Thursday, May 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் நினைவுக்கல் | சிறுகதை | ரேணுகாசன் ஞானசேகரம்

நினைவுக்கல் | சிறுகதை | ரேணுகாசன் ஞானசேகரம்

11 minutes read

வானம் பார்த்த பூமியென அந்த புனிதக்கல் உறவினரின் வருகையில், அவர்களின் கண்ணீரில் நனைந்திடக்காத்து கிடக்கின்றது. ஒரிரு முறை மட்டும் தீப ஒளி ஏற்றப்பட்டு நினைந்தழுத நினைவில் நினைவுக்கல், பின்னர் அந்தப் புனிதக்கல் அதிபயங்கர கல்லாக மாறியது. அரச இயந்திரத்தாலும் அதற்காக வேலை செய்யும்மனித மாண்பற்ற உயிர்களாலும் இன்று கூட அந்த புனிதக்கல் தீண்டத்தகாத திண்மமாய் போனது.

சம்பூர் மண்ணில் பல தமிழினப் படுகொலைகள் நடந்தேறின. அவற்றுள் இருநூறுக்கும் மேற்பட்டஅப்பாவிகளை வேட்டையாடிய படுகொலையின் நினைவே இந்தக்கல். “ 07.07.1990 இல் படுகொலைசெய்யப்பட்ட அப்பாவி பொதுமக்கள் நினைவாக…” எனும் மரணித்த வலிமிகு வாசகத்தோடு தனித்துதவித்துக் கிடக்கிறது.

ஊர் கூடி உரிமை கோரவேண்டிய இந்நினைவு நாள் ஏனோ உணர்வற்று போனது. இறைவா எமக்கேன் இம்மாபெரும் தண்டணை. ஆடிப்பாடித் திரிந்த சம்பூரின் இறக்கைகளை துப்பாக்கியும் அரிவாளும் மாறி மாறிவெட்டியும், வெடி வைத்தும் அடக்கிய கொடூர நாளும் இன்றுதான் வந்தது.

நினைக்கையில் உதிரம் உறையும், அழுகையில் கண்ணீரும் ஊற்றாய் பெருகும் மனத்திடையே வலியும் கூடும்அந்நாளை மறந்திட முடியாத நினைவுகள் சூழ்ந்தபடியே சுபா நடைப்பிணமாக அலைந்தான்.

கந்தக காற்றின் வாசமின்றி சுதந்திர பறவைகளாய் சிறகடித்த காலமது. காற்றின் நாவில் தாகம் நிறைந்துகிடந்தது. உடலைத் தழுவிச் செல்லும் காற்று தேகத்தின் ஈரப்பதனை கடன் கேட்டு கோபித்து கொண்டேவெப்பத்தை இறக்கி விட்டுச் சென்றது.

புற்களும் மரஞ் செடி கொடிகளும் இலையுண்ணிகளின் உமிழ்நீரில் கொஞ்சம் ஈரம் பறித்து உயிர் வாழ்ந்தபருவமது. எங்கும் ஆதவனின் தீப் பார்வை ஈரலிப்பை உறிஞ்சிய போதும்,  செழிப்பாய் வாழ்ந்த கிராமத்தில், ஏதோ பெரும் சத்தம்

“பொட்ட இது… சனங்களெல்லாம் ஓடுதுவள்… என்னென்று பாரன்…”

“அம்மா…. ஆமி வாறானாம்..”

“எவ்விடத்தில பொட்ட ஆமி வாறானாம்..”

“நாலவலடிச் சந்தியால வந்து நொளம்பு இலுப்பைக்கிட்ட வந்திட்டானாம்…”

“எங்க பொட்ட நம்மட பயல் ஒரிடத்தில நிக்கமாட்டானே… தேடிப்பாரன் …”

“இந்த நிக்கிறான் அம்மா..”

“விட்டுறாத ஓடிடுவான் கவனமா பாத்துக்க..”

“சரி அம்மா ஏன் அவன் ஓடப்போறான்..”

“ஆமி என்டா எல்லாருக்கும் பயம் தானே அவனும் ஓடிடுவான். அதால அவனுக்கு புடிச்ச முருங்க காயும்மாசியும் போட்டு கறி ஆக்கியிருக்கன் என்று சொல்லு..”

“ சரி சொல்லுறன்”

“ சுபா அம்மா ஒனக்காக ஏதோ செய்திருக்காவாம் வரட்டாம்…”

என வாய் மொழிந்த வார்த்தை அவன் காதினுள் புக முன்னரே, அரச இயந்திரத்தின் குழல் மொழியின் அலறல்அவனின் மனதில் பெரும் பயத்தை உண்டுபண்ணியது.

சம்பூரை நோக்கிய பெரும் படை கொண்ட அரச இயந்திரத்தின் நகர்வை மிக மிக அண்மையில் அவதானித்தமக்கள் உயிரை காக்க அங்கும் இங்கும் பயத்தில் அலைமோதினர்.

அலைமோதும் மக்களைப் போலவே சுபாவும் அவனின் இருப்பிடத்தின் அண்மையில்  இராணுவத்தின்நகர்வை மிக அண்மையதாக அவதானித்தான். பார்வைக் கதிர்கள் பட்டுத்தெறிக்கும் தூரத்தில் எதிரியின்நடமாட்டம் இருந்தது.

