Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா இந்திய சினிமாவில் கமல்ஹாசன் ஒரு சகாப்தம் | சிறப்பு கட்டுரை

இந்திய சினிமாவில் கமல்ஹாசன் ஒரு சகாப்தம் | சிறப்பு கட்டுரை

6 minutes read

உலகநாயகன் கமல்ஹாசன் பற்றிய அறிய தகவல்களை இங்கு காண்போம்.

கமல் – இந்த மூன்றெழுத்துப் பெயருக்கு பின்னால் தான் எத்துனை விஷயங்கள் உள்ளன. ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, நடன இயக்குனராக பொருப்பேற்று, துனை நடிகராகி, கதா நாயகனாக பதவி உயர்வு பெற்று இன்று உலக நாயகனாக இருக்கிறார்.

படிப்படியான அவரது கடினமான உழைப்பை சினிமா துறையினர் மட்டுமின்றி அனைவராலும் உணர முடிகிறது. தனக்கு நன்கு தெரிந்த நடிப்புத் தொழிலில் கவனம் செலுத்துபவர். தயாரிபாளர்களின் பணத்தை தண்ணீராய் செலவழிக்கும் நடிகர்களிடையே தனது சோதனை முயற்சிகளையெல்லாம் தனது சொந்த செலவிலேயே செய்பவர்.

தான் சம்பாதித்த பணம் அனைத்தையும் சினிமாவிலேயே முதலீடு செய்பவர். சினிமாவில் மட்டுமில்லாமல் வெளி உலகிலும் உத்தமர் வேஷம் போடும் நடிகர்களிடையே வெளி வேஷம் போடத் தெரியாத நடிகர். தான் இப்படித்தான் என்று நேர்மையாக உரைக்கும் தீரம் கொண்டவர். இப்படி பல அவரை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

சினிமாவுக்கு வந்து சம்பாதித்துவிட்டு ஒரு குறிப்பிட்ட காலங்களுக்கு பின் அந்த பணத்தை வேறு தொழிலில் அல்லது அரசியலுக்கு செல்லும் காலகட்டத்தில் கமல்ஹாசன் அவர்கள் சிறுவயது முதல் இப்போது வரை தனது சம்பாதியத்தை முழுக்க முழுக்க சினிமாவிலேயே முதலீடு செய்வது சினிமாவுக்கே அவர் தன்னை அர்ப்பணித்து கொண்டதையே நிரூபணம் செய்கிறது.

‘விஸ்வரூபம்’ பட ரிலீஸ் பிரச்சனையின் போது தனது வீடு முதல் தனது முழு சொத்துக்களையும் இழக்க அவர் முன்வந்ததே இதற்கு சரியான உதாரணம் ஆகும். அத்தகைய மாபெரும் கலைஞனை இந்த பிறந்த நாளில் வாழ்த்துவதில் பெருமை அடைகிறோம்.

‘களத்தூர் கண்ணம்மா’ என்ற படத்திற்காக ஏ.வி.மெய்யப்பசெட்டியார் கண்டெடுத்த முத்துதான் இந்த கமல்ஹாசன். உண்மையில் ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் நடிக்க வேறொரு குழந்தையை அட்வான்ஸ் கொடுத்து படக்குழுவினர் ஒப்பந்தம் செய்துவிட்டனர்.

அந்த நேரத்தில் தற்செயலாக கமல்ஹாசனை பார்த்த அவர் அந்த குழந்தையை விட இந்தப் பையன் பிரஷ்ஷா, பிரைட்டா இருக்கான்.


இவனை இந்தப் படத்துல போட்டா பெட்டரா இருக்கும். இவன் பின்னாடி பெரிய ஆளா வருவான்` என்று கூறினாராம். அவரது கணிப்பு மிகச்சரியானது என்பது இப்போது அனைவருக்கும் புரிந்திருக்கும்.

கமல் ஒரு தீர்க்கதரிசி என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. கடந்த 2004ஆம் ஆண்டுதான் சென்னை உள்பட இந்திய மக்களுக்கு சுனாமி என்றால் என்ன என்பது தெரியும். ஆனால் 2003ஆம் ஆண்டிலேயே சுனாமி குறித்து தனது அன்பே சிவம்’ படத்தில் விளக்கியிருந்தார் கமல்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் ஒருசில பைனான்ஸ் கம்பெனி நிறுவனங்களின் முறைகேடுகள் வெட்ட வெளிச்சமாகியது.


ஆனால் கமல்ஹாசன் கடந்த 1993ஆம் ஆண்டிலேயே ‘மகாநதி’ படத்தின் மூலம் இந்த முறைகேடு குறித்த விழிப்புணர்வை தனது படத்தில் தெளிவாக விளக்கியிருந்தார்.

தசாவதாரம் படத்தில் வரும் எபோலா வைரஸ், விக்ரம் படத்தில் வரும் தலிபான்கள், விஸ்வரூபம் படத்தில் வரும் பறவைகள் ஆயுதம் ஆகியவை கமல்ஹாசனின் பிற தீர்க்கதரிச தகவல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு படம் அதிக நாட்கள் ஓடி சாதனை செய்வதை விட அதிக திரையரங்குகளில் வெளியிட்டு வசூலை எடுத்துவிட வேண்டும் என்ற முறையை அறிமுகப்படுத்தியதே கமல்தான். அவர் நடித்த ‘ஆளவந்தான்’ திரைப்படம் முதன்முதலாக 610 பிரிண்ட் போடப்பட்டது.

