தனது 16 வயதிலிருந்து நடித்துவரும் ரேவதி தமிழில் பல படங்களில் நடித்து, தனக்கான ஒரு இடத்தைப் பிடித்தவர். குறிப்பாக இவர் நடித்த காதல் படங்கள் பெரிய அளவில் ரசிகர்களைக் கவர்ந்தது.
எண்பதுகளில் இருந்த அனைத்து முன்னணி இயக்குநர்களின் படங்களிலும் நடித்து, நடிப்பின் நாயகியாக வளம்வந்த ரேவதி, இந்தி, மலையாள திரைப்படங்களிலும் நடித்துப் புகழ்பெற்றார். ப்ளஸ் டூ முடித்திருந்த நேரத்தில்தான் ‘மண்வாசனை’ திரைப்படத்தில் நடிப்பதற்காக அவரை அணுகியிருக்கிறார் இயக்குநர் பாரதிராஜா. ‘மண்வாசனை’ படத்தை முடித்ததும், மலையாளத்தில் ‘காற்றத்தே கிளிக்கூடு’ படத்தில் ரேவதி நடித்தார். அந்தப்படமும் பெரும் வெற்றியடைய தமிழ்நாடு, கேரளாவில் வெற்றிகரமான நாயகியாக அவர் மாறினார்.
இதன்பின்னர் ரேவதிக்கு தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வந்துக்கொண்டே இருந்தன. நடிப்பை பற்றி ஒன்றுமே தெரியாமல் சினிமாவிற்குள் நுழைந்து, சில காலங்களில் பெரிய நடிகர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில், அட்டகாசமாக நடித்தார்.
அந்தவகையில், இதுவரை இவர் மௌனராகம், புன்னகை மன்னன், கிழக்கு வாசல், அஞ்சலி, தேவர் மகன், இருவர், பவர் பாண்டி போன்ற பல படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
மணிரத்னம் என்றாலே காதல் காட்சிகள். அதிலும் அந்த காதல் காட்சிகளுக்கு இன்றளவும் பெயர்போனது மௌனராகம். இந்த மௌனராகம் படத்தின்மூலம் இரண்டு ஜோடிகள் மக்கள் மனதில் நிலைத்து நின்றன. ஒன்று கார்த்திக் ரேவதி மற்றொன்று மோகன் ரேவதி.
அப்படியிருக்க, ரேவதி ஒரு பேட்டியில் கார்த்திக்குடன் நடித்ததை குறித்துதான் பேசியுள்ளார்.
“கிழக்கு வாசல், இதயத்தாமரை, மௌனராகம் படங்களின் மூலம் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பரானார் கார்த்தி. ஆனால், இந்த மூன்று படங்களிலும் நாங்கள் அவ்வளவு சண்டைப் போட்டிருப்போம். ஏனெனில், ரிஹர்சலில் செய்வதை, அவர் செய்யவே மாட்டார்.
அதனால், நானும் செய்ய மாட்டேன். பின்னர் இதுவே எங்களுக்குள் ஒரு சவாலாக மாறும். ஒரு படத்தின் performance ல் ஒருவருக்கொருவர் சவால் செய்து நடித்தால், It becomes better. அப்படித்தான் நாங்கள் நடித்தோம்.” என்று கார்த்தியுடன் நடித்த அனுபவம் குறித்து பேசினார்.
ஆனால், தனக்கு கார்த்தியை விட மோகனுடன் நடிக்கும்போதுதான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். மோகனுக்கும் எனக்கும் ஒரு நல்ல கெமிஸ்ட்ரி இருந்தது என்று பேசினார்.
நன்றி : kalkionline.com