தனுஷின் 3 படத்தில் காமெடி நண்பன் கதாபாத்திரத்தில் நடித்த சிவகார்த்திகேயன் மெரினா படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். 2012ம் ஆண்டு இந்த இரு படங்களும் வெளியான நிலையில், பத்து ஆண்டுகளில் சினிமாவில் பல படிகள் உயர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன்.
கலக்கப் போவது யாரு விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு காமெடி நிகழ்ச்சியில் காமெடியனாக கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் தொகுப்பாளராக மாறினார். அது இது எது, விஜய் அவார்ட்ஸ் என ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை தனது காமெடியுடன் கலந்து தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியிலும் பிரபலங்கள் மத்தியிலும் தனக்கான ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.
ஏகன், தனுஷின் 3 சினிமாவில் நடிகராக வேண்டும் என்கிற முயற்சியில் தொடர்ந்து செயல்பட்டு வந்த சிவகார்த்திகேயன் அஜித்தின் ஏகன் படத்தில் அன்கிரெடிட் ரோலில் நடித்து இருப்பார். அது தான் சினிமாவில் அவரது முதல் என்ட்ரி. அதன் பின்னர் தனுஷின் 3 படத்தில் அவருடைய பள்ளிப் பருவ நண்பனாக நடித்திருப்பார். அந்த படம் கடந்த 2012ம் ஆண்டு வெளியானது.
மெரினாவில் அறிமுகம் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி வெளியான படம் மெரினா. அந்த படத்தில் நாயகனாக அறிமுகமானார் சிவகார்த்திகேயன். அவருக்கு ஜோடியாக ஓவியா நடித்திருந்தார். இயக்குநர் பாண்டிராஜ் மெரினாவில் குழந்தை தொழிலாளர்கள் படும் அவதிகளையும் மெரினாவின் இருட்டுப் பக்கத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பார்.
ஹாட்ரிக் வெற்றி அதே ஆண்டு வெளியான மனங்கொத்தி பறவை திரைப்படமும் சிவகார்த்திகேயனுக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. பின்னர் 2013ம் ஆண்டு தனுஷ் தயாரிப்பில் வெளியான எதிர்நீச்சல், பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா மற்றும் பொன்ராம் இயக்கத்தில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என 3 படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்று கோலிவுட்டின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக சிவகார்த்திகேயனை மாற்றியது.
சறுக்கலும் சர்ச்சையும் ஹாட்ரிக் ஹிட் அடித்த நிலையில், 2014ம் ஆண்டு வெளியான மான் கராத்தே திரைப்படம் கலவையான விமர்சனங்களுடன் சறுக்கலை சந்தித்தது. மீண்டும் தனுஷ் தயாரிப்பில் வெளியான காக்கி சட்டை திரைப்படம் சொதப்பிய நிலையில், நடிகர் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இடையே சர்ச்சைகள் வெடித்தன. அதன் பின்னர் தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவில்லை.
கைகொடுத்த ரஜினிமுருகன் 2016ம் ஆண்டு மீண்டும் இயக்குநர் பொன்ராம் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில் வெளியான ரஜினிமுருகன் படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷ் அதே ஆண்டு வெளியான ரெமோ படத்திலும் சிவகார்த்திகேயன் உடன் ஜோடி சேர்ந்து நடித்தார். ரெமோ படத்திற்கு வந்த எதிர்மறையான விமர்சனங்கள் மீண்டும் சிவகார்த்திகேயன் வளர்ச்சியை சற்றே சறுக்கியது.
ஜோடியான நயன்தாரா இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தில் ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்தார். வில்லனாக பகத் ஃபாசில் நடித்தார். ஆனால், அந்த படமும் கலவையான விமர்சனங்களை சந்திக்க மீண்டும் பொன்ராம் கூட்டணியை நம்பிய சிவகார்த்திகேயனுக்கு இந்த முறை சீமராஜா படம் மூலம் ஏமாற்றமே மிஞ்சியது.
தயாரிப்பாளர் அவதாரம் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் முதல் படமாக தனது நண்பர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான கனா படத்தை தயாரித்து வெற்றிக் கண்டார். ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் நடிப்பில் உருவான அந்த படத்தில் நெல்சன் திலீப்குமார் கதாபாத்திரத்தில் கிளைமேக்ஸ் நெருக்கத்தில் வந்து கலக்கி இருப்பார் சிவகார்த்திகேயன்.
நூறு கோடி நாயகன் மற்ற முன்னணி நடிகர்களை போலவே சிவகார்த்திகேயனும் சினிமாவில் நிறைய அப்ஸ் அண்ட் டவுன்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார். ஒரு படம் ஹிட் அடித்தால் ஒரு படம் சொதப்பிவிடும் என்பதை போலவே அவரது சினிமா கிராஃப் செல்ல துவங்கியது. மிஸ்டர் லோக்கல் ஃபிளாப் ஆன நிலையில், நம்ம வீட்டுப் பிள்ளை கைகொடுத்தது. அடுத்தது ஹீரோ சொதப்பியது. இந்நிலையில், கடந்த ஆண்டு வெளியான டான் திரைப்படம் வித்தியாசமான சிவகார்த்திகேயனை ரசிகர்களுக்கு காட்டி 100 கோடி வசூலை அள்ளியது.
10 ஆண்டுகால அசுர வளர்ச்சி சிவகார்த்திகேயனுக்கு முன்பாக தமிழ் சினிமாவில் அறிமுகமான பல இளம் நடிகர்கள் இன்று அட்ரஸே இல்லாமல் போய் விட்டனர். சிவகார்த்திகேயனுக்கு பின் வந்தவர்களும் அவ்வளவாக பெரிதாக சோபிக்கவில்லை. இந்த பத்து ஆண்டுகளில் கோலிவுட்டின் வசூல் டானாக மாறியுள்ள சிவகார்த்திகேயன் தனது சிங்க பாதையில் வெற்றிநடை போட்டு வருகிறார்.
நன்றி : tamil.filmibeat.com