“நீயும் பொம்மை.. நானும் பொம்மை.. நெனச்சுப் பார்த்தா எல்லாம் உண்மை”, “செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என்மீது மோதுதம்மா” , “ஹரிவராசனம்” என இசை பிரியர்களின் காதில் தேனை கடந்த பல ஆண்டுகளாக பாய்த்துக் கொண்டிருப்பவர் தேவக்குரலோன் கே.ஜே. யேசுதாஸ். கண்ணே கலைமானே என தமிழ் ரசிகர்களை தாலாட்டிய கே.ஜே. யேசுதாஸ் கேரள மக்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த ஐயப்ப பக்தர்களுக்கும் ஹரிவராசனம் பாடல் மூலம் ஆன்மிகத்தை அள்ளித் தெளித்துள்ளார்.
1940ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி கொச்சினில் பிறந்த கே.ஜே. யேசுதாஸ் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி அசத்தியுள்ளார். தமிழ், மலையாளம் மட்டுமின்றி ஏகப்பட்ட இந்திய மொழிகளில் தனது காந்தக் குரலை பதிவு செய்துள்ளார். கே.ஜே. யேசுதாஸ் இசைத்துறைக்கும் இசை ரசிகர்களுக்கும் செய்த விஷயங்கள் எல்லாம் அளப்பரியது. இறைவனே இவரது குரலை கேட்டுத் தான் தினமும் மயங்கி நிற்கிறார் என்றால் மனிதர்கள் எல்லாம் எம்மாத்திரம் என இவருக்கு கான கந்தர்வன் என ஏகப்பட்ட பட்டங்களை ரசிகர்களும் அறிஞர்களும் சூட்டி பல விருதுகளையும் வழங்கி உள்ளனர்.
84வது பிறந்தநாளை இன்று குடும்பத்துடன் கொண்டாடி வரும் இவரது சொத்து மதிப்பு குறித்த தகவல்களை இங்கே காணலாம். சொத்து மதிப்பு: கே.ஜே. யேசுதாஸ் 1970ம் ஆண்டு பிரபா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். விஜய் யேசுதாஸ் உள்ளிட்ட 3 குழந்தைகள் இவருக்கு உள்ளனர். மூன்று பேரும் ஒவ்வொரு துறையில் சிறந்து விளங்கி வருகின்றனர்.
விஜய் யேசுதாஸ் பாடகராகவும் நடிகராகவும் வலம் வருகிறார். கொச்சினில் சொந்தமாக யேசுதாஸுக்கு வீடு மற்றும் கார்கள் உள்ளன. ஒட்டுமொத்தமாக 15 கோடி ரூபாய் வரை இவருக்கு சொத்துக்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 8 தேசிய விருதுகள்: சிறந்த பின்னணி இசை பாடகர் என இந்திய அரசு 8 முறை இவருக்கு தேசிய விருது வழங்கி கவுரவித்துள்ளது.
கேரள மாநில அரசு 25 முறை சிறந்த பின்னணி பாடகருக்கான விருதினை இவருக்கு வழங்கி உள்ளது. தமிழ்நாடு அரசு 5 முறை சிறந்த பின்னணி இசை பாடகருக்கான விருதுகளை கே.ஜே. யேசுதாசுக்கு வழங்கி உள்ளது. பத்ம பூஷன், பத்மஸ்ரீ, கலைமாமணி, பத்ம விபூஷன் என அனைத்து அங்கீகாரங்களும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
நன்றி : tamil.filmibeat