செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் தூவானம்! | சிறுகதை | விமல் பரம்

தூவானம்! | சிறுகதை | விமல் பரம்

7 minutes read

தொலைபேசியின் சத்தம் கேட்டு, பார்த்துக்கொண்டிருந்த திருமண அழைப்பிதழை மேசை மீது வைத்துவிட்டு எழுந்து வந்து போனை எடுத்தேன்.
“ அம்மா என்ன செய்யிறீங்கள். சாப்பிட்டாச்சே” மகள் ராதிகாவின் குரல் கேட்டது.
“இப்பதான் சாப்பிட்டனான்” என்றேன்.
“ சரியம்மா. நீங்கள் ஓகே தானே. ஆறுதலாய் படுத்திருங்கோ. நான் வைக்கிறன்” என்றாள்.

நானும் போனை வைத்துவிட்டு திரும்பினேன். என்னைத்தவிர வீட்டில் யாருமில்லை. ராதிகாவும் மருமகன் ரவியும் வேலைக்கும், பேரப்பிள்ளைகள் சாராவும், சாய்யும் ஸ்கூலுக்கும் போய்விட்டார்கள்.

அவுஸ்திரேலியாவுக்கு நிரந்தரவிசாவில் வந்து ஆறு வருடங்களாகிவிட்டது.
சாரா, சாய் பிறந்த நேரம் ஆறுமாத விசாவில் வந்து நிற்கும்போது பிள்ளைகள் வீட்டிலிருந்தார்கள். இப்போது அவர்களும் வளர்ந்து ஸ்கூலுக்கும் போகத் தொடங்கிவிட்டார்கள். வேலை நாட்களில் எல்லோரும் விடிய ஏழுமணிக்குப் போனால் திரும்பிவர நாலரை மணிக்கு மேலாகும். வீட்டில் நான் தனியயிருப்பதால் வேலையின் ஓய்வு நேரத்தில் ராதிகா எடுத்து கதைப்பாள்.

நிமிர்ந்து நேரத்தைப் பார்த்தேன். ஒன்றரையாகிவிட்டது. வேலைகளில்லாமல் உட்காந்திருக்கவும் சலிப்பாகயிருந்தது. ஊரில் இருக்கும்போது ஓய்வு என்பதே கிடைக்காது. வீடு வாசல் துப்பரவாக்க, மூன்று நேரச்சமையல் செய்ய, வெளிவேலைகள் என்று மாறி மாறி ஏதாவது இருந்து கொண்டேயிருக்கும். சிட்னிக்கு ராதிகாவிடம் வந்தபின் வேலைகள் அதிகமில்லை. வயதின் காரணமாய் மெல்ல மெல்ல வருந்தங்களும் உடம்பில் சேர மருந்துகளுக்கும் குறையிருக்கவில்லை.

“நீங்கள் தனிய இருந்து சமைக்கவேண்டாம். நான் சமைக்கிறன்” என்று வேலைக்குப் போக முதலே சமையலை முடித்து விட்டு போவாள்.

பகல்பொழுது போவது தான் கஷ்டமாகயிருக்கும். பிள்ளைகள் வந்தபின் அவர்களின் கதை கேட்பதுக்கும் அவர்களுக்கு கதை சொல்வதற்கும் நான் பக்கத்திலிருக்க வேண்டும். எல்லாக் கவலைகளையும் வருத்தங்களையும் மறந்திருக்கும் தருணங்கள் அவை.

அறைக்குள் வந்ததும் மேசையிருந்த திருமண அழைப்பிதழ் மீண்டும் கண்ணில்பட்டது.
ராகுல், ராகவி என்ற பெயர் பொருத்தத்தோடு அழைப்பிதழ் மிகவும் அழகாகயிருந்தது.
திருமணம் சரிவந்தவுடன் ராகவன் ஊரிலிருந்து போன்மூலம் விபரங்களெல்லாம் சொல்லிவிட்டான். பிறகு அழைப்பிதழை அனுப்பிவிட்டு,

“அக்கா, எல்லாருக்கும் காட் அனுப்பியிருக்கிறன். முந்தி அடிக்கடி வந்து போய்க் கொண்டிருந்தனி. அவுஸ்திரேலியா விசா கிடைச்சாப்பிறகு பரந்தனுக்கு வரவேயில்லை. ஆறு வருசமாச்சு. அப்பான்ரை செத்தவீட்டுக்கும் வரேல. கலியாணத்துக்கு வருவியா.” என்று கேட்டான்.
திடீரென அவன் அப்படிக் கேட்டதும் என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

