மதுமானம் அருந்தும் பழக்கத்தால் உலகளாவிய ரீதியில் ஆண்டுக்கு 3 மில்லியன் மக்கள் உயிரிழப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளில் மரண எண்ணிக்கை சற்றுக் குறைந்திருந்தாலும் அது இன்னும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு அதிகமாக இருப்பதாகவும் உலகளாவிய ரீதியில் 20இல் ஒரு மரணச் சம்பவத்துக்கு மதுபோதையில் வாகனம் ஓட்டுவது, குடித்துவிட்டு வன்முறையில் ஈடுபடுவது, குடிப்பதால் ஏற்படும் பல்வேறு நோய்கள் ஆகியவை காரணமாக இருக்கின்றன எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
2019இல் மதுபானத்தால் 2.6 மில்லியன் உயிரழப்புகள் பதிவாகின. அதில் முக்கால்வாசிப் பேர் ஆண்கள் ஆவர். குறித்த ஆண்டில் மதுபானம் அருந்தியவர்களில் பலர் நாள் ஒன்றுக்குச் சராசரியாக 27 கிராம் அளவுக்கு அதனைக் குடிப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த அளவுக்கு மதுபானத்தைக் குடித்தால் உடல் செயலிழக்கலாம் அல்லது உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய உபாதைகளைக் கொண்டுவரலாம் என்று ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.
இதேவேளை, உலகளவில் 15இல் இருந்து 19 வயதுடையவர்களில் 23.5 சதவீதமானோர் மதுபானம் குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.