செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா பாடகி ஆஷா போஸ்லேவின் சாதனைகள்

பாடகி ஆஷா போஸ்லேவின் சாதனைகள்

5 minutes read

ஆஷா போஸ்லே அவர்கள், ஒரு புகழ்பெற்ற பாலிவுட் இந்திய பின்னணி பாடகியாவார். அவர் இந்தியாவின் ‘இசைக்குயில்’ என போற்றப்படும் லதா மங்கேஷ்கரின் சகோதிரியாவார். இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, பெங்காலி, பஞ்சாபி, மலையாளம், குஜராத்தி போன்ற பதினான்குக்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ளார். அதுமட்டுமல்லாமல், ஆங்கிலம், ரஷ்யன், செக், மலாய் என பல அந்நிய மொழிகளிலும் பாடி இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். இரண்டு தேசிய விருதுகளும், ஒன்பதுக்கும் மேற்பட்ட ஃபிலிம்பேர் விருதுகளும், இந்திய அரசின் உயரிய விருதான “பத்ம விபூஷன்” விருதும், தாதா சாகேப் பால்கே விருதும், மேலும் பல்வேறு விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். கிட்டதட்ட 12000 பாடல்களுக்கு மேல் பாடி சாதனை படைத்த ஆஷா போஸ்லேவின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: செப்டம்பர் 08, 1933

இடம்: கோர் (சாங்க்லி மாவட்டம்) மகாராஸ்டிரா மாநிலம், இந்தியா

பணி: பாடகி

நாட்டுரிமை: இந்தியன்

பாலினம்: பெண்

பிறப்பு:

ஆஷா போஸ்லே அவர்கள், 1933 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 08  ஆம் நாள் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் சாங்க்லி மாவட்டத்திலுள்ள “கோர்” என்ற இடத்தில் தீனநாத் மங்கேஷ்கருக்கு மகளாக ஒரு மராத்தி குடும்பத்தில் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை:

ஆஷா போஸ்லேவிற்கு ஒன்பது வயது இருக்கும்பொழுது, அவரது தந்தை இறந்துவிடவே அவருடைய குடும்பம் புனேவிலிருந்து கோலாப்பூருக்கும், பிறகு மும்பைக்கும் குடிபெயர்ந்தது. பிறகு, அவரும் அவருடைய சகோதரியான லதா மங்கேஷ்கர் அவர்களும் திரைப்படங்களில் பாடத்தொடங்கினார்கள். “சலா சலா நவ பாலா” என்ற மராத்தி மொழிப் பாடலை “மாஜா பால்” என்ற திரைப்படத்திற்க்காக முதல் முதலாக பாடினார். பிறகு, 1948 ஆம் ஆண்டு “சுனரியா” என்ற திரைப்படத்தில் “ஸாவன் ஆயா” என்ற பாடலை பாடி இந்தி திரையுலகிற்கு அறிமுகமானார். அவருக்கு 16 வயது நிரம்பியபொழுது, 31 வயதான கண்பத்ராவ் போஸ்லே என்பவருடன் வீட்டைவிட்டு ஓடிய அவர், பெற்றோர்களின் விருப்பத்திற்கு மாறாக காதல் திருமணமும் செய்துகொண்டார். ஆனால், அவருடைய இல்லற வாழ்க்கையில் பல பிரசசனைகளை சந்தித்தது மட்டுமல்லாமல் அவரது கணவர் அவர் மீது சந்தேகப்பட்டு வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார். வயிற்றில் குழந்தையுடன் இருந்த ஆஷா போஸ்லே தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் மீண்டும் தன் தாய் வீட்டிற்கே வந்து சேர்ந்தார்.

ஆஷா போஸ்லேவின் இசை பயணம்:

தன்னுடைய குழந்தைகளை வழிநடுத்துவதற்காக, தொடர்ந்து பாட தொடங்கிய ஆஷா போஸ்லேவிற்கு ஆரம்பத்தில் அவர் பாடிய பாடல்கள் மக்களிடம் செல்வாக்கைப் பெற்றுத் தரவில்லை. 1952 ஆம் ஆண்டு “சஜ்ஜத் ஹூசையின்” இசையமைத்த “சங்தில்” என்ற திரைப்படத்தில் ஒரு பாடலை பாடினார். அந்த பாடல், அவருக்கு நல்ல பெயரை பெற்றுதந்தது மட்டுமல்லாமல், நிறைய வாய்ப்புகளும் அவரைத் தேடி வந்தது. தொடர்ந்து பாடத்தொடங்கிய அவர், 1966 ஆம் ஆண்டு ஆர். டி. பர்மன் இசையமைத்த “தீஸ்ரி மஞ்சில்” என்ற திரைப்படத்திற்காக “காதல் உறழ்” என்ற பாடலைப் பாடினார். பிறகு, இவர்கள் இருவரும் சேர்ந்து பல வெற்றிப் பாடல்களை கொடுத்தது மட்டுமல்லாமல், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு திருமணமும் செய்துகொண்டனர்.

