணத்துக்கு நெருங்கிய உறவினர்கள், நடிகர், நடிகைகள் அழைக்கப்பட்டு உள்ளனர். திருமணத்துக்காக மணமக்கள் தங்கும் சொகுசு விடுதியின் ஒரு நாள் வாடகை ரூ.4 லட்சம். மேலும் உறவினர்கள், நடிகர் நடிகைகள் தங்க அங்குள்ள ஆடம்பர ஓட்டல்களின் அனைத்து அறைகளையும் முன்பதிவு செய்துள்ளனர்.

திருமணத்திற்காக நடிகை கத்ரீனா கைப் மராட்டியத்தின் மும்பை நகரத்தில் இருந்து இன்றிரவு புறப்பட்டு ராஜஸ்தானின் சாவோய் மாதாப்பூர் நகருக்கு செல்கிறார். மஞ்சள் உடையில் முழுக்கை சட்டை அணிந்தபடி, ரசிகர்கள் மற்றும் ஊடக நபர்களை நோக்கி புன்னகைத்தபடி கையசைத்து சென்று காரில் அமர்ந்துள்ளார்.

அவரை தொடர்ந்து, கத்ரீனாவின் தாயார் சூசன் டர்கிட் எளிமையாக மஞ்சள் உடையணிந்தபடி அவருடன் புறப்பட்டு சென்றுள்ளார். இதேபோன்று, கலீனா விமான நிலையத்தில் விக்கி கவுசால் காணப்பட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த திருமணத்தில் 120 பேர் கலந்து கொள்கின்றனர். அதற்கான இறுதி பட்டியல் முடிவாகி உள்ளது. அவர்களில் இயக்குனர் ஆனந்த் திவாரி, தயாரிப்பாளர் அம்ரீத்பால் சிங் உள்ளிட்டோரும் அடங்குவார்கள்.

ஆசிரியர்