செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் தூறல்கள் மழையாகலாம் | சிறுகதை | விமல் பரம்

தூறல்கள் மழையாகலாம் | சிறுகதை | விமல் பரம்

11 minutes read

ஞானம் சஞ்சிகையால் 2020 ல் நடாத்தப்பட்ட “அமரர் செம்பியன் செல்வன்” ஞாபகார்த்த சிறுகதைப் போட்டியில் விமல் பரம் அவர்களின் இச் சிறுகதையானது ஆறுதல் பரிசினைப் பெற்றுள்ளதோடு மார்கழி மாத ஞானம் சஞ்சிகையில் இக்கதை பிரசுரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஊன்றுகோலின் உதவியுடன் மெல்ல நடந்து அறையை விட்டு வெளியே வந்தேன். பத்து மணியாகி விட்டது. இப்போதெல்லாம் விடிய எழும்ப முடியவில்லை. எழுந்தாலும் உடனே காலூன்றி நடக்க முடியாது முழங்கால்களை கைகளால் நீவிவிட்டு கால்களின் இறுக்கம் குறையத்தான் நடக்க முடிகிறது. முழங்காலிலுள்ள வலியையும் வேதனையையும் மருந்துகளால் சமாளித்துக் கொண்டு எழுபத்தைந்து வயதிலும் சோர்ந்து போகாமல் என் வேலைகளை நானே செய்யவேண்டும் என்று தினமும் போராடிக் கொண்டிருக்கிறேன்.

வவுனியாவில் இருக்கும் இந்த முதியோர் இல்லத்திற்கு வந்து நான்கு வருடங்களாகிறது. மற்றவர்களுக்கு பாரமில்லாமல் இருக்க வேண்டுமென்றுதான் இங்கு வந்தேன். நானும் சந்தோஷமாகயிருந்து இங்குள்ளவர்களுக்கும் ஆறுதலாக இருந்திருக்கிறேன். ஆரோக்கியமாய் இருக்கும்போதுள்ள தைரியம் உடல் தளரும்போது குறைந்துபோகிறது. ஏற்கனவே காயம் பட்ட காலில் முழங்கால் வலியும் சேர தாங்கமுடியாத வேதனையாக இருக்கிறது. மற்றவர்களின் உதவி தேவைப்படும் போது இழந்த என் உறவுகளின் அரவணைப்புக்கு மனம் ஏங்குகிறது.

“அம்மா எங்க போறீங்கள், கால் வலி எப்பிடியிருக்கு” உதவியாயிருக்கும் பெண் ராணி கேட்டாள்.

“ஒரேயடியாய் படுத்திருக்க கால் விறைக்குது. கொஞ்ச நேரம் நடக்கப்போறன்”

“சரி, வாங்கோ இந்த விறாந்தை நீளத்துக்கு இரண்டுதரம் நடந்திட்டு வருவம்”

அவளோடு நடந்து விட்டு களைப்பில் அங்குள்ள பெஞ்சில் அமர்ந்து முற்றத்தை நிமிர்ந்து பார்த்தேன்.

காலை நேரமானதால் அனேகமானோர் இளம்வெயிலில் நடந்து கொண்டும், மரங்களுக்கு கீழுள்ள பெஞ்சுகளில் அமர்ந்து கதைத்துக்கொண்டும் இருக்க சிலர் வேலியோரத்திலுள்ள பூமரங்களுக்கு தண்ணீர் விட்டுக்கொண்டு இருந்தார்கள். மரங்களில் மலர்ந்திருந்த பூக்களின் வாசனை காற்றோடு கலந்திருந்தது.

என்னைப்போல் விருப்பப்பட்டு வந்தவர்கள், வலுக்கட்டாயமாக கொண்டுவந்து விடப்பட்டவர்கள், வீட்டின் கஷ்டத்தில் வந்தவர்கள் என்று இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதையிருக்கிறது. அதிலும் பிள்ளைகளால் கைவிடப்பட்ட மனவேதனையின் புலம்பல்களைக் கேட்கும்போது மனம் தாங்காது துடித்துப்போகிறது. நானும் வயது போனநேரத்தில் இப்படியொரு இல்லத்திற்கு வருவேன் என்றோ என் கடைசிக் காலங்கள் யாருமில்லாமல் தனிமையில் முடியப்போகிறது என்றோ நினைத்துக்கூடப் பார்த்ததில்லை.