“நல்லது கெட்டது எல்லாத்துக்கும் வர ஆசைதான். சக்திக்கு மீறி கடன் வாங்கி என்னைக் கூப்பிட்டினம். இப்ப ரவிக்கு நிரந்தர வேலையுமில்லை. கடன் வட்டியென்று பெருகிப்போயிருக்கு. பிள்ளைகளுக்கு கஷ்டமடா. பார்ப்பம்” என்றேன்.

“சொந்த பந்தம் கூடுற நேரம் நீங்கள் எல்லாரும் வந்தால் சந்தோஷமாயிருக்கும். சரி விடக்கா. உங்கத்த நிலம உனக்குத்தானே தெரியும். பார்த்து செய்” என்றான்.

அன்று மாமாவின் இறுதிக்காரியத்திக்கு போக முடியவில்லை. இன்றும் நிலமை அப்படித்தானிருக்கிறது.
சொந்த சகோதரம் போல் ஒன்றாக வளர்ந்தவர்கள். ராகவன் மாமாவின் மகன். என்னை விட ஆறு வயது இளையவன். எங்கள் வீட்டுக்கு அடுத்தவீடு . இரு வீட்டுக்குமிடையில் பாதை வைத்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் என் வயதொத்தவர்களுடன் அங்கு போய் விளையாடிக் கொண்டிருப்போம். ராகவன் பிறக்க முதலே நான் மாமாவின் செல்லப்பெண். நாள் முழுவதும் விளையாடினாலும் சந்தோஷமாய் பார்த்துக் கொண்டிருக்கும் மாமா மாலை ஆறு மணியானதும்,

“ஓடுங்கோ எல்லாரும் வீட்டுக்கு. போய் படியுங்கோ” என்று அனுப்பிவிடுவார்.

“விளையாட்டு முடியேல மாமா. முடியப் போறன். “ என்றாலும் விடமாட்டார்.
எவ்வளவு செல்லம் கொடுத்தாலும் ஆறுமணிக்கு மேல் நிற்க விடமாட்டார். கண்டிப்பாகயிருப்பார். விளையாட்டை குழப்பிவிட்டார் என்ற கோபத்தில் அடுத்தநாள் போகமாட்டேன். நான் வரவில்லை என்றதும்

“அன்னத்தை வீட்டுப்பக்கம் கணேல. எங்க போட்டாள்” என்று மாமாவே தேடி வருவார்.

“நீங்கள் கலைச்சுப் போட்டீங்களாம். அந்த கோவத்தில இருக்கிறாள்.” அம்மா தான் பதில் சொல்லுவாள்.

“பகலில விளையாடினால் இரவில படியுங்கோ. படிப்பு முக்கியம் .சரி வா” என்று கையைப் பிடித்து கூட்டிப் போவார். அம்மா, அப்பாவோடு இருந்ததைவிட மாமா வீட்டில் வளர்ந்ததுதான் அதிகம்.
அப்பாவும், மாமாவும் பரந்தனில் ஒன்றாக வயல் செய்ததால் இருவரும் ஒருத்தருக்கொருத்தர் துணையாகயிருந்தார்கள். அப்பாவுக்கு ஏதாவது பிரச்சனை வந்தாலும் மாமாவிடம் தான் கொண்டுபோவார். அப்பா, அம்மாவின் இறுதிக்காலம் வரை மாமா நல்ல துணையாக இருந்திருக்கிறார். அதன் பின் எனக்கும்.
ராகவன் தொடர்ந்து படிக்க யாழ்ப்பாணம் போக எனக்கும் திருமணமாகி கொழும்புக்குப் போனேன்.

“அவனும் படிக்கப் போட்டான். நீங்களும் போனால் நாங்கள் தனிய இருந்து என்ன செய்யிறது. அடிக்கடி வந்து பாத்திட்டுப்போங்கோ” என்று சொல்லி அனுப்பிவைத்தார்.

