செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா தீபாவளி திரைப்படங்கள் – ஓர் பார்வை

தீபாவளி திரைப்படங்கள் – ஓர் பார்வை

3 minutes read

கடந்த தசாப்தங்களில் தீபாவளி, பொங்கல் போன்ற தமிழர்கள் கொண்டாடும் திருவிழாவில் ஒரு பகுதியாக அன்றைய திகதியில் வெளியாகும் புதிய திரைப்படங்களை காண பட மாளிகைக்கு குடும்பத்தினருடன் செல்வது வழமையாக இருந்தது. அது காலங்காலமாக மரபாகவும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

ஆனால் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகவும், பொழுதுபோக்கு ஊடகத்தின் வடிவங்களின் மாற்றத்தின் காரணமாகவும் இன்றைய சூழலில் தீபாவளி, பொங்கல் போன்ற திருவிழா தினத்தன்று குடும்பத்தினருடனும்… நண்பர்களுடனும்… பட மாளிகைக்கு சென்று புதிய படங்களை கொண்டாட்டத்துடன் கண்டு ரசிப்பது என்பது குறைந்து வருகிறது.

மேலும் அன்றைய திகதியில் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் முன்னணி நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாவதும் குறைந்து விட்டது.‌

இருந்தாலும் இந்த தீபாவளிக்கு ரசிகர்களை மகிழ்விக்க நான்கு திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அமரன்’, ஜெயம் ரவி நடிப்பில் தயாராகி இருக்கும் ‘பிரதர்’, மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘லக்கி பாஸ்கர்’, வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திர நடிகரான கவின் நடிப்பில் தயாரான ‘பிளடி பெக்கர்’ ஆகிய நான்கு திரைப்படங்கள் வெளியாகிறது.

அமரன்:

‘உலக நாயகன்’ கமல்ஹாசன் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தை ‘ரங்கூன்’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநரான ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படத்தில் சிவ கார்த்திகேயன் கதையின் நாயகனாகவும், சாய் பல்லவி கதையின் நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள்.‌

இந்திய ராணுவத்தில் தீவிரவாத தடுப்பு பிரிவில் உயர் அதிகாரியாக பணியாற்றி வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறை தழுவி இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது.

இந்த திரைப்படத்தை பார்த்த இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் இயக்குநரையும் ,படக் குழுவினர்களையும் பாராட்டி இருக்கிறார்கள்.

படத்தின் முன்னோட்டம் பாடல் காட்சிகள் ஆகியவையும் இந்த திரைப்படம் உணர்வு பூர்வமான தேசபக்தி படம் என்பது தெரிய வருகிறது. ‘உலகநாயகன்’ கமல்ஹாசனின் தயாரிப்பில் வெளியாவதாலும், சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகி இருப்பதாலும், இந்திய ராணுவத்தில் பணியாற்றிய அதிகாரி ஒருவரின் வீரம் செறிந்த சுயசரிதையை அடிப்படையாகக் கொண்டதாலும் இந்தத் திரைப்படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி இருக்கும் அமரன் திரைப்படம் அவரின் முதல் பான் இந்திய திரைப்படமாகும்.

‘தேசபக்தி உள்ள தமிழனாக இருந்தால்.. இந்தத் திரைப்படத்தை அவசியம் பட மாளிகைக்கு சென்று ரசிக்க வேண்டும்’ என இணையவாசிகள் பரப்புரை மேற்கொண்டு இருப்பதால்.. இந்த திரைப்படம் வணிக ரீதியான வெற்றியை பெரும் என அவதானிக்கப்படுகிறது.

பிரதர் : 

சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கலில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு உற்சாகத்துடன் ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் ‘பிரதர்’.  தமிழ் சினிமாவில் அம்மா – மகன் / தந்தை – மகள் / அண்ணன் – தங்கை ஆகிய உறவுகளுக்கு இடையேயான படைப்புகளுக்கு கிடைத்து வரும் பேராதரவை போல்… அக்கா – தம்பி இடையேயான பாசத்திற்கும் வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் குடும்பத்தினர் அனைவரும் கண்டு ரசிக்கும் வகையில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ‘பிரதர்’.

