சிறுகதை | வெளிச்சம் | கயல்விழி

பஸ்ஸில் ஏறி யன்னலோரமாக இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டேன். வழமை போலவே கிளிநொச்சி பஸ் தரிப்பிடம் மக்கள் நிறைந்த இடமாக காணப்பட்டது. பஸ் புறப்பட இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தபடியால் அன்றைய தின பத்திரிகையை மேலோட்டமாக வாசித்துக் கொண்டிருந்தேன்.

ஐந்து நிமிடங்களின் பின் பஸ் புறப்பட ஆயத்தமான போது பத்திரிகையை மடித்து என் பையின் உள்ளே வைத்து விட்டு நிமிர்ந்து உட்கார்ந்தேன்.

பஸ் இரைச்சலுக்கு மேலால் ஒரு சிறுவனின் குரல் இடைவிடாது கேட்டுக் கொண்டிருக்க திரும்பிப் பார்த்தேன். என் இருக்கைக்கு அருகாமையில் மறு பக்கம் இருந்த யன்னலோரமாக ஒரு வயோதிபரும் ஒரு சிறுவனும் இருந்து ஏதோ சுவாரசியமாக கதைத்துக் கொண்டிருந்தார்கள். அந்த சிறுவனுக்கு ஆறு வயது இருக்கலாம் என என் மனம் எண்ணிக்கொண்டது.

“அப்படி தெரியுறது என்ன தாத்தா?” என யன்னலூடாக பார்த்து மிகவும் ஆர்வத்துடன் அந்த சிறுவன் வயோதிபரை கேட்டான்.

“அதுக்கு பெயர் தான் மரம். கிளைகள் விட்டு நிறைய இலைகளுடன் வளர்ந்து உயரமாய் நிற்குது பார்” அந்த மரத்தைப் பற்றி விளக்கம் சொன்னார்.

“அது என்ன கலர் தாத்தா?”

“அதில தெரியிற இலைகள் எல்லாம் பச்சை கலர் கண்ணன்”

அந்த பெரியவரும் சோர்வடையாது கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் உற்சாகமாக பதில் அளித்துக் கொண்டிருந்தார்.

எனக்கு மனதினுள் லேசான கோபமும் சினமும் எட்டிப் பார்க்க அவர்களை மீண்டும் திரும்பிப் பார்த்தேன். அந்த சிறுவன் பரபரப்பும் வியப்புமாக தொடர்ந்து கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தான்.

“தாத்தா…. அது என்ன?” ஆச்சரியத்தோடு கத்தினான்.

“அது தான் கண்ணா….. காகம்… கறுப்பு நிறம்…. அழகாய் பறக்குது பார்…”

“காகம் இப்படி தான் பறக்குமா தாத்தா?”

“ஓமடா…. பறவைகள் எல்லாமே இப்படித்தான் தங்கட செட்டையை அடிச்சு அடிச்சு பறக்கும்”

அந்த சிறுவன் ஆச்சரியம் தாளாமல் கண்களை அகல விரித்தபடியும் திறந்த வாயை மூட மறந்தும் தன் தாத்தாவிடம் கதைகளை க் கேட்டுக் கொண்டிருந்தான்.

அதுவரை என் மனசினுள் இருந்த லேசான கோபம் எரிமலையாய் வெடித்தது. ஆறு வயது மதிக்கக் கூடிய இந்த சிறுவனுக்கு எப்படி இத்தனை நாட்களாக இவை எல்லாம் தெரியாமல் இருந்திருக்கும். பாடசாலைக்கு செல்வதில்லையா… அல்லது அவனது அப்பா, அம்மா அவனை வெளியில் கூட்டிச் செல்வதில்லையா… வீட்டுக்குள்ளேயே அடைச்சு வைத்திருந்தார்களா… மரம் , பறவை கூட எப்படி என்று தெரியாமல் இத்தனை நாட்களாக இருந்திருக்கிறானே……

Bus1-1 (1)

பஸ் வேகமெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. அதை விட வேகமாக என் மனம் குழப்பத்தில் ஓடிக்கொண்டிருந்தது. அவர்களிடமே நேரடியாக அதைப் பற்றி கேட்டால் என்ன என்று என் மனம் துடித்தது. நானாக எப்படி ஆரம்பிப்பது. அது அநாகரிகமான செயலாகத் தானே இருக்கும். வேண்டாம்… என்ர பாட்டில இருந்து விட்டு  இடம் வர இறங்கிப்  போக வேண்டியது தான்.

என் மனம் சமாதானத்துக்கு வந்தது.  கண்களை மூடியபடி என் இருக்கையில் சாய்ந்து, அமைதியாக இருக்க முயற்சி செய்தேன்.  ஆனால் இடைவிடாது அச் சிறுவனின் கேள்விகளும் அந்த பெரியவரின் விடைகளும் தொடர்ந்து கொண்டே இருந்தது.

“தாத்தா…. அதோ…. அப்படி தெரியுதே…. அது என்ன?”