ராதிகா திருமணமாகி சிட்னிக்கு வந்தபின்பு நாம் தொடர்ந்து கொழும்பில் இருந்தாலும் லீவு கிடைக்கும்போது ஊருக்குப் போய் வருவோம். பென்ஷன் எடுத்துக்கொண்டு நிரந்தரமாய் ஊருக்குபோவோம் என்று நினைத்திருந்த நேரம் ஒரு நாள் அதிகாலை,

“நெஞ்சு வலிக்குது. மூச்சுவிட ஏலாமலிருக்கு படுக்கப்போறன்”
என்று படுத்த என் கணவர் பிறகு எழுந்திருக்கவேயில்லை.

விஷயம் கேள்விப்பட்டு அலறியடித்துக் கொண்டு மாமா ராகவனோடு வந்தார். ராதிகாவும் மருமகனும் வர ஊருக்குப் போய் இறுதிக் காரியங்களை அங்கு செய்தோம். பின்பு பிள்ளைகள் சிட்னி போக நான் மாமா வீட்டில் நின்றேன். திரும்பிப் போக மாமா விடவில்லை.

“தாத்தா வீட்டில நில்லுங்கோ. இனி தனிய போய் இருக்கவேண்டாம். நாங்கள் கூப்பிடுறம்.” அழுகையோடு சொல்லிவிட்டுப் போனாள் ராதிகா.

அந்த நேரங்களில் எனக்கு மாமாவும், ராகவியும் பெரும் ஆறுதலாகயிருந்தார்கள்.

சாரா பிறந்த போது வரத்தொடங்கி பின் ஆறு மாதத்திற்கு ஒருமுறை சிட்னுக்கு வந்து போய்க் கொண்டிருந்தேன். அவுஸ்திரேலியா போனாலும் திரும்ப வந்து தங்களுடன் இருப்பது மாமாவுக்கு சந்தோஷமாயிருந்தது. ராதிகாவுக்கு நான் அங்கேயும் இங்கேயும் அலைவது கவலையைக் கொடுத்தது.

“அடிக்கடி வந்து போறது உங்களுக்கு கஷ்டமம்மா. எத்தனை நாளைக்கு நீங்களும் தாத்தா வீட்டில நிக்கிறது. நிரந்தரமாய் இங்க வந்து நிக்கிறதுக்கு ஒழுங்கு செய்வம்” என்றாள்.
ரவியோடு கதைத்து ராகவன் மூலம் விசாவிற்கு ஒழுங்கு செய்யத்தொடங்கிவிட்டாள். விசாவிற்கு கட்டவேண்டிய தொகையைக்கேட்டு திகைத்துவிட்டேன்.

“அறுபது லட்சம் செலவழிச்சு விசா எடுக்கவேணுமா “ என்று ராதிகாவைக் கேட்டேன்.
“பேரண்ட்ஸ் விசா”வில தான் உங்களை நிரந்தரமாய் கூப்பிடலாம். அதுக்கு காசு செலவழிச்சுத் தான் எடுக்கவேணும். நீங்கள் ஏன் அதைப்பற்றி யோசிக்கிறீங்கள். வந்து எங்களோட பிள்ளைகளோட சந்தோஷமாயிருங்கோ” என்று சொல்லிவிட்டாள்.

முதல் முற்பது லட்சம் கட்டி இரண்டுவருட விசா கிடைத்து புறப்பட்டபோது திரும்ப எப்ப வருவேனோ என்ற நினைப்பு மனதில் எழுந்தது. லட்சக்கணக்கில் காசைக்கட்டி விசா எடுத்துவிட்டு அடிக்கடி வந்துபோகவும் முடியாதே என்று நினைக்க கவலையாகயிருந்தது.

“இனி நீ பிள்ளைகளோடை இருக்கிறது தான் நல்லது. அதுகளுக்கும் நிம்மதியாயிருக்கும். சந்தோஷமாய் போய்வா. வசதி வரேக்க வந்து பார்த்திட்டுப் போவன் ” என்று சொல்லி அனுப்பி வைத்தார் மாமா.

இரண்டு வருடம் முடிய மீதிப்பணத்தையும் கட்ட விசாவும் கையில் கிடைத்தது.

அறுபது லட்சங்களை விழுங்கி வந்த விசாவைப் பார்த்தபோது எப்படி சமாளித்தார்கள். எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்ற எண்ணமே தோன்றியது.

