எண்ணெய் பசை கூந்தலை என்னதான் செய்வது?
எண்ணெய் பசையான, பிசுபிசுப்பான கூந்தல் என்பது பரவலாகப் பலரிடமும் காணப்படுகிற ஒரு பிரச்னை. எண்ணெய் பசையான மண்டைப் பகுதியிலிருந்தே எண்ணெய் பசைக் கூந்தல் உருவாகிறது. மண்டைப் பகுதியில் உள்ள செபேஷியஸ் சுரப்பிகளின் தூண்டலே இதற்குக் காரணம். செபேஷியஸ் சுரப்பி சுரக்கும் சீபம், கூந்தல் ஆரோக்கியத்துக்கு மிக அவசியமானது. அது ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ளும். அதுவே இந்த சீபமானது அளவுக்கதிகமாக சுரந்தால், கூந்தல் அதை கிரகித்துக் கொண்டு, எண்ணெய் பசை தோற்றம் பெறும். சிலருக்கு எண்ணெய் பசை கூந்தலின் விளைவினால், எண்ணெய் வழிகிற சருமப் பிரச்னையும் சேர்ந்து கொள்வதுண்டு.
என்ன காரணம்?
ஊறல் தோல் அழற்சி
எண்ணெய் பசையான சருமம்
வானிலை மாறுபாடுகள்
ஹார்மோன் கோளாறுகள்
கூந்தலின் வேர் பகுதியில் உள்ள ஃபங்கல் இன்ஃபெக்ஷன்
கூந்தலை அளவுக்கு அதிகமாக வாருவது
பாரம்பரியம்
பூப்பெய்துதல்
ஈரப்பதம்
சுருள் சுருளான கூந்தல் உடையவர்களை விட, மென்மையான, ஸ்ட்ரெயிட் கூந்தல் உடையவர்களின் கூந்தல் அதிக எண்ணெய் பசையுடன் இருக்கும்.
மண்டை மற்றும் கூந்தலில் அளவுக்கு அதிக எண்ணெய் பசை தென்படுவதே ஊறல் தோல் அழற்சி பிரச்னைக்கான அறிகுறி. சீபம் சுரப்பில் ஏற்படுகிற பிரச்னையின் அறிகுறியல்ல இது. ஊறல் தோல் அழற்சி உள்ளவர்களுக்கு வெள்ளை மற்றும் பிரவுன் நிறத்தில் செதில்கள் போல வரும். இதற்கு எண்ணெய் பசையான பொடுகு என்று பெயர். இது இருந்தால் தலையில் அரிப்பு இருக்கும். அரிப்பு அதிகமாவதன் விளைவாக, ஆக்ரோஷமாக அந்தப் பகுதியை சொரிந்து அதைத் தீவிரப்படுத்திக் கொள்வார்கள். இன்ஃபெக்ஷனானது காதுகள், புருவங்கள் மற்றும் மூக்கு வரை பரவும். பரு பிரச்னையும் ஆரம்பிக்கும்.
ஹார்மோன்கள்
பூப்பெய்தும் பருவம் மற்றும் பிசிஓடி எனப்படுகிற சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை உள்ளவர்களுக்கு அந்த நேரத்தில் ஹார்மோன் கோளாறுகள் இருக்கும். இதனால் செபேஷியஸ் சுரப்பிகள் தூண்டப்பட்டு அதிக சீபம் சுரக்கப் படும். இதனால் மண்டைப் பகுதியும் கூந்தலும் எண்ணெய் பசையுடன் காணப்படும்.
என்ன பிரச்னை?
எண்ணெய் பசையான கூந்தல் என்பது ஒருவருக்கு தோற்றத்தில் கவலையைக் கொடுக்கும் விஷயமாக இருக்கும். அடர்த்தியான கூந்தல் என்பது இவர்களுக்குக் கனவாகவே இருக்கும். போனி டெயில் போட்டால் எலி வால் போலக் காட்சியளிக்கும். பின்னவும் முடியாது. மொத்தத்தில் ஷாம்பு குளியல் எடுக்காமல் இவர்களால் வெளியில் தலைகாட்ட முடியாது.
செய்யக்கூடியவை
எண்ணெய் பசைக் கூந்தலுக்கான ஷாம்பு உபயோகித்து வாரம் 3 முறை கூந்தலை அலச வேண்டும்.
உங்கள் கூந்தல் ரொம்பவும் எண்ணெய் பசையுடன் இல்லை என்றால், ஷாம்பு குளியலுக்குப் பிறகு மிதமான கண்டிஷனர் உபயோகிக்கலாம்.
கூந்தல் ஈரமாக இருக்கும் போதே பிசுபிசுப்புத் தன்மையை ஏற்படுத்தாத ஸ்பிரே உபயோகிக்கலாம்.
செய்யக்கூடாதவை
உங்கள் ட்ரைகாலஜிஸ்ட் அறிவுறுத்தாத வரை, தலைக்கு எண்ணெய் வைப்பதைத் தவிர்க்கவும்.
கூந்தலை அதிக முறை பிரஷ் செய்தலைத் தவிர்த்தல்.
அளவுக்கு அதிகமாக வார வேண்டாம். அது எண்ணெய் சுரப்பிகளைத் தூண்டி, எண்ணெய் சுரப்பை அதிகப்படுத்தும்.
தீர்வுகள்
எண்ணெய் பசையான கூந்தலுக்கென்றே பிரத்யேக ஷாம்பு கிடைக்கிறது. தினசரி உபயோகத்துக்கேற்ற வகையில் மைல்டான ஷாம்புவாக தேர்ந்தெடுக்கவும். கூந்தலின் நுனிகள் ரொம்பவும் வறண்டிருந்தால், அந்தப் பகுதிகளுக்கு மட்டும் கண்டிஷனர் உபயோகிக்கவும். ஓட்ஸில் தண்ணீர் விட்டுக் காய்ச்சி ஆற வைக்கவும். தலையில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைத்து, மிதமான ஷாம்பு உபயோகித்து அலசவும். 15 நாட்களுக்கொரு ஒரு முறை தலைக்கு ஹென்னா உபயோகிப்பதும், அதிகப்படியான எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தும்.
எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகளுக்கும், பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கும் இடம் அளிக்காதீர்கள். தினசரி உணவில் நிறைய பழங்களும் காய்கறிகளும் இருக்கட்டும். உலர்ந்த திராட்சை, பாதாம், பெர்ரி மற்றும் நிறைய பழ ஜூஸ் சேர்த்துக் கொள்ளவும். ஏரியேட்டட் பானங்களையும் பாட்டில்களில் அடைத்த பானங்களையும் தவிர்க்கவும். எண்ணெய் பசையான, பொடுகு நிறைந்த, ஆரோக்கியமற்ற மண்டைப் பகுதிக்கு எலுமிச்சை வியத்தகு பலன்களைக் கொடுப்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. பாதி எலுமிச்சைப் பழத்தை மண்டைப் பகுதியில் தேய்த்து 15 நிமிடங்கள் வைத்திருந்து அலசவும். 15 நாட்களுக்கொரு முறை இதைச் செய்யலாம்.
ஆதாரம்: ஆரோக்கியதளம்