இந்திய சினிமா வரலாற்றில் ஒரு திரைப்படத்திற்கு அதிக பிரிண்ட் போட்டது இந்த படத்திற்காகத்தான். இந்த படம் வெற்றி பெறவில்லை என்றாலும் ஓடும் நாட்கள் முக்கியமில்லை வசூல் தான் முக்கியம் என்று கமல் கூறிய நடைமுறைதான் இப்போது அனைவராலும் பின்பற்றப்படுகிறது.

கமல்ஹாசன் ஒரு சிறந்த நடிகராக இருந்தபோதும் தன்னுடைய தயாரிப்பில் பிற நாயகர்களை நடிக்க வைத்து அழகு பார்த்த நிகழ்ச்சிகளும் உண்டு.

சத்யராஜ் நடித்த கடமை கண்னியம் கட்டுப்பாடு, நாசர் நடித்த மகளிர் மட்டும், மாதவன் நடித்த ‘நள தமயந்தி’ போன்ற படங்கள் கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இருந்து ஆஸ்காருக்கு சென்ற படங்களில் கமல்ஹாசன் நடித்த படங்கள் தான் அதிகம்.

இதுவரை கமல்ஹாசன் நடித்த ஏழு படங்கள் ஆஸ்காருக்கு சென்றுள்ளது. சாகர், சுவாதி முத்யம், நாயகன், தேவர் மகன், குருதிப்புனல், இந்தியன், ஹே ராம் ஆகிய படங்கள் ஆஸ்காருக்கு சென்றுள்ளன.

இந்தியாவில் மூன்று முறை தேசிய விருதினை பெற்ற முதல் நடிகர் கமல்ஹாசன் தான். மூன்றாம் பிறை’, ‘நாயகன்’, ‘இந்தியன்’ ஆகிய படங்கள் அவருக்கு தேசிய விருதை பெற்று கொடுத்தன.

குழந்தை நட்சத்திரமாக நடித்த ‘பார்த்தால் பசிதீரும்’ முதல் ‘ஆளவந்தான்’ வரை கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் 21 படங்கள் நடித்துள்ளார்.

அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் மூன்று வேடங்களும், ‘மைக்கேல் மதனகாமராஜன் படத்தில் நான்கு வேடங்களும், தசாவதாராம்’ படத்தில் பத்து வேடங்களிலும் நடித்துள்ளார்.


இதுவரை தமிழ் சினிமாவில் நவராத்திரி’ படத்தில் சிவாஜி கணேசன் ஒன்பது வேடங்களில் நடித்ததுவே அதிக வேடங்களாக இருந்தது.

கமல்ஹாசன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்பட கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் நடித்துள்ளார். மொழியே இல்லாமல் அதாவது வசனமே இல்லாமல் அவர் நடித்த படம் ‘பேசும் படம்’.

ஒரே ஆண்டில் அதிக படங்கள் ரிலீஸ் செய்தவர் என்ற சாதனை கமல்ஹாசனுக்குத்தான் சொந்தமானது. கடந்த 1977ஆம் ஆண்டு கமல் நடித்த 19 படங்கள் வெளியானது. இவற்றில் பாரதிராஜாவின் ’16 வயதினிலே’ படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டெடி கேமிராவினால் முதலில் எடுக்கப்பட்ட படம் குணா. அதேபோல் DTSஐ கோலிவுட்டுக்கு அறிமுகப்படுத்திய படம் ‘குருதிப்புனல்’ மேலும் முதன்முதலில் ஹங்கேரி சென்று பின்னணி இசை அமைக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் ஹேராம்.

கமல்ஹாசன் சிறந்த நடிகர் மட்டுமல்ல. திரையுலகின் அனைத்து பிரிவுகளிலும் முத்திரை பதித்தவர்.

திரைத்துறையின் அனைத்து வி‌ஷயங்களையும் அவர் தனது கைவிரல் நுனியில் வைத்திருக்கும் வகையில் நுணுக்கமாக அறிந்து வைத்துள்ளார்.

மிகச்சிறந்த நடன கலைஞர், பின்னணி பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர், தொழில்நுட்ப கலைஞர், ஒப்பனை கலைஞர் என்று பல அவதாரங்களை அவர் எடுத்துள்ளார்.

வேடங்களில் தனித்துவத்தை காட்டுவதற்காக அமெரிக்கா சென்று மேக்கப் துறையில் படித்து வந்தார். இதனால் மேக்கப்பின் அனைத்து அம்சங்களும் அத்துபடியாகும்.

பொதுவாக நடிகர்-நடிகைகளுக்கு இரண்டு அல்லது மூன்று மொழிகள் தெரிந்து இருக்கும். ஆனால் கமல்ஹாசனுக்கு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய 6 மொழிகளில் சரளமாக பேச தெரியும்.

இதில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய 5 மொழிகளில் அவர் நடித்த படங்கள் வெளியாகி வெள்ளி விழாக்கள் கொண்டாடி உள்ளன.

இந்திய நடிகர்களில் யார் படமும் இப்படி 5 மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றது இல்லை. அந்த வகையில் கமல்ஹாசனின் சாதனை இதுவரை எந்த நடிகராலும் முறியடிக்க முடியாத தேசிய சாதனையாக உள்ளது.

நன்றி : in4net.com

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More