இதை உறுதிப்படுத்துவது போல் இப்படத்தினை தணிக்கை செய்வதற்காக பார்வையிட்ட தணிக்கை குழுவினர்-  எந்த இடங்களிலும் சிறிய அளவில் கூட வெட்டுகளை வழங்கவில்லை. அனைவரும் கண்டு ரசிக்க கூடிய படைப்பு என கூறி சான்றிதழை வழங்கி பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள். இதனை பட குழுவினர் தங்களது வெற்றியாக கருதி படத்தை.. அனைவரும் குடும்பத்தினருடன் தீபாவளி போன்ற உற்சாகமான திருநாளன்று பட மாளிகைக்கு சென்று ரசித்து கொண்டாட வேண்டிய படம் என குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மக்கா மிஷி..’  எனும் பாடல் இணையத்தில் வெளியாகி ஒரு கோடிக்கும் மேலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருப்பதால்.. படத்தை முதல் நாள் முதல் காட்சியில் சென்று ரசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் ஏற்படுத்தியிருக்கிறது.

இப்படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் எம் .ராஜேஷ், ‘பாஸ் என்ற பாஸ்கரன்’, ‘சிவா மனசுல சக்தி’ போன்ற வெற்றி பெற்ற படத்தை இயக்கிய இயக்குநர் என்பதாலும்.. அவரது இயக்கத்தில் சிறிய இடைவெளிக்குப் பிறகு இந்த திரைப்படம் உருவாகி இருப்பதாலும் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் அதிகமாகவே இருக்கிறது.

பிளடி பெக்கர் :  

‘ஜெயிலர்’ படத்தை இயக்கிய இயக்குநர் நெல்சன் திலீப் குமார் தன்னுடைய உதவியாளர்- இயக்குநர் சிவபாலன் முத்துக்குமாருக்காக தயாரித்திருக்கும் திரைப்படம் தான் ‘பிளடி பெக்கர்’. இந்த திரைப்படத்தில் வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகரான கவின் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் பாடல்கள்- டீசர்- ட்ரெய்லர் – ஸ்னீக் பிக் -ஆகியவை வெளியாகி படத்தை பற்றிய எதிர்பார்ப்பை ஓரளவு ஏற்படுத்தி இருந்தாலும்.. இந்த திரைப்படம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஒரு திரைப்படத்தை நினைவு படுத்துவதால் படம் வெளியாகி ரசிகர்களின் வாய் மொழியிலான பரப்புரைக்கு பிறகுதான் இப்படத்தின் வெற்றி உறுதிப்படுத்தப்படும்.  இருந்தாலும் நெல்சன் திலீப் குமார் – கவின் கூட்டணி, ரசிகர்களின் பல்ஸை சரியாக உணர்ந்து இந்த படத்தை வழங்கி இருப்பார்கள் என்ற நம்பிக்கை திரையுலகினருக்கு இருக்கிறது.

லக்கி பாஸ்கர் : 

மலையாள நடிகராக இருந்தாலும் தமிழில் வெற்றி பெற்ற படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை சம்பாதித்திருக்கும் நட்சத்திர நடிகரான துல்கர் சல்மான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘லக்கி பாஸ்கர்’.  தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் வெங்கி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் நடுத்தர வர்க்கத்து மனிதரின் பொருளாதார தேடல் குறித்த பயணத்தை விவரிப்பதால் சுவராசியமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் கதையின் நாயகன் வில்லத்தனம் செய்வதால் ரசிகர்களால் ரசிக்கப்படும் என்ற நம்பிக்கையும் உண்டாகி இருக்கிறது.‌ துல்கர் சல்மான் உடன் ஏராளமான இளம் ரசிகர்களை சம்பாதித்திருக்கும் நடிகை மீனாட்சி சௌத்ரியும் நடித்திருப்பதால் இதற்கான எதிர்பார்ப்பு அதிகம்.  இந்தப் படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது. இந்தப் படமும் வசூலில் சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More