சொந்தஊரில், சொந்தவீட்டில், சொந்தங்களுடன் வாழ்ந்த வாழ்க்கை இன்று கனவு போலாகிவிட்டது. பரந்தனிலிருந்து பூநகரிக்கு போகும் பாதையிலிருந்து மேற்குப் பக்கமாகப் பிரியும் பாதையில் அமைந்திருக்கிறது குமரபுரம். முன்பக்கம் வீட்டுமனைகளாலும் பின் பக்கம் வயல்வெளிகளாலும் சூழ்ந்து காணப்படும் கிராமம். ஒரு ஏக்கர் வீட்டுக்காணிக்கு மூன்று ஏக்கர் வயல்காணி சொந்தமாக இருந்ததால் அங்குள்ளவர்கள் அதிகமானோருக்கு விவசாயமே தொழிலாகயிருந்தது. என் கணவரும் விவசாயமே செய்துவந்தார். அங்குள்ள முருகன் ஆலயத்திலிருந்து தவறாமல் அதிகாலை ஐந்து மணிக்கு அடிக்கும் கோயிலின் பெரியமணி ஊரையே எழும்பிவிடும். வீட்டுமுற்றத்திலிருந்து பார்த்தால் தெரியும் மணிக்கோபுரத்தை கும்பிட்டு வேலைகளைத் தொடங்குவது வழக்கமாக இருந்தது.

ஒரே மகன் மோகன் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தான். அவனைப் படிப்பித்து ஒரு நல்ல நிலைமைக்குக் கொண்டு வரவேண்டும். நாட்டுச் சூழ்நிலையால் நாம் படும் கஷ்டம் அவன்படக்கூடாது என்று நினைத்தோம். மூன்று மைல் தூரத்திலுள்ள ஆனையிறவில் இருந்து சண்டை நடக்கும்போது கூவிக்கொண்டு வரும் எறிகணைக்குப் பயந்து வீட்டில் இருக்க முடியாமல் அடிக்கடி இடம்பெயர்ந்து வேறு இடங்களுக்கு ஓடுவதும், சண்டை ஓய வீட்டுக்கு வருவதும், குண்டுபட்டு இடிந்த வீட்டைத் திருத்துவதுமாக எங்கள் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது.

விவசாயத்தையே நம்பியிருக்கும் மக்களுக்கு இடப்பெயர்வு ஒரு சாபக்கேடுதான். இடம் பெயர்ந்து போயிருக்கும்போது வருமானமில்லாமல் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறோம். திரும்பி வந்து புல்லு முளைத்து பத்தைக்காடாய் இருக்கும் வயலைத் திருத்தி விவசாயம் செய்து வருமானம் வரும்வரை கடன் வாங்கித்தான் செய்ய வேண்டியிருக்கிறது.

விவசாயம் செய்து கைநிறைய உழைத்து வசதியாயிருந்த காலமும் இருந்தது. நாட்டுப்பிரச்சனைகள் அதிகமான பின் எத்தனை தடைகள். மாரிமழையை மட்டுமே நம்பி விதைக்கும் வயல்கள். பசளை, மருந்துகள் தட்டுப்பாடு. உரிய நேரத்தில் போடமுடியாமல் நெல் விளைச்சல் குறைந்துவிடும். விளைந்த நெற்கதிர்களை அறுவடை செய்யமுடியாமல் எத்தனை தடவை இடம்பெயர்ந்து ஓடியிருக்கிறோம்.

பிரச்சனைக்குள்ளும் படித்துக் கொண்டிருந்தவனுக்கு முதல்தரம் அவன் விரும்பிய பல்கலைக்கழகம் கிடைக்கவில்லை. திரும்பவும் படித்துக் கொண்டிருந்தான். பரீட்சையும் நெருங்கிக் கொண்டு வந்தது. ஒரு கிழமையிருக்கும்போதே பிரச்சனைகள் தொடங்கி வானத்தில் கிபிர் வந்து சுற்றிச் சுற்றி தூரத்தில் குண்டுகளைப் போட்டு விட்டுப் போனது. பதட்டமாகயிருந்தது.

