பாடசாலைத் துப்பாக்கி
பட படண்ணு வெடிக்க
வாடி விழுகின்றன
வசந்த கால மலர்கள்.
சீருடை அணிந்து
சிரித்து வந்த பிள்ளை
மார்பில் குண்டுடன்
மரணித்துப் போகிறது.காவல் துறை வரும்
கச்சிதமாய் விசாரிக்கும்
சாவுக்குக் காரணத்தை
சட்டத்துக்கு சமர்ப்பிக்கும்
அடிக்கடி அரங்கேறும்
அராஜகச் செயல் கண்டு
இடிக்கிறது உள் மனது
ஏன் இந்த நிலை என்று.
கல்வி என்ற பெயரில்
கலாச்சாரம் அழித்தால்
கொல்லும் மன நிலையும்
கொடுக்கும் அச் சூழல்
செவ்வாயில் இறங்க
சிந்திக்கும் நாட்டில்
ஒருவாய் ஊட்டி அன்பு
உள்ளத்தில் தராததால்
தெருவாய் அலைகின்ற
தெளிவு பெறாப் பிள்ளைகள்
வெறியாய்ச் சுடுகின்றார்
வெறுப்பைக் காட்டுகிறார்.
காட்டுகின்ற கார்ட்டூன்கள்
கல்லாக்கும் உள் மனதை.
ஆட்டங்களும் Gameகளும்
அதற்குத் தீ வளர்க்கும்.
மூட்டும் வெறித்தனத்தை
போட்டிருக்கும் போதைகள்.
வேட்டுக்கள் வெடிப்பதனை
விலக்குவது மிகக் கடினம்.
யாருக்கு அடித்தாலும்
ஈராக்கில் அடித்தாலும்
பாருப்பா வலிக்குமென்று
படிப்பிக்கும் சில நிகழ்வு.
இறந்து போன ரோஜாக்காய்
இதயம் வலிக்கிறது.
அறுந்து போன பண்பாட்டின்
அவலமான விளைவு இது
Mohamed Nizous
நன்றி : tamilcnn.lk/archives