“எல்லாம் கடன்தானம்மா. வீட்டுக்கடனும் இருக்கு. கஷ்டமெண்டாலும் காசு கட்டி கூப்பிடலாமெண்டால் அதை செய்து போடோணும். எங்களோட நீங்கள் இருந்திட்டால் எங்களுக்கு நிம்மதியம்மா”. என்று சொன்னாள் ராதிகா.
பட்ட கடனை வட்டியோடு அடைப்பதற்கு இருவரும் ஓடி ஓடி வேலை செய்வதையும், தங்கள் செலவுகளைக் குறைத்து சிக்கனமாய் இருப்பதையும் பார்க்க கவலையாகயிருந்தது.

“நீங்கள் ஏன் யோசிக்கிறீங்கள். நீங்கள் எங்களோட இருக்கிறது பிள்ளைகளுக்கு எவ்வளவு சந்தோஷம் பார்த்தீங்களா. நீங்களும் சந்தோஷமாய் இருங்கோ மாமி. “ என்று மருமகன் ரவி சொன்ன போது சந்தோஷமாகயிருந்தது. வயதுபோன நேரத்தில் பிள்ளைகளோடு அவர்களின் அரவணைப்பில் இருப்பது எத்தனை பேருக்கு கிடைக்கும். விசா கிடைத்து இங்கு வரும்போது பக்கத்து வீட்டு மீனாட்சியம்மா சொன்னது நினைவுக்கு வந்தது.

“நிம்மதியாய்ப் போய் பிள்ளைகளோட இரு. இதுக்கும் நாங்கள் புண்ணியம் செய்ய வேணும். என்னைப்பார் மூண்டு பிள்ளைகளைப் பெத்தன். மூண்டும் வெளிநாட்டில. இவ்வளவு நாளும் வருத்தக்காற மனுசனை பாக்கோணும் எண்டு அவரோட இருந்தன். இப்ப அவரும் போட்டார். பிள்ளைகளோட இருக்க ஆசை. எண்பது வயசில குளிர் நாட்டுக்கு வந்து தாங்கமாட்டீங்கள். உதவிக்கு ஆளைப்பிடிச்சு பாருங்கோ. உங்களை நாங்கள் வந்து பாக்கிறம் எண்டு காசு அனுப்புறாங்கள். வீட்டைத் துப்பரவாக்க, சமைச்சுத்தர எண்டு மனுசி இரண்டு உதவிக்கு இருந்தாலும் பிள்ளைகளை எதிர்பார்த்துக்கொண்டு தனிய இருக்கிறன். இதுவும் முதியோர் இல்லம் மாதிரித்தானே.” கண்கலங்க சொன்னதை என்னால் மறக்க முடியவில்லை.

உறவுகளோடிருக்கிற சந்தோஷமும் நிம்மதியும் இறுதிக்காலங்களில் எவ்வளவு முக்கியம் என்பதை ஒவ்வொரு தருணங்களிலும் உணரும்போது நாங்களும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று தோன்றும்.
விசா கிடைத்து ஆறுமாதமாகவில்லை. அன்று சாராவின் ஸ்கூலில் நடந்த பிள்ளைகளின் கலைநிகழ்ச்சிக்கு எல்லோரும் போய் விட்டு திரும்பி வர இரவு பத்து மணியாகிவிட்டது. படுக்கலாம் என்று நினைத்த நேரம் ராகவனிடமிருந்து போன் வந்தது.

“அக்கா நாலைஞ்சுதரம் அடிச்சிட்டன். நீங்கள் ஏன் எடுக்கேலை.” என்றான்.

“நாங்கள் வீட்டில இல்லை. ஏன் அடிச்சனி” என்று கேட்டேன்.

“அப்பாவுக்கு மூண்டு நாளாய் தொடந்து காய்ச்சல். பனடோல் குடுத்தும் நிக்கேல. இண்டைக்கு மயங்கி விழுந்திட்டார். பயந்துபோய் கொஸ்பிற்றலுக்கு கொண்டு வந்திட்டம். மறிச்சுப்போட்டினம். இப்ப மயக்கம் தெளிஞ்சிட்டுது. ஆனா எழும்பி நடக்கேலாமல் படுத்திருக்கிறார். நானும் அவரோடதான் நிக்கிறன்.” என்றான்.
எனக்கு திக்கென்றது.