“எல்லா இடங்களிலும் எக்ஸாம் நடக்கிறதால ஸ்கூலுக்கு குண்டு போடமாட்டான்”

மோகன் தைரியமாகச் சொன்னாலும் பயம் போகவில்லை.

பரீட்சை முதல்நாள். மோகன் ஸ்கூலுக்குப்போக, வயலுக்கு உரம் வாங்க வேண்டுமென்று இவரும் பக்கத்து வீட்டு லிங்கத்தோடு கிளிநொச்சிக்குப் போய்விட்டார். நல்லபடி பரீட்சை எழுதிவிட்டு வரவேண்டுமே என்று முருகனைக் கும்பிட்டுக் கொண்டிருந்தேன். மதியம் இரண்டு மணியிருக்கும். வானத்தில் கிபிரின் சத்தம். வெலவெலத்துப் போனேன். எக்ஸாம் முடிந்திருக்குமா… இந்தமுறை நல்ல றிசல்ட் வரும் என்று நம்பிக்கையோடு சொன்னானே…குழம்பினால் தாங்கமாட்டானே என்று நினைத்தபடி அவனுக்காகக் காத்திருந்தேன்.

ஒருபாடம் நல்லபடி எழுதிய சந்தோஷத்துடன் அவன் வந்தான் உரம் வாங்கப் போனவர் வரவேயில்லை. உரம் வாங்கி லிங்கத்திடம் கொடுத்துவிட்டு வேலை செய்பவனை வரச்சொல்ல ஐம்பத்தைஞ்சாம் கட்டைக்குப் போனவரின் தலையில் குண்டு இடியாய் விழுந்து என் வாழ்வையும், மோகனின் எதிர்காலக் கனவையும் பறித்து எங்களை அநாதையாக்கியது. இடிந்துபோனோம். அதிலிருந்து மீண்டுவர முடியவில்லை. அப்பாவின் இழப்பால் அதிர்ந்து போயிருந்த அவனால் மற்ற பரீட்சைகளையும் எழுத முடியவில்லை. என்ன செய்யப் போகிறோம் என்று தெரியாமலே நாட்கள் கடந்து போனது.

“படிப்பை விட்டிடாத மோகன் படிச்சு அடுத்த வருசம் எக்ஸாமை எடு”

“என்னால படிக்க ஏலாமலிருக்கு. இனி படிப்பு செலவுகளையும் ஆர் பார்க்கிறது கொஞ்சநாள் போகட்டுமம்மா” என்றான்.

வயலைக் குத்தகைக்கு கொடுத்தும் சொந்தக்காரரின் உதவியுடனும் கொஞ்சநாள் போனது. எத்தனை நாட்கள் இப்படியே இருப்பது. மோகனின் படிப்பும் குழம்பி விட்டது. ஏதாவது செய்யவேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது மோகனே முடிவு எடுத்தான்.

“அப்பா மாதிரி நானும் வயல் செய்யப் போறன்”

“வேண்டாமடா, தொடர்ந்து படிக்காவிட்டாலும் ஏ.எல் றிசல்ட்டோட ஏதாவது வேலைக்குப் போகலாம்தானே”

நான் எவ்வளவு சொல்லியும் அவன் கேட்கவில்லை. முன்பு அப்பாவோடு நேரம் கிடைக்கும் போதெல்லாம் வயலுக்குப் போவான். படிப்பு குழம்பிவிடுமோ என்ற கவலையில் எத்தனை நாள் தடுத்திருப்பேன்.

“படிக்கிற பிள்ளையை ஏன் வயலுக்குக் கூட்டிக்கொண்டு போறீங்கள். படிப்பைக் குழப்பிப் போடுவான். அவன் படிக்கட்டும்”

“அவன் படிப்பான். அவனுக்கும் வயல்வேலை எல்லாம் தெரிஞ்சிருக்க வேணும்தானே. வரட்டும்” என்பார்.

சின்னவயதிலிருந்து வயலோடும் வரம்போடும் வளர்ந்தவனுக்கு அதுவே பிடித்த தொழிலாகி விட்டது.

