Saturday, April 13, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா அரிமாபட்டி சக்திவேல் | திரைவிமர்சனம்

அரிமாபட்டி சக்திவேல் | திரைவிமர்சனம்

2 minutes read

தயாரிப்பு : லைஃப் சைக்கிள் கிரியேஷன்ஸ்

நடிகர்கள் : சார்லி, பவன், மேக்னா எலன், இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ் மற்றும் பலர்.

இயக்கம் : ரமேஷ் கந்தசாமி

மதிப்பீடு : 2.5 / 5

இயக்குநரும், நடிகரும், சமூக சிந்தனையாளருமான கரு. பழனியப்பனின் உதவியாளர் ரமேஷ் கந்தசாமி இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் ‘அரிமாபட்டி சக்திவேல்’ எனும் திரைப்படம், இன்றும் தமிழகத்தின் கிராமம் ஒன்றில் நடைபெறும் உண்மை சம்பவங்களை தழுவி உருவாகி இருக்கிறது. சாதிய ஒடுக்குமுறைகளை உரத்து பேசும் இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

அரிமாபட்டி எனும் சிறிய கிராமம் ஒன்று தமிழகத்தின் முக்கிய மாநகரமான திருச்சிக்கு அருகே அமைந்திருக்கிறது. சில நூறு குடும்பங்கள் வாழும் இந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் சாதி மறுப்பு திருமணத்தையோ… கலப்பு திருமணத்தையோ ஆதரிப்பதில்லை. அதையும் மீறி திருமணம் செய்து கொள்பவர்களை.. தங்கள் கிராமத்திற்குள் அனுமதிப்பதில்லை.

திருமணம் செய்து கொண்ட தம்பதிகளின் பெற்றோர்கள், அந்த தம்பதியினருடன் எந்த உறவும் நட்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்பது இந்த கிராமத்து மக்கள் காலம் காலமாக கடைப்பிடித்து வரும் கட்டுப்பாடு. இந்தக் கட்டுப்பாட்டை இந்த ஊரில் வசிக்கும் குழந்தைவேலின் ( சார்லி) மூத்த மகன் சக்திவேல் ( பவன்)  மீறுகிறார்.

இவர் எட்டு ஆண்டுகளாக காதலித்த கவிதா ( மேக்னா எலன்) என்ற பெண்ணை நண்பர்களின் துணையுடன் பதிவு திருமணம் செய்து கொள்கிறார். இவ்விடயம் பெண்ணின் சகோதரரான சுரேஷுக்கு ( பிர்லா போஸ்) தெரிய வருகிறது. அவர் எங்கள் வீட்டு பெண்ணை சக்திவேல் கடத்தி விட்டதாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார்.

காவல்துறையினர் சக்திவேலின் குடும்ப உறுப்பினர்களை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரிக்கிறார்கள். இதன்போது சக்திவேல் மற்றும் கவிதா… தாங்கள் திருமண வயதை எட்டியவர்கள் என்றும், பதிவு திருமணம் செய்து கொண்டவர்கள் என்றும் விளக்கமளிக்கிறார்கள்.

இதனால் பெண்ணின் சகோதரர் ஆத்திரமடைந்து சக்தி வேலை கொலை செய்ய திட்டமிடுகிறார். அதே தருணத்தில் அரிமாபட்டி பஞ்சாயத்து, சக்திவேலுடன் அவரது பெற்றோர்கள் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும், அவர் மீண்டும் ஊருக்குள் வரக்கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கிறார்கள். இந்நிலையில் சக்திவேலின் தாத்தா மரணமடைகிறார்.

சக்திவேல் தனது தாத்தாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்த கிராமத்திற்கு வந்தாரா? ஊர் பஞ்சாயத்தின் முடிவுப்படி சக்திவேலின் தந்தை நடந்து கொண்டாரா? என்பதுதான் இப்படத்தின் திரைக்கதை.

டிஜிட்டல் யுகத்திலும் இது போன்ற சில கட்டுப்பாடுகள் கொண்ட கிராமங்கள் இருக்கிறது என்பதனை ஆவணப்படுத்தி இருக்கும் இயக்குநரின் முயற்சியை பாராட்டலாம். ஆனால் உள்ளதை உள்ளபடி சொல்வதற்கும், உள்ளதை உள்ளம் விரும்பும்படி சொல்வதற்கும் வித்தியாசம் உண்டு.

இதனை இயக்குநர் சரிவர கையாளாதாலும், குறைந்த பட்ஜட் என்பதாலும், கதையில் முதன்மையான கதாபாத்திரங்கள் புதுமுகம் என்பதாலும், சம்பவங்களும் உணர்வெழுச்சியுடன் அமைக்கப்படாததாலும் ரசிகர்களுக்கு சோர்வையும், அயர்ச்சியையும் தருகிறது.

சக்திவேலாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் பவன் தன்னால் முடிந்த அளவுக்கு நடிக்க முயற்சித்திருக்கிறார். மூத்த நடிகர் சார்லி வழக்கம் போல் ஓவர் ஆக்டிங் செய்து ரசிகர்களை சோதிக்கிறார். கதாநாயகியாக நடித்திருக்கும் நடிகை மேக்னா எலன் இயக்குநர் சொன்னதை மட்டும் கச்சிதமாக செய்திருக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்காக வடிவமைக்கப்பட்ட போஸ்டர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் படம்….!?.

ஜே பி மேனின் ஒளிப்பதிவும், மணி அமுதவனின் இசையும் இயக்குநரின் எதிர்பார்ப்பை ஓரளவு பூர்த்தி செய்து இருக்கிறது.‌

அரிமாபட்டி சக்திவேல்- திருத்தப்பட வேண்டிய தீர்ப்பு

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More