மாமாவுக்கும் எண்பது வயதாகுது. அவர் சுகமாகயிருக்கவேணும். இப்ப அவருக்கு ஏதேனும் நடந்தாலும் போகமுடியாது. அவரை நினைக்க துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் போனை வைத்தேன்.

அம்மா, அப்பாவின் இறுதிநேரத்தில் கொழும்பிலிருந்ததால் உடனும் போய்விட்டோம். இன்று நாடு விட்டு நாடு வந்ததால் நினைத்தவுடன் போகவும் முடியவில்லை.பிள்ளைகளின் சூழ்நிலை அறிந்ததால் கேட்கவும் முடியவில்லை. சாத்திய அறைக்குள் மாமாவை நினைத்து கலங்கிக் கொண்டிருந்தேன். நான் பயந்தது போலவே மாமாவின் மரணச்செய்தியும் வந்தது.

“பொம்பிளைப் பிள்ளையில்லையென்று நான் கவலைப்பட்டதேயில்லையடா” என்று என்னிடம் சொல்லும் மாமா……
ஒருநாள் என்னைக் காணாவிட்டாலும் தேடிவரும் மாமா…… கொழும்பிலிருந்தபோது,

“ என்ன கனநாளாய் காணேல. ஒருக்கா வந்து பாத்திட்டுப் போங்கோ” என்று அழைப்பு விடும் மாமா…..

“அவளுக்கும் வயது போகுது.வந்து அலையவேண்டாம். எங்கயிருந்தாலும் சுகமாயிருக்கட்டும்” என்று வாழ்த்தும் மாமா….

ஒவ்வொன்றையும் நினைக்கும்போது அழுகை வெடித்துக்கொண்டு வந்தது.
போன் எடுத்து ராகவனோடு அழுதேன்.

“அழாதையக்கா. காசைச் செலவழிச்சு இப்பதானே போனனி. உடன வாறதும் கஷ்டம். எனக்கு விளங்குது. உயிரோட இருக்கேக்க வந்து பார்த்திருந்தால் அப்பாவுக்கும் உனக்கும் சந்தோஷமாயிருக்கும். இப்ப வந்தாலும் கவலை தானே. கவலைப்படாதே” என்று ஆறுதல் சொன்னான் ராகவன்.

“தாத்தா இப்பிடி திடீரென போனது கவலைதான். ஆனால் வருத்தமெண்டு படுக்கையில இருந்து கஷ்டப்படாமல் போனது நல்லதுதானேம்மா கவலைப்படாதேங்கோ”

ஆளாளுக்கு ஆறுதல் சொன்னாலும் கடைசியாய் மாமாவின் முகத்தைப் பார்க்க முடியவில்லையே என்ற மனக்கவலை ஆற பல நாட்கள் சென்றது.

போன கிழமை ராகவியின் இந்த திருமண அழைப்பிதழ் வந்தபோது எல்லோரும் வீட்டிலிருந்தார்கள்.

“ராகவியின்ர கலியாணத்துக்கிடையில கடனைக்கொஞ்சம் குடுத்து குறைச்சிட்டு உங்களோட கட்டாயம் போகவேணும் எண்டு நினைச்சிருந்தம். இரண்டு பேரும் வேலை செய்தம். திடீரெண்டு ரவியை வேலையால நிற்பாட்டினதால சரியான கஷ்டமாய்ப் போச்சு. தற்காலிகமாய் ரெஸ்ரோரண்டில வேலை செய்தாலும் செலவுகளை சமாளிக்க முடியேல.இரண்டு வருசமாய் வேற வேலை தேடுறார் கிடைக்குதேயில்லை. இரண்டு மூண்டு வருசத்தில தாறம் எண்டு வாங்கின காசும் குடுக்கேல. சில பேர் கேட்கினம். இந்த நேரத்தில நாங்கள் எப்பிடிப் போறது. கஷ்டமம்மா.” என்றாள் ராதிகா.

“கஷ்டமென்றாலும் மாமாவுக்கு கொஞ்சக் காசு அனுப்பவேணும். வாறகிழமை அனுப்பிவிடுவம் “ என்றார் ரவி.
இவர்களுக்கு அங்கு போகவேணும்… உதவ வேணும் என்ற விருப்பம் இருந்தாலும் இவர்களின் இன்றைய சூழ்நிலையை நினைக்க கவலையாகயிருந்தது.

