உங்களுக்கு ஏதாவது கிடைத்தால், அதைப் பிறருக்கும் கொடுங்கள்; நீங்கள் எதையாவது கற்றுக்கொண்டால், பிறருக்கும் கற்றுக் கொடுங்கள்.’ என்பது அமெரிக்கக் கவிஞர் மாயா ஏஞ்சலோவின் (Maya Angelou) புகழ்பெற்ற வரிகள். இந்த மனம் வாய்ப்பது வரம். அப்படிப்பட்ட மனம் வாய்க்கப் பெற்ற, பிறருக்கு உதவும் குணம் படைத்த எத்தனையோ மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அவர்கள்… கூட்டம் பிதுங்கிவழியும் பேருந்தில் பாய்ந்து இடம்பிடித்திருந்தாலும், தள்ளாமையோடு வரும் முதிய பாட்டிக்கு எழுந்து இடம் கொடுப்பார்கள்; சாலை விபத்து நடந்தால், பாதிக்கப்பட்டவருக்குத் உதவப் பாய்ந்து வருவார்கள்; எங்கேயோ சிரியாவில் கொத்தாகக் குழந்தைகள் குண்டுவீச்சில் பலியானால் அதைச் செய்தியாக மட்டும் படிக்காமல், பதறிப்போய் கலங்கி நிற்பார்கள்; `நீட்’ தேர்வெழுத தமிழக மாணவர்கள் ராஜஸ்தானுக்கும் கேரளாவுக்கும் அலைக்கழிக்கப்பட்டால், தங்களால் எப்படியெல்லாம் அவர்களுக்கு உதவ முடியும் என்று யோசிப்பார்கள்.
மொத்தத்தில் அவர்கள் மனிதாபிமானம் மிக்கவர்கள்; சக மனிதர்களை நேசிப்பவர்கள்; தங்களால் இயன்றதைப் பிறருக்கு உதவும் பரோபகாரிகள். அப்படிப்பட்ட மனிதர்களில் இரண்டு பேரைப் பற்றிய உண்மைக் கதை இது.
அது 2010-ம் வருடம். அவர்கள் இருவரும் நண்பர்கள். ஒருவர். ஜிம் கிளாப் (Jim Glaub), மற்றவர், டைலன் பார்க்கர் (Dylan Parker). இருவரும் அப்போதுதான் அமெரிக்கா, நியூயார்க்கிலிருக்கும் மன்ஹாட்டன் பகுதியிலிருக்கும் ஒரு அப்பார்ட்மென்ட்டுக்குக் குடிவந்திருந்தார்கள். வந்த சில நாள்களிலேயே அவர்கள் இருந்த முகவரிக்கு கடிதங்கள் வர ஆரம்பித்தன. முதல் நாள் ஐந்து, அடுத்த நாள் 10, அதற்கடுத்த நாள் 15… இதில் பிரச்னை என்னவென்றால், அந்தக் கடிதங்கள் ஜிம் கிளாப்புக்கோ, டைலன் பார்க்கருக்கோ எழுதப்பட்ட கடிதங்கள் அல்ல. `கிறிஸ்துமஸ் தாத்தா’வுக்கு (Santa Claus) எழுதப்பட்டவை.
கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு எழுதப்பட்ட கடிதங்கள் தங்களுக்கு ஏன் வருகின்றன என்று இருவரும் யோசித்தார்கள். அமெரிக்காவில் ஒரு பழக்கம் உண்டு. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு என்ன வேண்டும் என்பதை நேரடியாகக் கேட்க மாட்டார்கள். அவர்களின் விருப்பத்தை, கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு ஒரு கடிதமாக எழுதச் சொல்வார்கள். குழந்தைகள் எழுதியதும், `எங்கே… நீ சரியாத்தான் எழுதியிருக்கியான்னு பார்க்குறேன்…’ என்று அம்மாவோ, அப்பாவோ அந்தக் கடிதத்தைப் பார்த்து, குழந்தைகளின் விருப்பத்தைத் தெரிந்துகொள்வார்கள்.
பிறகு, கிறிஸ்துமஸ் தினத்தன்று, கிறிஸ்துமஸ் தாத்தாவே வந்து அவர்கள் விரும்பியதைக் கொடுத்ததுபோல் செய்துவிடுவார்கள். அமெரிக்கக் குழந்தைகள், தங்கள் விருப்பத்தை வட துருவத்தில் (North Pole) இருக்கும் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு அனுப்புவதுதான் வழக்கம். ஆனால், அவர்களுக்கு வந்த கடிதங்கள் அத்தனையிலும் `Santa Claus’ என எழுதப்பட்டு இவர்கள் முகவரியே எழுதப்பட்டிருந்தது. ஏன் என்பது அவர்களுக்கு விளங்கவில்லை. யாராவது நகைச்சுவைக்காக, வேடிக்கைக்காக இப்படி செய்கிறார்களா என்பதும் புரியவில்லை.
இதற்கிடையில், கடிதங்களின் எண்ணிகை அதிகமாகிக்கொண்டே போனது. ஜிம்மும் டைலனும் கூகுளில் தேடி, தங்கள் முகவரி சரிதான் (22nd Street). என்பதையும் உறுதிசெய்துகொண்டார்கள். ஒரு கட்டத்தில், சரி இந்தக் கடிதத்தில் என்னதான் எழுதியிருக்கிறது என்று படிக்கலாமே என்று தோன்றியது. ஒரு கடிதத்தை எடுத்துப் பிரித்துப் படித்தார்கள்.