ஆஷா போஸ்லேவின் வெற்றி பயணம்:

1970 ஆம் ஆண்டுக்கு பிறகு, அவர் பாடிய பல பாடல்கள் அவரை வெற்றியின் உச்சிக்கே கொண்டுசென்றது எனலாம்.

இசையமைப்பாளர் ஒ.பி. நய்யார், கய்யாம், ரவி, புகழ்பெற்ற இசையமைப்பாளர் சச்சின் தேவ் பர்மன், ராம் தேவ் பர்மன், இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், ஜெயதேவ், ஷங்கர் ஜெய்கிஷன், அனு மாலிக், மதன் மோகன், லஷ்மிகாந்த் ப்யாரேலால், நௌஷாத், ரவீந்திர ஜெயின், என் தத்தா, ஹேமந்த் குமார், ஜதின் லலித், பப்பி லஹிரி, கல்யாண்ஜி, உஷா கன்னா, சித்திரகுப்த், ரோஷன் போன்ற இசையமைப்பாளர்களுடன் இணைந்து பல வெற்றிப் பட பாடல்களை கொடுத்தார்.

‘பியா தூ அப் தொ ஆஜா’, ‘ஹஸீனா ஜூல்போன் வாலி’, ‘யே மேரா தில்’, ‘ஆப் கே பரஸ்’, ‘ராத் அகேலி ஹை’, ‘சாந்தமான தூர்’ (வசன, 1955),  ‘ஆயியே மேஹர்பான்’ (ஹௌரா பிரிட்ஜ் 1958),  ‘யேஹ் ஹை ரேஷ்மி’ (மேரே சனம் 1965),   ‘பர்தே மெய்ன் ரஹ்னே தோ’ (ஷிகார் 1968),   ‘உடே ஜப் ஜப்’ (நயா தௌர் 1957) , ‘ ஒ மரியா’ என்ற பாடல் (சாகர்),  ‘தம் மாரோ தம்’ (ஹரே ராமா ஹரே கிருஸ்ணா 1971), ‘துனியா மெய்ன்’ (அப்னா தோஷ் 1972),  ‘ சுரா லியா ஹை தும்னே’ (யாதோன் கி பாராத் 1973),  ‘ கிதபைன் பஹீத் சி’ (பாஜிகர்), ‘பில்ஹால்’ (பில்ஹால்), ‘ ஜாயியே ஆப் கஹான்’ (மேரே சனம்),   ‘ஆவோ ஹீஜூர் தும்கோ’ (கிஸ்மத்) போன்றவை ஆஷா போஸ்லேவின் புகழ்பெற்ற பாடல்கள் ஆகும். மேலும், ‘நயா தௌர்’ (1957),  ‘வக்த்’, ‘கும்ராஹ்’, ‘சைனா டவுன்’, ‘ஆத்மி அவுர் இன்சான்’, ‘காஜல்’, ‘காலா பானி’, ‘காலா பாஜார்’, ‘லாஜ் வந்தி’, ‘தீன் தேவியான்’,  ‘மேரா நாம் ஜோகர்’, ‘சாரங்கா’, ‘உம்ராவ் ஜான்’ (1981),  ‘இஜாசத்’ (1987), ‘ரங்கீலா’ (1995), போன்ற பல  திரைப்படங்களில் வெற்றிப் பாடல்களை தந்துள்ளார்.

தேசிய விருதுகள்:

1981 ஆம் ஆண்டு “உம்ராவ் ஜான்” என்ற திரைப்படத்தில் “தில் சீஜ் க்யா ஹை” என்ற பாடலுக்காகவும் மற்றும் 1986 ஆம் ஆண்டு “இஜாசத்” என்ற திரைப்படத்தில் “மேரா குச் சாமன்” என்ற பாடலுக்காவும் சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய திரைப்பட விருது வழங்கப்பட்டது.

பிறமொழி பாடல்கள்:

தமிழில் பாடிய ‘ஒ! பட்டர்ஃபளை பட்டர்ஃபளை’ பாடல் தமிழ் இசை ரசிகர்களால் மிகவும் கவர்ந்த பாடலாக அமைந்தது எனலாம். மேலும் ‘சந்திரமுகி’, ‘இருவர்’, ‘மூன்றாம் பிறை’, ‘எங்க ஊர் பாட்டுக்காரன்’, ‘ஹே ராம்’ போன்ற தமிழ் திரைப்படங்களிலும், ‘ருபேரி வாலுத்’ ‘தருண் ஆஹே ராத்ரா ஆஜூனி’, போன்ற மராத்திய மொழி பாடல்களும் மற்றும் தெலுங்கு, பெங்காலி, பஞ்சாபி, மலையாளம், குஜராத்தி என பதினான்குக்கும் மேற்பட்ட மொழிகளில் பாடி சாதனைப் படைத்துள்ளார்.