“அது தான் கண்ணா… பாடசாலை. உன்னை போன்ற பிள்ளைகள் போய்  படிக்கிற இடம்….”

“ஓ……. இப்படித் தான் பள்ளிக்கூடம் இருக்குமா?” தன் இரு கரங்களையும் தட்டி ஆரவாரப்பட்டான். வாய் நிறைந்த சிரிப்போடு அது மறையும் வரைக்கும் தன் தலையைத் திருப்பி அதையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனின் முகத்தில் ஏக்க உணர்வு நிரம்பிப் போய் இருந்தது.

இதுக்கு மேலயும் என்னால் பொறுமையாக இருக்க முடியவில்லை. பாடசாலைக்கு போக வேண்டிய இந்த வயசில அவனுக்கு பாடசாலை எப்படி என்றே தெரியாமல் இருக்கே…. இது எப்படி சாத்தியமாகும்…. கடவுளே…. பெற்றோர் அவனை பாடசாலைக்கு அனுப்பாமல் அவனின் வாழ்க்கையை பாழாக்குகிறார்க ளா…. அந்த சிறுவன் மீதும் அவனின் பெற்றோர் மீதும் காரணமில்லாது கோபமாக வந்தது. நான் இறங்கும் இடம் வரும் போது அந்த பெரியவரை இரண்டு கேள்விகள் நறுக்கென்று கேட்டு விட்டுத் தான் பஸ்ஸை விட்டு  இறங்க வேணும். அப்பத் தான் என் மனம் ஆறும்.

என் மன போராட்டங்களுக்கு விடை காணும் விதமாக பஸ் தரிப்பிடத்தை நெருங்கி நின்று கொண்டது. எனது கைப் பையை எடுத்துக் கொண்டு என் இருக்கையை விட்டு எழுந்தேன். இறங்குவதற்கு முன்னராக திரும்பி அந்த பெரியவரைப் பார்த்தேன். அவர் தன் பேரனுக்கு விளக்கம் சொல்வதில் மும்முரமாக இருந்தார். அருகில் சென்று மெதுவாக பேச்சைத் தொடங்கினேன்.

“ஐயா…. நான் கேட்கிறன் எண்டு குறை நினைக்க வேண்டாம்… இந்த வயசில இந்த சிறுவன் ஒண்டுமே தெரியாத மாதிரி உங்களிட்ட அது என்ன.. இது என்ன.. எண்டு எல்லாவற்றையுமே கேட்கிறானே… ஏன் ஐயா இத்தனை நாட்களாக அவன் வெளியில எங்கும் போகாமல் வீட்டுக்குள்ளேயே இருந்தவன்?”

கஷ்டப் பட்டு தைரியத்தை வரவழைத்து அவரைப் பார்த்து கேட்டு விட்டேன்.

என்னைத் திரும்பி பார்த்தவர் சில வினாடிகள் ஒன்றுமே கதைக்காது அமைதியாக இருந்தார். பின்பு மீண்டும் என்னைப் பார்த்து கவலையுடன்,

“கண்ணனுக்கு பிறந்ததிலிருந்தே கண் பார்வை இல்லை. போன மாசம் தான் கண் ஆபரேஷன் மூலம் கண் பார்வை கிடைச்சது. ஆபரேஷன் முடிச்சு இத்தனை நாட்களாக ஆஸ்பத்திரியில  தான் இருந்தவன். இண்டைக்குத் தான் முதல் முதலாக அவனை இடம் சுற்றி காட்டுறதுக்காக என்னோடு பஸ்ஸில கூட்டி வந்தனான். கண்ணனின் கண்கள் இன்று தான் பல விஷயங்களை புதுசாக பார்க்குது… இயற்கையின் அழகை அவன் இன்று தான் பார்த்து ரசிக்கிறான்… அவன் வாழ்க்கைக்கும் ஒரு வெளிச்சம் இப்ப தானம்மா கிடைச்சிருக்கு…..”

பெரியவரின் கண்கள் நிரம்பி வழிய பாசத்தோடு கண்ணனை பார்த்த படியே சொன்னார்.

அதிர்ந்து போய் அந்த சிறுவனின் முகத்தைப் பார்த்தேன். தன் கண்களை அகல விரித்து என்னையும் புதிதாக பார்க்கும் தோரணையில் பார்த்து சிரித்தான். கபடமில்லாத அந்த சிரிப்பில் மனசுக்குள் நொறுங்கிப் போனேன். அவனை கட்டி அணைத்து ஆறுதல் சொல்ல வேண்டும் போல் இருந்தது.  முன்பு மனசுக்குள் கோபமாய் நினைத்துக் கொண்டதுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் போல் இருந்தது.

ஆனால் அதுக்கு தகுதி அற்றவளாய் வாயடைத்துப் போய் குற்ற உணர்ச்சியில் பஸ்ஸை விட்டு இறங்கினேன்.

நிறைவு….

– கயல்விழி –

ஓவியங்கள் | இந்து – கனடா

ஆசிரியர்