நடிகர் சிலம்பரசன் நடிப்பில் தயாராகி இம்மாதம் 30ஆம் திகதி வெளியாகவிருக்கும் ‘பத்து தல’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியான 24 மணித்தியாலங்களில் 14 மில்லியன்களுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்து வருகிறது.
ஸ்டுடியோ கிரீன் எனும் பட நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், என். கிருஷ்ணா இயக்கத்தில், சிலம்பரசன் நடிப்பில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘பத்து தல’.
இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கிறார்கள். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா நேற்று முன்தினம் (18) மாலை சென்னை நேரு உள்ளக விளையாட்டரங்கில் ஆயிரக்கணக்கான சிலம்பரசனின் ரசிகர்களின் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இவ்விழாவில் வழக்கம் போல் தாமதமாக வருகை தந்து பங்குபற்றிய சிலம்பரசன் பேசுகையில்,
”என்னை நேசிக்கும் ரசிகர்களை முதன்முறையாக இங்கு பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு சினிமா வேண்டாம், ஆன்மிகத்தின் பக்கம் போகலாம் என்று மன அமைதியுடன் வீட்டில் இருந்தேன். அந்த தருணத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா என்னை அழைத்து, கன்னடத்தில் வெளியான ‘முஃப்தி’ எனும் படத்தை தமிழில் உருவாக்கலாம். அதில் நீங்கள் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அந்தத் கன்னட திரைப்படத்தில் சுப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் நடித்திருப்பார். அவரை போல் எப்படி நடிக்க முடியும் என யோசித்தேன். பிறகு இந்த திரைப்படத்தை நடிக்க ஒப்புக்கொள்வதற்கு கௌதம் கார்த்திக் தான் காரணம்.
அவர் ஒரு திறமையான நல்ல மனிதர். அவர் இந்த திரைப்படத்துக்காக கடுமையாக உழைத்திருக்கிறார். அவருடைய கடின உழைப்புக்காக இந்த படம் வெற்றியடைய வேண்டும். இந்தத் படத்துக்காக உடல் எடையை அடிக்கடி அதிகரித்தும் குறைத்தும் நடித்திருக்கிறேன்.
இந்தப் படத்தில் எனக்கு துணை கிடையாது. நிஜ வாழ்க்கையிலும் துணை இல்லை. எனக்கு எப்பொழுதும் ரசிகர்கள் தான் துணை. நானும் இயக்குநர் கிருஷ்ணாவும் ‘தம்’ படத்துக்கு பிறகு இணைந்து பணியாற்ற வேண்டிய சூழல் உருவானது. ஆனால், சில காரணங்களால் அது நடைபெறவில்லை. அப்போது அவர் இயக்கியிருந்தால் அவருக்கு ஒரு தலை தான் கிடைத்திருக்கும். ஆனால் இப்பொழுது ‘பத்து தல’ கிடைத்திருக்கிறது” என்றார்.
இதனிடையே சென்னை நேரு உள்ளக விளையாட்டரங்கத்துக்கு மாலை நான்கரை மணி முதல் வரத் தொடங்கிய சிலம்பரசனின் ரசிகர்களிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் ஒருவரும், நடிகருமான வெட்டுக்கிளி பாலா, ரசிகர்களை சந்தித்து, சிலம்பரசனிடம் பிடித்த விடயங்கள் குறித்து கேள்வி கேட்டு பதில் பெற்றமை ரசிகர்களை உற்சாகமடைய செய்தது.
இந்த நிகழ்வுக்கு தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் இலங்கை, மலேசியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தும் சிலம்பரசனின் ரசிகர்கள் பங்குபற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.