ஆரம்பத்தில் வயலோடு மிகவும் கஷ்டப்பட்டான். அவனின் கடும் முயற்சியும் முன்னுக்கு வரவேண்டும் என்ற ஆர்வமும் ஆறுதலைத் தந்தது. சொந்தக்காணியோடு குத்தகைக்கும் எடுத்து வயல் செய்து கையிருந்த பணத்தோடு கடன் வாங்கி ஒரு உழவுயந்திரத்தையும் வாங்கினான். தன் வேலை தவிர மற்றவர்களுக்கும் வயல் உழுது கொடுத்தும் பொருட்களை ஏற்றி இறக்கியும் ஓய்வின்றி உழைத்தான்.

“எப்ப பார்த்தாலும் ஓடிக்கொண்டிருக்கிறாய் நேரத்துக்கு சாப்பிட வாடா”

“அம்மா, உழைக்கிற நேரம்தானே உழைக்கலாம். எப்பவும் நீங்கள் வசதியாய் சந்தோஷமா இருக்கவேணும்”

என்ன சொன்னாலும் எல்லாம் உங்களுக்காகத்தான் என்பான்.

சின்னச் சின்ன விருப்பங்களைக்கூட கவனித்து என்னைச் சந்தோஷப்படுத்துவான். அவனுக்கு மனைவியாய் வந்தாள் மைதிலி. சின்னவயதிலிருந்தே தாயில்லாமல் இரண்டு அண்ணாக்களுடன் வளர்ந்தவள் வந்ததும் என்னோடு ஒட்டிக்கொண்டாள். மோகனோடு சேர்ந்து என்னையும் தாங்கினாள். மைதிலி எங்கள் வீட்டுக்கு வந்தபின் நிறைய மாற்றங்கள். அதன்பின் வந்த இடப்பெயர்வின் நேரங்களில் லண்டனிலிருக்கும் மைதிலியின் மூத்த அண்ணாவின் உதவிகள் கிடைத்தது.

ஊரிலிருக்கும் இரண்டாவது அண்ணாவும் அடிக்கடி வந்து போவார். பிள்ளையில்லாத குறையைத் தீர்க்க கிரி பிறந்தான்.அவனுடைய விசேஷங்களுக்கு இரண்டு அண்ணாக்களும் பிள்ளைகளோடு வந்து சந்தோஷமாய்க் கொண்டாடினார்கள். தனிப்பிள்ளையாய் வளர்ந்தவனுக்கு மைதிலி மூலம் சொந்தங்கள் கிடைத்தது. ஓரளவு வசதியான வாழ்க்கை. இது போதும் இவர்களின் நிழலில் நிம்மதியாக இருந்துவிட்டு போய்ச் சேர்ந்துவிடுவேன் என்று நினைத்தேன்.

ஆனால் பிரச்சனை திரும்பவும் தொடங்கியது. வழமைபோல் சண்டை முடிய திரும்பிவரலாம் என்று நினைத்துத்தான் ஊரை விட்டுப் போனோம். அது இறுதிப்போர் என்றோ…. எல்லாச் சொத்துக்களையும், சொந்தங்களையும் இழந்து அநாதையாய் நிற்பேன் என்றோ நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. நடந்த சண்டை சந்தோஷமாயிருந்த எங்கள் வாழ்க்கையையே சிதறடித்து என்னை யாருமில்லாத அநாதையாக்கி இன்று இந்த முதியோர் இல்லத்தில் முடக்கிவிட்டது.

அன்று மூன்று வயதுக் குழந்தையோடு உயிருக்குப் பயந்து ஒவ்வொரு இடமாய் ஓடிய ஓட்டம் இறுதியில் முள்ளிவாய்க்காலில் வந்து நின்றது. மறுபக்கம் போக வரிசையாக நிற்கும்போது எங்கிருந்தோ பாய்ந்து வந்த குண்டு அந்த இடத்தில் வந்து வெடித்தது . எங்கும் புகைமண்டலம் அதிர்ந்துபோனேன். எனக்கு முன்னால் குழந்தையோடு நின்ற மோகனை, மைதிலியைக் காணவில்லை.

“மோகன்” என்று அலறியபடி கால்கள் மடிய நிலத்தில் விழுந்தேன். முழங்காலிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

காயப்பட்டவர்களோடு என்னையும் வாகனத்தில் ஏற்றி வவுனியா ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார்கள். மோகன், மைதிலி, குழந்தைக்கு என்ன நடந்தது ஒன்றும் தெரியவில்லை. ஒவ்வொரு நிமிடமும் அவர்களை நினைத்து துடித்துக் கதறியதை நினைக்க இப்பவும் தேகம் நடுங்கியது.

