மாதவிலக்கு என்பது மூடி, மறைக்க வேண்டிய விஷயம் அல்ல என்றும், இதுகுறித்து நேரடி விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் எண்ணற்ற முறை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இருந்தாலும், இதைச் சுற்றிய திரை இன்னும் விலகவில்லை. தமிழ் குடும்பங்களில் பெண்களின் மாதவிலக்கு குறித்து வெளிப்படையான, மிக இயல்பான விவாதங்கள் பெரும்பாலும் நடப்பதில்லை. பல சந்தர்பங்களில் இதுகுறித்து பேச வேண்டிய சூழல் ஏற்பட்டாலும் இலை மறை காயாக பேசி முடித்து விடுகின்றனர்.
ஆகவே, இந்தப் பதிவில் மாதவிலக்கு குறித்து பேச வேண்டிய முக்கியத்துவம் மற்றும் பெண்களின் சுகாதாரம் குறித்த பல்வேறு விஷயங்களை நாம் பார்க்கலாம்.
பெண்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்
பல வளரும் நாடுகளில் பெண்கள் மாதவிலக்கு சமயத்தில் பிரார்த்தனை செய்ய, மத வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல, சமையல் செய்ய, இதர பொதுவான விஷயங்களை மேற்கொள்ள தடை விதிக்கப்படுகிறது. இன்னும் சொல்லப் போனால், வீட்டை விட்டு கூட வெளியே அனுப்புவதில்லை. இந்தக் கட்டுப்பாடுகள் காரணமாக, பல பெண்கள் பருவம் எய்திய பிறகு பள்ளிக் கல்வியை கைவிடும் சூழல் கூட நிலவுகிறது. இதுபோன்ற சூழலால் பெண்களின் நம்பிக்கை உடைந்து போகிறது. மாதவிலக்கு குறித்து நேருக்கு, நேர் பேசும் வாய்ப்பு மற்றும் இதர உரிமைகள் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும். இது ஒன்றும் நோய் அல்ல.
தொற்று ஏற்படும் வாய்ப்பு குறைகிறது
மாதவிலக்கு காலத்தில் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய தனி சுகாதார பழக்கங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலமாக தொற்றுகளில் இருந்து அவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். மிக சரியான சுகாதார பழக்கங்களை தெரிந்து கொண்டு அவர்கள் கடைப்பிடிப்பார்கள். குறிப்பாக, இனப்பெறுக்க உறுப்பு பகுதியில் நோய்த்தொற்று, சிறுநீர் குழாய் நோய்த்தொற்று போன்ற அபாயங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.
பருவம் எய்துவதை எதிர்கொள்ள வேண்டும்
சிறுமிகளிடம் பருவம் அடைதல் என்றால் என்ன என்பது குறித்து பல பெற்றோர் பேசுவதில்லை. மாறாக, பருவம் எய்துவது மற்றும் மாதவிலக்கு என்றால் என்ன, அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று பெண்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.
கட்டுக்கதைகளை உடைக்கலாம்
மாதவிலக்கு தொடர்பாக மதம் சார்ந்த, நூற்றாண்டுகள் பழமையான பல கட்டுக்கதைகள் சமூகத்தில் நிலவுகின்றன. அதுகுறித்த சரியான புரிதல்களை பெண்களுக்கு ஏற்படுத்த வேண்டும். எதிர்கால தலைமுறையினர் சரி சமமான வாய்ப்புகளை பெற இது உதவும்.
ஆண்களுக்கும் விழிப்புணர்வு தேவை
மாதவிலக்கு என்பது உடலளவில் பெண்கள் தொடர்புடைய பிரச்சினையாக இருக்கலாம். ஆனால், மனதளவில் பெண்களின் வலியை, அவர்கள் எதிர்கொள்லும் அசௌகரியங்களை ஆண்களும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான், பெண்கள் அத்துயரத்தை கடந்து செல்ல ஆண்கள் உறுதுணையாக இருப்பார்கள்.
நன்றி | நியூ லங்கா