March 31, 2023 5:06 am

பெண்களுக்கு எதிராக அதிகரிக்கும் வன்முறைகள்பெண்களுக்கு எதிராக அதிகரிக்கும் வன்முறைகள்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆண்கள் அழக் கூடாது என்று சொல்லும் இந்தச் சமூகம், அவர்கள் பெண்களை அழ வைக்கக் கூடாது என்று சொல்வதில்லை. சிறு வயதிலிருந்து ஆண்கள் அழக் கூடாது என்ற கருத்து பல திசைகளிலிருந்து அவர்களுக்கு வலியுறுத்தப்படுகிறது.

வீடு, பள்ளி, சமூகம் என எல்லா இடங்களிலும் இதே நடைமுறைதான். அவர்களுக்கு நெருக்கமான முதல் பெண்ணான அம்மாவில் ஆரம்பித்து அவர்கள் சந்திக்கும் பிற பெண்களும் ‘அழுவது ஆண்களுக்கு அழகில்லை’ என்றே சொல்கிறார்கள்.

அழுவது ஆண்களுக்கு அவமானம் என்ற எண்ணம் மனதில் ஆணித்தரமாகப் பதிந்த பிறகு, அவர்கள் தங்களது வலிமையைப் பெண்களிடம் நிரூபித்துக் காண்பித்தாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார்கள்.

எனவே, குடும்பத்தில் தனது வலிமையை, முக்கியத்துவத்தைக் காண்பிக்க பெண்கள் மீது வன்முறையை ஆண்கள் பயன்படுத்துகின்றனர்.

ஆனால், பெண்கள் மீதான வன்முறைகளில் குடும்ப வன்முறைகளே அதிகம் நிகழ்வதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் தகவல்படி 2013-ம் ஆண்டு மூன்று லட்சத்துக்கும் அதிகமான குற்றங்கள் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்துள்ளன. அவற்றுள் ஒரு லட்சத்துக்கும் அதிகமான குற்றங்கள் குடும்ப வன்முறை சம்பந்தப்பட்டவை.

33 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை பாலியல் வன்முறைக் குற்றங்கள். பாலியல் குற்றங்கள் குறைவாகப் பதிவாகியிருப்பது பெண்களிடையே அதிகரித்திருக்கும் விழிப்புணர் வையும் தைரியத்தையும் வெளிப்படுத்துகிறது என்றாலும் குடும்ப வன்முறை குற்றங்கள் அதிகரித்திருப்பதை எந்தக் கணக்கில் சேர்ப்பது? இன்னமும் பல வழக்குகள் வெளிவராமல் உள்ளன என்பதையும் மறுக்க இயலாது.

சமீபத்தில் வாஷிங்டனில் உள்ள பெண்கள் குறித்த சர்வதேச ஆய்வு மையம் இணைந்த நடத்திய ஆய்வின் படி, பத்தில் ஆறு ஆண்கள் பெண்கள் மீது வன்முறையை வெளிப்படுத்துவதை ஒப்புக்கொள்கின்றனர். இந்தியாவில் ஒடிசா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் 70 சதவீத ஆண்கள் தங்கள் மனைவியை அடிப்பதாக ஒப்புக் கொண்டிருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.

ஆண்களை வலிமையானவர்களாக, தைரியமானவர்களாக வளர்க்க வேண்டும் என்று வலியுறுத்தும் சமூகம், அவர்கள் கண்ணியமானவர்களாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்த ஆரம்பித்தால்தான், இது போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்