“அம்மா, நேரமாச்சு சாப்பிட வாங்கோ” ராணியின் குரல் கேட்டது.

கண்களிலிருந்து பெருகிய கண்ணீரைத் துடைத்தபடி நிமிர்ந்து பார்த்தேன். முற்றத்தில் யாரையும் காணவில்லை. வெயில் கொழுத்திக் கொண்டிருந்தது. வீசும் காற்றும் வெப்பத்தோடு வந்து முகத்தில் மோதியது. ஒரு மணிக்குமேல் வரும். எல்லோரும் சாப்பிட போய்விட்டார்கள். மதியம் சாப்பிட்டு வந்து என் கட்டிலில் அமர்ந்தேன்.

பக்கத்துக் கட்டில் வெறுமையாக இருந்தது. அறைக்குள் இருந்த இரண்டு கட்டிலில் நானும், எண்பத்தைந்து வயது பூரணி ஆச்சியும் இருந்தோம். ஒரு கிழமையாய் மூச்சு இழுத்து வேதனைப்பட்டுக் கொண்டிருந்த ஆச்சிக்கு மூன்று நாட்களுக்கு முன் கடைசி மூச்சும் நின்று விட்டது. யாருமில்லை என்பதால் இங்கேயே இறுதிக் காரியங்கள் நடந்தது. நாளைக்கு எனக்கும் இப்படித்தானே நடக்கும். தைரியமாய் இருந்தாலும் மரணம் என்ற சொல் மனதை அசைத்துவிடுகிறது. கட்டிலில் சரிந்து கண்களை மூடிக்கொண்டேன்.

திடீரென கதவு திறக்கும் சத்தம் கேட்டு எழுந்தேன். சக்கரநாற்காலியில் அமர்ந்திருந்த எழுவது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணுடன் ராணி உள்ளே வந்தாள். அடுத்த கட்டிலின் விரிப்புகளை மாற்றி பக்கத்திலுள்ள அலுமாரியில் கொண்டுவந்த பொருட்களை வைத்தாள்.

“அம்மா, இது சிவகாமியம்மா இனி உங்களோட இருப்பா. ” என்று சொல்லிவிட்டுப் போனாள்.

சிவகாமியை நிமிர்ந்து பார்த்தேன். கோபம், கவலை கலந்து முகம் இறுகிப் போயிருந்தது. அறையைச் சுற்றி வெறுப்போடு பார்த்த பார்வையில் விருப்பமில்லாமல் வந்திருப்பது தெரிந்தது. சுற்றிய பார்வை என்மீது நிலைத்தது.

“உங்களுக்கு பிள்ளைகளில்லையா”

“ஒரு மகன். இப்ப உயிரோடயில்லை” என்றேன்.

“எனக்கு மூண்டு பேர். உயிரோட இருக்கினம். இரண்டுபேர் லண்டனில. ஒருத்தன் ஊரில இருக்கிறான். மருமகளுக்கு விருப்பமில்லையெண்டாலும் அவனோடதான் இவ்வளவு நாளும் இருந்தன். இப்ப விழுந்து கால் உடைஞ்சு நடக்கேலாமல் படுத்தவுடன நான் பாரமாய் போயிட்டன். வெளிநாட்டில மற்றவை சொகுசாயிருக்க நான்தான் நெடுகவும் பார்க்கிறதோ எண்டு மருமகள் மகனோட சண்டை. மற்றவைக்கும் பார்க்க கஷ்டமாம். எல்லாருமாய் சேர்ந்து கதைச்சு காசு கட்டி இங்க கொண்டு வந்து விட்டிட்டினம். மகளைப் போல மருமகள் கிடைக்க நாங்களும் குடுத்து வைக்கவேணும். எனக்கு கிடைச்சதுகள் சரியில்லை என்ன செய்யிறது” குரல் உடைய சொல்லிவிட்டு நாற்காலியை கதவுப்பக்கம் நகர்த்திச்சென்றாள்.

எனக்கு என் மைதிலியின் ஞாபகம் வந்தது.