ஐந்து வயது சிறுவன் எழுதியிருந்தான்… `கிறிஸ்துமஸ் தாத்தா. என்னோட சாக்ஸ் கிழிஞ்சு நைஞ்சு போச்சு. இது குளிர்காலம் இல்லையா? ஷூ போட்டிருந்தாலும் கால் மட்டும் ஜில்லுனு ஆகிப் போயிடுது. ஒரு சாக்ஸ் வாங்கித் தருவீங்களா?’ இந்த எளிய கோரிக்கையைப் படித்ததும் உருகிப் போனார்கள் ஜிம்மும் டைலனும்.
அடுத்த கடிதம்… ஓர் ஆறுவயதுச் சிறுமி எழுதியிருந்தாள்… `தாத்தா… என்னோட அம்மா தனியா ரொம்பக் கஷ்டப்படுறாங்க. நான் கேட்குறதையெல்லாம் அவங்களால வாங்கிக் குடுக்க முடியலை. என்னோட துணிகளெல்லாம் ரொம்பப் பழசாகிப் போச்சு. நான் வளர்ந்துட்டதால, ஷூவும் போட முடியாத அளவுக்குச் சின்னதாகிடுச்சு. இந்த கிறிஸ்துமஸுக்கு எனக்குப் போட்டுக்குறதுக்கு டிரெஸ்ஸும், ஷூவும் கொஞ்சம் பொம்மைகளும் அனுப்பிவைப்பீங்களா?’ – கடிதத்தின் கீழே அந்தக் குழந்தைக்கான உடை, ஷூவின் சைஸும் குறிப்பிட்டிருந்தது.
ஒரு கடிதத்தில் 9 வயதுக் குழந்தை கம்ப்யூட்டர் கேட்டிருந்தது. இன்னொரு கடிதத்தில், 21 மாதங்களே ஆன ஒரு குழந்தை எழுதுவதுபோல, அதன் அம்மா, குழந்தைக்கு ஸ்வெட்டர் கேட்டிருந்தார். ஒரு நடுத்தர வயதுள்ள, சமீபத்தில்தான் வேலையை இழந்திருந்த மனிதரொருவர் ஒரு மாதத்துக்கான மளிகைச் சாமானை தன் குடும்பத்துக்கு வாங்கித் தரும்படி கேட்டிருந்தார்… படிக்கப் படிக்க நெகிழ்ந்துபோனார்கள் நண்பர்கள் இருவரும். இதற்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும் என முடிவெடுத்தார்கள். ஆனால், எப்படி?
இருவரும் இதற்காகவே ஃபேஸ்புக்கில் `மிராக்கிள் ஆன் 22ண்ட் ஸ்ட்ரீட்’ (Miracle on 22nd Street) என்ற குரூப்பை ஆரம்பித்தார்கள். `கிறிஸ்துமஸ் தாத்தா’ பெயருக்கு (தங்களுக்கு) வந்த கடிதங்களையெல்லாம் பதிவிட்டார்கள். நண்பர்களிடமும், குடும்பத்தினரிடமும், சில தன்னார்வலர்களிடமும் உதவி கேட்டார்கள்.
`ஒரு குழந்தையின் விருப்பத்தை உங்களால் நிறைவேற்ற முடியுமா?’ என்கிற வாசகத்தோடு இடப்பட்ட அவர்களின் பதிவுகளுக்கு வரவேற்பும் கிடைத்தது. அவர்களில் இந்த உண்மையைப் புரிந்துகொண்டவர்களும் இருந்தார்கள். `ஜிம்மும் டைலனும் சேர்ந்து நம்மை ஏமாற்றுகிறார்களோ..!’ என்று நினைத்தவர்களும் இருந்தார்கள்.
அவர்களை சந்தேகப்பட்ட ஒருவர், ஒருநாள் ஒரு கிஃப்ட்டைக் கொடுத்து அனுப்பிவிட்டு, பின்னாலேயே வேவு பார்க்கக்கூடச் செய்தார். அந்தப் பரிசை சுமந்து சென்ற வேன் பின்னால் சென்று பார்த்தார். அந்த வேன் ஒரு குறிப்பிட்ட வீட்டின் முன் நின்றது. அதிலிருந்து கிறிஸ்துமஸ் தாத்தா இறங்கினார். அவரைப் பார்த்ததும், வீட்டிலிருந்த குழந்தைகள் வெளியே ஓடிவந்தார்கள். தன் குழந்தைகளுக்கு, கிறிஸ்துமஸ் தாத்தா பரிசு கொடுப்பதை கண்ணீர்மல்க, அவர்களின் தாய் பார்த்துக்கொண்டிருந்தார்.
2010-ம் ஆண்டு, இந்த நண்பர்களின் முகவரிக்கு 450 கடிதங்கள் வந்திருந்தன. அவற்றில் 150 கடிதங்களின் குறைகளைத் தீர்த்துவைத்துவிட்டார்கள். கடந்த ஆண்டு வரை, தங்களால் முடிந்த உதவியை இந்த ரியல் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஜிம், டைலன் இருவரின் கதை உதவி செய்பவர்களுக்கு ஓர் உதாரணம். `பிறருக்கு உதவுவதால் யாரும் ஏழையாவதில்லை’ என்பது மறுக்க முடியாத உண்மை.
நன்றி : விகடன்