திரையுலகில் அறிமுகமாகி இரண்டு தசாப்தங்களை நிறைவு செய்திருக்கும் இயக்குநரும், நடிகருமான அமீர், நடிப்பில் தயாராகி, விரைவில் வெளியாக இருக்கும் ‘உயிர் தமிழுக்கு’ எனும் படத்தில், அவர் ஆளும் கட்சியை சேர்ந்த அரசியல்வாதியாக நடித்திருக்கிறார் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
‘ஆன்ட்டி இந்தியன்’ எனும் திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ஆதம் பாவா இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் திரைப்படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்தப் படத்தில் அமீர் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சாந்தினி தமிழரசன் நடித்திருக்கிறார்.
இவர்களுடன் இயக்குநர்கள் ராஜ்கபூர், சரவண சக்தி, மாரிமுத்து, நடிகர் இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தேவராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘மெலோடி கிங்’ வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார்.
பால முரளி வர்மன் மற்றும் அஜயன் பாலா இருவரும் இணைந்து வசனம் எழுதி இருக்கும் இந்த திரைப்படத்தை மூன் பிக்சர்ஸ் எனும் நிறுவனம் சார்பில் இயக்குநர் ஆதம்பாவா தயாரித்திருக்கிறார்.
படத்தைப் பற்றி கதையின் நாயகனான அமீர் பேசுகையில், ” இந்த படத்தின் மூல கதையை முதலில் சந்திரன் எனும் இயக்குநர் எம்மிடம் தெரிவித்தார். கணவன் – மனைவி என இருவரும் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுகிறார்கள். ஏன்? என்பதன் சுவாரசியமான பின்னணியை விவரித்தார். இது எமக்கு பிடித்திருந்தால் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
பிறகு இரண்டு முறை இப்படத்தின் தலைப்பு மாற்றப்பட்டது. தயாரிப்பாளர் ஆதம்பாவா இப்படத்தின் கதையின் மீது வைத்த நம்பிக்கையின் காரணமாக தடைகள் பல ஏற்பட்டாலும், இறுதியில் அவரே இந்த படத்தை இயக்கி வெளியிடுகிறார்.
இதனை எம்முடைய நண்பரான தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிடுகிறார் என்பதால், இப்படத்திற்கு ‘உயிர் தமிழுக்கு’ என நான் இயக்குவதற்காக வைத்திருந்த தலைப்பை வழங்கி விட்டேன். காலத்தின் கட்டாயம் கருதியும், தற்போது தமிழக அரசியல் சூழல் கருதியும் இந்த தலைப்பு பொருத்தமாக இருக்கும் என அவதானித்து பெயரிட்டிருக்கிறோம்.
படத்தில் மொழி பிரச்சனையை பற்றி பேசவில்லை. ஆனால் தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை பேசியிருக்கிறோம். நான் ஆளும் கட்சியை சேர்ந்த அரசியல்வாதியாக நடித்திருக்கிறேன். எம்முடைய கிராம மக்களுக்கு சேவை செய்வதற்காக உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுகிறேன்.
எனக்கு எதிராக என்னுடைய மனைவி போட்டியிடுகிறார். அவர் ஏன் எனக்கு எதிராக போட்டியிடுகிறார்? அவர் வென்றாரா? அல்லது நான் வென்றேனா? என்பதனை இயக்குநர் சுவாரசியமாக சொல்லி இருக்கிறார்.” என்றார்.
கணவன் – மனைவி என இருவரும் அரசியலில் ஈடுபட்டிருப்பதால் ‘உயிர் தமிழுக்கு’ குடும்ப அரசியல் பேசும் படமாக இருக்கும் என்றும், இது தற்போதைய சூழலில் குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்கும் தருணத்தில் வெளியாக இருப்பதால் ‘உயிர் தமிழுக்கு’ கவனிக்கப்படும் படைப்பாக இருக்கும் என திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள்.