எல்லோரையும் இழந்துவிட்டேன் என்று நினைத்திருக்க மைதிலியை மீண்டும் ஆஸ்பத்திரியில் கண்டேன். என்னைத்தேடி அலைந்து மூன்று கிழமைக்குப்பின் வந்திருந்தாள். அவளின் கோலம் என்னுள் கலவரத்தை ஏற்படுத்தியது. தலை கலைந்து, பொட்டழிந்து, கண்சிவந்து அழுகையை அடக்க பெரும்பாடுபட்டுக் கொண்டிருந்தாள்.

“என்னம்மா” என்றேன்.

“அவருக்கு தலையில காலில எல்லாம் காயம். பிள்ளை போயிட்டான்” விம்மி வெடித்துக் கதறினாள்

அந்த பிஞ்சுக்குழந்தை என்ன பாவம் செய்தது. அழமுடியாமல் உறைந்து போனேன்.

“மோகன் எங்கயிருக்கிறான். அவனைப் பார்க்கவேணும்”

என் காலின் காயம் ஆறி அவனைக்காண ஒருமாதமானது. தலையிலும் காலிலும் கட்டுப்போட்டு படுத்திருந்தவனைப் பார்த்து துடித்துப்போனேன்.

சுகப்பட்டு வெளியில் வந்தாலும் தலையில் சின்ன சின்ன ஷெல் துண்டுகள் முழுவதும் எடுக்க முடியாமல் இருந்தது. அடிக்கடி தலைவலியால் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தான். சனங்களை ஊருக்கு போகவிட்ட பின்பும் எங்களால் வவுனியாவை விட்டுப் போக முடியவில்லை. மைதிலியின் அண்ணா வீடு எடுத்து தந்து இங்கேயே இருந்தோம். மகனோடு ஆஸ்பத்திரியும் வீடுமாய் அலைந்தேன். சுகப்படுத்த முடியவில்லை. தாங்கமுடியாத தலைவலியோடு மூன்று வருடங்கள் துன்பப்பட்டுப் போய்ச் சேர்ந்தான்.

அவனின் இழப்பு தீராத துன்பம் என்றால் மைதிலியைப் பார்க்கும்போதும் தாங்க முடியவில்லை.. வாழவேண்டிய வயதில் எல்லாம் இழந்து தனிமரமாக இருக்கிறாளே….

“புருசனோ பிள்ளையோ ஒண்டாவது இருந்திருக்கலாம். கடவுள் ஏன் உனக்கு இந்தக் கொடுமையைச் செய்தான்” அவளைக் கட்டிக்கொண்டு அழுதேன்.

“நீங்களாவது இருக்கிறீங்கள் தானே மாமி” என்றாள்.

அதே அன்பு அக்கறையோடு என்னைக் கவனித்துக் கொண்டாள். அவளை நினைத்து அண்ணாக்கள் படும் துன்பத்தைப் பார்க்க முடியவில்லை. ஒரு வருடம் முடிந்தபின் தங்களுடன் வரச்சொல்லிக் கேட்டும் அவள் போகவில்லை.

“நான் உங்களோடயே இருக்கிறன் மாமி” என்றாள்.

“என்ர காலம் முடிய தனிய எப்பிடியிருப்பாய். அண்ணாவோட போய் இரம்மா. முப்பத்தைஞ்சு வயசுதானே. இன்னொரு கலியாணம் செய்யலாம்”

“வேண்டாம். உங்களை விட்டிட்டு நான் போகமாட்டன். பிறகு போறன்” என்றாள்.

“வயது போனபிறகு நிரந்தரமாய் அண்ணாவோட இருக்கப்போறியே. உனக்கெண்டு ஒரு வாழ்க்கை வேணும் மைதிலி. பிள்ளை குட்டிகளோட நீ சந்தோஷமாயிருக்க வேணும். நான் சொல்லுறதைக் கேளு”

மறுத்து விட்டாள். அவளை அப்படியே விடமுடியாமல் தவித்தேன். நாட்கள் போகப்போக அவளின் அண்ணாக்களுக்கும் என்மீது மனக்கசப்பு வருவதை உணர்ந்தேன். அவளை அவர்களிடம் அனுப்பவேணும். யோசித்தேன்.

ஒருநாள் அவர்களிடம்,

“என்னைப்பற்றி கவலைப்படாமல் மைதிலியைக் கூட்டிக்கொண்டு போய் கலியாணம் செய்து வையுங்கோ. ஒரு உதவி மட்டும் எனக்கு செய்யுங்கோ என்னை ஒரு முதியோர் இல்லத்தில சேர்த்து விடுங்கோ. எனக்கும் ஒரு நிழல் வேணும்” என்றேன்.