“சரி விடுங்கோ. பிறகு பார்க்கலாம்” என்று கூறி அவ்விடத்தை விட்டு எழுந்து அறைக்குள் வந்து அலுமாரித்தட்டில் அழைப்பிதழை வைத்தேன்.

இன்று அலுமாரியைத்திறந்தபோது அந்த அழைப்பிதழ் கண்ணில்பட்டதால் வாழ்ந்த பழைய ஞாபகங்களை நினைவுபடுத்தி விட்டது.. இப்படியான தருணங்களில் ஊருக்கு போகவேணும், சொந்தங்களைப் பார்க்க வேணும் என்று மனம் ஏங்கத் தொடங்கிவிடும். பாதிக் கடனையாவது கொடுத்திட்டு அம்மாவோடு ஊருக்கு போய்வரவேணும் என்று ஆசையோடு சொல்லிக் கொண்டிருக்கும் ராதிகாவின் முன் எதையும் காட்டிக் கொள்ளவும் மனம் வருவதில்லை.

கதவு திறக்கும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு நேரத்தைப் பார்த்தேன். மாலை ஐந்து மணியாகி விட்டது. பிள்ளைகள் வந்து விட்டார்கள்.அறையை விட்டு வெளியே வந்தேன்.

“அம்மா இது உங்களுக்கு. ” ராதிகா அருகில் வந்து ஒரு கவரைத் தந்தாள்.
கவரைத்திறந்து பார்த்தேன். அதில் ரிக்கற்றும் பணமும் இருந்தது. என்ன இது என்பது போல் அவளை நிமிர்ந்து பார்த்தேன்.

“நீங்கள் ராகவின்ர கலியாணத்திற்குப் போறீங்கள். சந்தோஷமாய் மூன்று மாதம் அங்க இருந்திட்டு வாறீங்கள். மூன்று மாதத்திற்கு ரிக்கற் போட்டிருக்கு. அம்மா.” என்றாள் சந்தோஷமாய்.

நான் இதை எதிர்பார்க்கவில்லை.

“கஷ்டமான நேரத்தில ஏன். பிறகு எல்லாருமாய் போயிருக்கலாம். நானும் முழங்கால் வருத்தத்தோட தனியாப் போய் சமாளிக்கமாட்டன்.” என்றேன்.

“ மாமி, இனி உங்களை தனியவிடமாட்டம். எனக்கு தெரிஞ்ச ஆட்கள் போகினம். உங்களை கவனமாய் கொண்டுபோய் மாமா வீட்டை விடுவினம். யோசிக்காதேங்கோ” என்றார் ரவி.

“என்னைக் கேட்காமல் ஏன் ரிக்கற் போட்டீங்கள் ” என்றேன்.

“கேட்டால் வேண்டாம் எண்டு சொல்லுவீங்கள். உங்களை கொண்டு வந்து விட்டிட்டு வேலையெண்டு நாங்கள் வெளியில போயிடுவம். பகல் முழுக்க தனிய இருப்பீங்கள். ஊர் ஞாபகம் தான் உங்களுக்கு வரும். மாமான்ர இறுதிக் காரியத்திற்கு நீங்கள் போகேலை எண்டு எவ்வளவு கவலைப்பட்டீங்கள். உங்கட விருப்பங்களை நாங்கள் பார்த்து செய்யவேணும். நீங்கள் எப்பவும் சந்தோஷமாய் இருக்கவேணுமம்மா. கவருக்குள்ள காசுமிருக்கு. உங்களைக் கண்டவுடன அம்மா எண்டு பழகின சனங்கள் வருங்கள் பார்த்து எல்லாருக்கும் குடுங்கோ. சந்தோஷப்படுங்கள்.” என்று மாறி மாறி சொல்லிக்கொண்டிருக்கும் ராதிகாவையும் ரவியையும் நிமிர்ந்து பார்த்தேன். மனதுக்குள் பரவிய சந்தோஷத்தை மீறி திரும்பப் பட்ட இந்த கடனுக்காக இன்னும் எத்தனை காலம் ஓடி ஓடி உழைக்கப் போகிறார்கள் என்ற எண்ணமே மேலோங்கி என் மனதை பாரமாக்கியது.

 
நிறைவு..

 

நன்றி : ஜீவநதி சஞ்சிகை | புரட்டாதி 2018

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More