பிறப் படைப்புகள்:

போப் இசைப் பாடல்கள், கஜல் வழிப்பாடல், பஜனைப்பாடல், பாரம்பரிய இந்திய மரபார்ந்த இசைப் பாடல்கள், நாட்டுப் பாடல்கள் என அனைத்திலும் தன்னுடைய இனிமையான குரலால் ரசிகர்களை வசப்படுத்திய ஆஷா போஸ்லே அவர்கள், தனிப்பட்ட முறையில் சில தொகுப்புகளை வெளியிட்டார். 1990 ஆம் ஆண்டு ‘ராகுல் அண்ட் ஐ’ என்ற தொகுப்பையும், 1997ல், ‘ஜானம் சம்ஜா கரோ’ என்ற தொகுப்பையும், 2002ல், ‘ஆப் கி ஆஷா’ என்ற தொகுப்பையும், இந்திய பாரம்பரிய இசையில் உருவான ‘பர்சே பாதல்’ என்ற தொகுப்பையும், 2005ல், ‘ஆஷா’ என்ற தொகுப்பையும், 2006ல், ‘ஆஷா அண்ட் ஃபிரெண்ட்ஸ்’ என மேலும் பல தொகுப்புகளையும் வெளியிட்டார். இந்த தொகுப்புகள், மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல், அவர் பாடிய பல இசைத்தட்டுகள் அதிக அளவில் விற்பனையாகியது. மேலும், கனடா, துபாய், அமெரிக்கா, பிரிட்டிஷ்,     போன்ற வெளிநாட்டு இசை கலைஞர்களுடன் இணைந்து பல இசை நிகழ்சிகளையும் நடத்தியுள்ளார்.

விருதுகளும் அங்கீகாரங்களும்:

  • 1981 ஆம் ஆண்டு “உம்ராவ் ஜான்” என்ற திரைப்படத்தில் “தில் சீஜ் க்யா ஹை” என்ற பாடலுக்காக தேசிய விருது வழங்கப்பட்டது.
  • 1986 ஆம் ஆண்டு “இஜாசத்” என்ற திரைப்படத்தில் “மேரா குச் சாமன்” என்ற பாடலுக்காக தேசிய விருது வழங்கப்பட்டது.
  • 1968 ஆம் ஆண்டு “கரிபோன் கி சுனோ” (தஸ் லாக் 1966), 1969 ஆம் ஆண்டு, ‘பர்தே மெய்ன் ரஹ்னே தோ’ (ஷிகார் 1968),  1972 ஆம் ஆண்டு, ‘பியா தூ அப் தொ ஆஜா’ (காரவான் 1971), 1973 ஆம் ஆண்டு, ‘தம் மாரோ தம்’ (ஹரே ராமா ஹரே கிருஷ்ணா 1972),  1974 ஆம் ஆண்டு, ‘ஹோனே லகி ஹைன் ராத்’ (நைனா 1973), 1975 ஆம் ஆண்டு, ‘சயன் சே ஹம்கோ கபி’ (பிரான் ஜாயே பர் வசன் ந ஜாயே 1974),  1979 ஆம் ஆண்டு, ‘யெஹ் மேரா தில்’ (டான் 1978) போன்ற திரைப்பட பாடலுக்காக ஃபிலிம்பேர் விருது வழங்கப்பட்டது.
  • 1987 ஆம் ஆண்டு ‘நைடிங்கேல் ஆஃப் ஆசியா’ விருது வழங்கப்பட்டது.
  • 1989 மற்றும் 1999 ஆம் ஆண்டுக்கான ‘லதா மங்கேஷ்கர் விருது’ வழங்கப்பட்டது.
  • 2008 ஆம் ஆண்டு ‘வாழ்நாள் சாதனையாளருக்கான ஃபிலிம்பேர் விருது’ வழங்கப்பட்டது.
  • 1997 ஆம் ஆண்டு ‘ஸ்க்ரீன் வீடியோகான் விருது’ வழங்கப்பட்டது.
  • 1997  மற்றும் 2001 ஆம் ஆண்டுக்கான ‘எம் டி.வி விருது’ வழங்கப்பட்டது.
  • 1997 ஆம் ஆண்டு ‘சேனல் வி விருது’ வழங்கப்பட்டது.
  • 1998 ஆம் ஆண்டு ‘தயாவதி மோடி விருது’ வழங்கப்பட்டது.
  • 2000 ஆம் ஆண்டு “மில்லேனியம் சிங்கர்” மற்றும் “ஜீ கோல்ட் பாலிவுட்” விருது வழங்கப்பட்டது.
  • 2002 ஆம் ஆண்டு ‘பி.பி.சி வாழ்நாள் சாதனையாளர் விருது’, ‘ஜீ டி.வி விருது’, ‘ஸ்க்ரீன் வீடியோகான்’, ‘சான்சுய் திரைப்பட விருது’, ‘ஸ்வராலயா யேசுதாஸ் விருது’ போன்றவை வழங்கப்பட்டது.
  • “லிவிங் லெஜென்ட் விருது” பெடரேஷன் ஆஃப் இந்தியன் சேம்பர் ஆஃப் காம்பெர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி மூலமாக வழங்கப்பட்டது.

மேலும் பல விருதுகளைப் பெற்று சாதனைப் படைத்த ஆஷா போஸ்லே அவர்கள், இசை ஆர்வம் கொண்ட நெஞ்சங்களில் நீங்கா இடம்பெற்று வாழ்ந்து வருகிறார்.

 

நன்றி : itstamil.com

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More