“இதுக்கு நான் சம்மதிக்கவே மாட்டன். உங்களை எப்பிடியெல்லாம் வைச்சிருக்க வேணுமெண்டு மோகன் ஆசைப்பட்டார். நான் இருக்கிறன்தானே. என்னோட இருங்கோ” என்றாள் மைதிலி.

“வேண்டாமம்மா. பிள்ளைகள் போனதையே தாங்கேலாமல் இருக்கிறன். உன்னையும் இந்தக் கோலத்தில பார்த்து துடிக்கவே… உனக்கொரு வாழ்க்கை கிடைச்சால் அந்த சந்தோஷத்தில நான் நிம்மதியாய் இருப்பன். என்னை விட்டுப் போம்மா. இனி எந்த தொடர்பும் வேண்டாம்”

பிடிவாதமாய் அவளை அவர்களோடு அனுப்பி வைத்தேன். அன்று அழுது கொண்டு போன மைதிலியை அதற்குப்பிறகு நான் பார்க்கவேயில்லை. பார்க்கவேணும் என்ற விருப்பத்தையும் மனதில் போட்டு பூட்டி வைத்தேன். ஊரிலுள்ள அண்ணா ஒழுங்கு செய்து இந்த இல்லத்திற்கு வந்து சேர்ந்தேன்.

இன்று நினைவுகளெல்லாம் என்னை மீறி வெளியே வந்து என்னைக் கலங்க வைத்து விட்டது. இந்த நான்கு வருடங்களில் மைதிலி திருமணம் செய்திருப்பாளா… குழந்தைகள் இருக்குமா… என்னை மறந்திருப்பாளா…. மைதிலியின் நினைவாகவேயிருந்தது. அவளைப் பார்க்கவேணும் போலிருந்தது. உடல் சோர்ந்து ஒரு வேலையும் செய்ய முடியவில்லை. விட்டத்தைப் பார்த்தபடி படுத்திருந்தேன்.

“அம்மா உங்களுக்கு கடிதம்” ராணி ஒரு கவரைக் கொண்டு வந்து நீட்டினாள்.

இங்கு வந்த பின் எனக்கு வரும் முதல் கடிதம். பரபரப்போடு வாங்கிப் பிரித்து யாரென்று பார்த்தேன். மைதிலி. எத்தனை நாட்களுக்குப்பின் என்னை நினைத்து எழுதியிருக்கிறாள். ஆவலோடு வாசித்தேன்.

மாமி, எப்பிடி இருக்கிறீங்கள். நாலு வருசமாய் உங்களைப் பார்க்க முடியவில்லை. இன்றுதான் நீங்கள் இருக்குமிடம் எனக்குத் தெரிந்தது. அண்ணா சொல்லவேயில்லை. நீங்கள் எல்லோரும் ஆசைப்பட்டபடி நான் திருமணத்திற்கு சம்மதம் சொன்ன பிறகுதான் சொன்னார். இவ்வளவு நாளும் என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. இப்ப பார்த்திருக்கிற வரதனும் மனைவியை இழந்தவர். ஆறுவயசில ஒரு மகன் இருக்கிறான். அவனைப் பார்க்க எங்கட கிரியைப் பார்த்ததுபோல இருந்தது மாமி. அவனைப் பார்த்தபிறகு மறுக்கமுடியேலை. என்ர பிள்ளை திரும்பவும் என்னட்ட வந்திட்டான். ஒருநாளைக்கு உங்களைப்பற்றியும் வரதனுக்கு சொல்லி அவர் சம்மதத்தோட உங்களைப் பார்க்க மூண்டுபேரும் கட்டாயம் வருவோம். நீங்கள் சுகமாக இருக்கவேணும் மாமி. அன்புடன் மைதிலி.

தனிமை கரைந்து கண்ணீராய் வெளியேற கடிதத்தை நெஞ்சோடு அணைத்துக்கொண்டேன். உடலில் புது இரத்தம் பாய்ந்தது போலிருந்தது.

நிறைவு..

விமல் பரம் | லண்டன்

நன்றி : ஞானம் சஞ்சிகை

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More