அதிகமான பெண்களை தாக்கும் கருப்பை வாய் புற்றுநோயை கண்டறிய சில பரிசோதனைகள் உள்ளன. பாப் சோதனை எனப்படும் பாப்ஸ்மியர் சோதனை தான் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய செய்யப்படும் முதல்நிலை சோதனையாகும்.
இதில், கருப்பை வாய் பகுதிக்கு கருவியை செலுத்தி, அங்குள்ள செல்களை சேகரித்து வெளியே எடுத்து, அதில், புற்றுநோயை உருவாக்கும் செல்கள் அல்லது அசாதாரண செல்கள் ஏதேனும் உள்ளதா என்று பரிசோதிப்பார்கள். இந்த பரிசோதனையில், அசாதாரண செல்கள் அல்லது புற்றுநோய் செல்கள் இல்லை என்பது உறுதியானால், பரிசோதனைக்கு உள்ளான பெண்ணுக்கு மேற்கொண்டு சோதனைகள் தேவைப்படாது.
ஆனால், அப்பகுதியில் அசாதாரண செல்கள் இருந்து, ஆனால், அவை தற்போது புற்றுநோய் செல்களாக மாறாமல் இருக்கும் பட்சத்தில், உடனடியாக, அந்த அசாதாரண செல்கள் புற்றுநோய் செல்களாக மாறாமல் இருப்பதற்கான சிகிச்சையை மருத்துவர் துவக்குவார்.
மேலும், அங்கு புற்றுநோய் செல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக அவருக்கு திசு சோதனை செய்யப்படும். அதாவது, கருப்பை வாய் பகுதிக்குள் கருவி செலுத்தப்பட்டு, அங்குள்ள சிறு திசுப்பகுதி வெட்டி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.
கருப்பை வாய் பகுதியை தெளிவாகக் காண கால்போஸ்கோப்பி எனப்படும் கருவி பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம், அந்த திசுப்பகுதி புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறதா என்பது கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்சை உடனடியாகத் தொடங்கப்படும்.