Tuesday, April 30, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு கருணைநதி | ஒரு மருத்துவப் போராளியின் வாக்குமூலம்

கருணைநதி | ஒரு மருத்துவப் போராளியின் வாக்குமூலம்

2 minutes read

 

மிதயா கானவி அக்காவின் கருணைநதியை வாசித்தேன். ஒன்றரை மணிநேரத்தில் முடித்துவிடக்கூடிய புத்தகம். அக்கா இப்புத்தகத்தைக் என்கையில் தந்தபொழுது ஏதோ ஓர் கதையாக இருக்கக்கூடும் என்றுதான் நினைத்தேன்.

யூதர்கள் வதைக்கப்பட்ட இடமான Auschwitz சித்திரவதைக்கூடத்திலிருந்து எழுதப்பட்ட Anne frank இன் Holocaust , My diary of a Nazi death camp போன்ற நூல்களிலிருந்து பிரிந்த இறகினைப் போலத் தொடங்குகிறது கருணைநதி.

அமைதியான குளம் போன்றிருக்கும் மனதை ஒத்த சூழ்நிலையிலிருந்து வாசிக்கத் தொடங்கக்கூடிய புத்தகம் அல்ல இது. பிரமாண்டமான பாறாங்கல்லொன்று நீருள் விழுவதைப் போன்ற அதிர்ச்சியோடு கிரகிக்கப்படவேண்டிய கதை இது.

திவா, சங்கவி என்ற இரண்டு நூலிழைகளுக்கு முடிச்சுப்போட்டுவிட்டு, அதை அவிழ்க்கவோ, இறுக்கவோ முடியாமலேயே போய்விடுமோ என்ற இனஅழிப்புப் பதட்டத்தினுள் நகர்கிறது கதை.. , இல்லை இல்லை தமிழரது வாழ்வு.

தடுப்புமுகாம்களின் கொடுமைகள் பற்றி ஆயிரம் விடயங்கள் கேள்வியுற்றிருப்போம். ஆனால் “தடுப்புமுகாம்களினுள் இலையான்களின் அட்டகாசம்” என்ற பெயரிலேயேதனிக்கதை எழுதிவிடக்கூடிய அளவிற்கு இரண்டு வரிகளில் அதன் கொடுமையை விரித்திருக்கும் அக்காவின் எழுத்துக்கு 5 நட்சத்திரங்கள் என்ற உச்ச மதிப்பை வழங்கிவிடமுடியும்.

ஈழத்தமிழர் வாழ்வியலுக்குள் பம்பரம் விடும் அநேக இலக்கிய(வியாதி)க்கதைகள் போன்று ; “ஆமி தந்த விசுக்கோத்து போரை மறக்கடிக்கச் செய்தது” போன்றதான “நாமநடுவில நிக்குறோம்” வகையறாப் பொய்ச் சொல்லாடல்கள் இந்தப் புத்தகத்தில் துளியும் கிடையாதென்பதே பெரும் நிறைவு. உள்ளதை, அப்படியே அந்தந்த இடத்தில் ஆணியைப்போல அறைந்துவிடும் சொற்கள் கைவரப்பெற்ற எழுத்தாளராக அக்கா தனது எதிர்காலத்திலும் எழுத்தைத் தொட(ர)வேண்டும்.

“தேத்தண்ணிக்கு ஆசைப்பட்டாச் செல்லில சிதறவேணும்” என்பதைப் இனஅழிப்புப் பழமொழியாகவே ஆக்கிவிடலாம் போலிருக்கிறது. எத்தனை ஆழமான உவமானம் இது. தேநீருக்குச் சீனி தேவையோ இல்லையோ, அதை அருந்துவதற்கு முதலில் நம்முயிர் நமக்குத் தேவை என்பதன் பரிமாணத்தை இதை விட வேறு வழியில் சொல்லிவிட இயலுமா எனத் தெரியவில்லை.

அக்கா இயல்பில் ஓர் மருத்துவப்போராளி. அதுவும் சண்டைக்களத்தினுள் கத்தி மேல் நடப்பதான பணி அது. இந்தப் பணியின் கூர்மையை எத்தனை பக்கங்கள் எழுதினாலும் அது பிறருக்கு முழுமையாகப் புரிந்துவிடாது. நேரில் பார்த்தவர்களுக்கு மட்டுமே அந்தச் சுமையும், “தம்முயிர்போலத் தேசத்தை எண்ணுபவர்களது உயிரைக் காக்கும் பணி” என்பதன் ஆழமும் புரியும். சங்கவி யின் மன ஆழத்தைச் சிலவசனங்களிலேயே இயல்பாகச் சொல்வது மட்டுமல்ல, போராளிகளைக் கணவனாகப் பெற்றவர்களது இயல்புவாழ்வும் மிகுந்த மகிழ்ச்சியானதே என்பதை எழுத்திலேயே வாழ்ந்து காட்டியிருக்கிறார்.

“மாதத்திற்கொருமுறை வீட்டிற்கு வரும் கணவன், வரமுடியாப் பொழுதுகளில் எங்கோ ஓர் களமுனையில் நின்று எழுதும் கடிதம் எத்தனை வலிமையானது” என்பதை கருணைநதி அப்படியே கண்முன் காட்டிவிடுகிறது.

“தமிழினப்படுகொலை” என்ற சொல்லாடலிலிருந்து சிறிதும் நெறிபிறழாமல் நின்றிருக்கும் ஒரே ஒரு (கதை) நூல் இன்றுவரை இதுதான். இந்நூலின் அடிநாதமே அதுதான்.

ஆனாலும் அக்கா ஓர் தவறையும் செய்திருக்கிறா. அதையும் சுட்டிவிடுகிறேன். தமிழினப்படுகொலையின் ஓர் உச்ச ஆவணமாக, ஈழத்தமிழனத்தின் Auschwitz எனச்சொல்லப்படக்கூடிய தடுப்புமுகாம்களின் இலக்கியமாக, இனிவரப்போகும் சந்ததிக்கான பாடமாக அடையாளப்படுத்தவேண்டிய இந்நூலை; சாதாரண சொல்லாடலான “நாவல்” என்ற பொருந்தாப் பதத்தினுள் அடக்கி வைத்திருக்கிறார்.

நாவல்/இலக்கியம் போன்ற சொல்லாடல்களில் உள்ள அபாயம் யாதெனில்; சற்றே இக்கதை கற்பனையும் கலந்தது போன்ற எண்ணப்பாட்டை மக்களிடத்தில் அது தோற்றுவித்துவிடும். ஈழத்தமிழனத்தின் வாழ்வியலாக எழுதப்படும் உண்மைச்சம்பவங்கள் எப்போதும் ஆவணங்களாகப் பதியப்படவேண்டும். ஈழத்தமிழினத்தைப் பொறுத்தவரை ஆவணங்களே எதிர்கால இலக்கியங்களாகட்டும். அதற்கு இவ்வாறான நூல்கள் ஆவணங்களென இப்போது அடையாளப்படுத்தப்படவேண்டும்.

கருணைநதி பிரெஞ்சு மொழியில் வரவிருப்பதாக அறிந்தேன். அக்கா அனுமதித்தால் கருணைநதியை டொய்ச் மொழியில் பெயர்த்து, ஈழத்தின் ஒப்பற்ற கதையாக இங்குள்ள இளம்சந்ததிக்கு நிச்சயம் அறிமுகம் செய்வோம்.

உலகம் முழுதும் “கருணைநதி” செல்லவேண்டும். கதையாக அல்ல, ஈழத்தமிழினத்தின் ஆவணமாக…!

-தேவன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More