‘எக்சன் கிங்’ அர்ஜுன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘விருந்து’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் கண்ணன் தாமரைக்குளம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘விருந்து’ எனும் திரைப்படத்தில் அர்ஜுன், நிக்கி கல்ராணி, பைஜு சந்தோஷ், கிரிஷ் நெய்யார், ஆஷா சரத், அஜு வர்கீஸ், பிரியங்கா ஸ்ரீலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ரவிச்சந்திரன் மற்றும் பிரதீப் நாயர் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரத்தீஷ் வேகா இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராக இருக்கும் இந்த திரைப்படத்தை நெய்யார் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கிரிஷ் நெய்யார் தயாரித்திருக்கிறார்.
தமிழ் மற்றும் மலையாள மொழியில் நேரடியாக தயாராகி இருக்கும் இந்த இந்த திரைப்படம் எதிர்வரும் 29 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் ‘எக்சன் கிங்’ அர்ஜுனின் எக்சன் காட்சிகள் ரசிகர்களுக்கு நிறைவை அளித்திருப்பதால் பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது. .
இதனிடையே நடிகரும், இயக்குநருமான அர்ஜுன் தன்னுடைய மருமகனும், நடிகருமான உமாபதி ராமையா கதையின் நாயகனாக நடிக்க ‘ஏழுமலை’ படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.