அந்நகர்வை கண்ணுற்ற கணத்தில் அரச இயந்திர துப்பாக்கிகள் கந்தக குண்டுகளை வெளியேற்றதொடங்கின. உயிரைக் குடிக்கும் அந்த ரவைகளின் சத்தம் கேட்ட மாத்திரத்திலேயே தன்னிலை மறந்தான். தாயை மறந்தான். உற்றார் உறவினரை மறந்தான். மனசு சொன்னபடி, கால்கள் ஓடிய திசையில் ஊரை விட்டுகாட்டை நோக்கி ஓட எண்ணினான்.

அரச இயந்திரம் அதன் மொழியில் பொழிந்தே தள்ளியது. எங்கும் மக்கட் கூட்டம் அலைமோதி அங்கும்இங்கும் முட்டி மோதியது. கணவனை தேடிய மனைவியும், பிள்ளைகளை தேடும் தாய்தகப்பனும், அம்மாவைதேடி அழும் பிள்ளைகளும் மற்றும் வயோதிபரை தூக்கியபடி ஓடுபவர்காளாக பெரும் அவலத்தோடும்கண்ணீரோடும் அத்தருணம் உளத்தை நடுங்கச் செய்தது.

வெடியின் சத்தமும் அது ஊடுருவி வரும் வேகமும் கேட்ட சுபா. இனி இங்கு நிற்பது சரியில்லை என்பதைஉணர்ந்து உறவுகளை விட்டுத் தனித்தே ஓடத்தொடங்கினான். நிழல்வாகை மரத்தடியில் நிலை தடுமாறியசனத்திரளில் நுழைந்து தனித்தே உயிர்ப்பயத்தின் உச்சம் அவனை விரட்ட ஓடலானான்.

மீசை அரும்பாத வயது. வயதுக்கு மிஞ்சிய தோற்றம். சுறுசுறுப்பான தேகம். எதிரியின் வருகை அவனைபெரும்பாலும் துன்புறுத்தியது. உண்மையில் அவனோ    தாய் தந்தையர் அரவணைப்பில் இருக்கவேண்டியவன். ஆனால் உயிரை வதைக்கும் பயம் அவனைத் துரத்த, வீட்டை விட காடுகளே தனக்கானபாதுகாப்பை, தனது பயத்தை விரட்டிடும் என்ற துணிவில் அதை நோக்கி அவன் கால்கள் பறந்தன.

தாயும் தந்தையும் உற்றமும் சுற்றமும் கொடுத்திராத பாதுகாப்பை காடுகள் தரும் என்ற நம்பிக்கை அந்தப்பிஞ்சு மனதில் அசையாத துணிவும் நங்கூரமிட்டது. நிழல்வாகை தாண்டி கூழாவடி தொட்டு கல்லடிக்காடுகடக்கின்றான். அப்போது தன் உறவினர் பலரை கண்டும் கேட்டும் விரைகிறான்.

அவர்களுடனான தன் கடைசி உரையாடல் என்பதை அந்த இளம் வயது அப்போது அறியவில்லை. அவர்களைதான் காண்பது இதுவே இறுதி தருணமென அவனது மனசும் ஒருபோதும் எண்ணியதில்லை.

ஊரை துறந்து கானகத்திடையே தஞ்சம் புகுந்தனர் அப்பாவித் தமிழர்கள். அவர்களோடு சுபாவும் தன்னைகாப்பாற்றிக் கொள்ள கானகத்திடம் சரண்டைந்தான். தனது அண்ணாமார்களுடன் ஓரிடம் தரித்து நின்றான். அவ்வழியால் வந்த இவனது நெருங்கிய உறவினரும் நண்பர்களும் இவனை அழைத்துக் கொண்டு கொக்கட்டி, தொடுவான் குளம் நோக்கிப் பயணப்பட எண்ணினர்.

உப்புக்காற்றின் ஈரம் உதட்டிடையே உவர்ப்பை தந்திட, கடற்கரையை தவிர்த்து மத்தளமலை மீதேறிமத்தளமலையானை தமக்கு துணையாக வேண்டி, கோணநாதனை வணங்கினர். மத்தள மலை அடைந்து, அவ்விடம் அடர்ந்தே செழித்த மரத்தை நாடி, அதன் உச்சிவரை ஏறி அரச இயந்திரத்தின் நகர்வைஉற்றுநோக்கி எத்திசையில் பயணிப்பது என்பதை நன்கே கணித்தபடி அவர்கள் புறப்பட தயாராகினர்.

மத்தளமலை கடந்ததும் சூடைக்குடா கிராமத்திற்குள் செல்வதை தவிர்த்தபடி மனிதனின் இறுதிச் சடங்குநடக்கும் இடத்தில், மாந்தர்கள் நீண்டு நெடிய தூக்கம் தாலாட்டும் உயிரற்ற உடல்களின் உறைவிடத்தே சிறுஆறுதலோடு கால்கள் ஓய்வெடுத்தன.

சுபாவை அழைத்து சென்ற மூவருக்கும் கொக்கட்டி, தொடுவான் குளம் செல்வதே நோக்கமாக கொண்டனர். அவ்வாறே நகரும் போது  உலங்கு வானூர்தி ஒன்றின் இரைச்சல் மிக அண்மையில் கேட்ட நொடிப் பொழுதில்காட்டின் எல்லை தாண்டி, மிகவும் தாழ்வாக பறந்தது. இவர்களை கண்டதும் வானூர்தி துப்பாக்கிகள் இயங்கதொடங்கின.

“டேய் ஓடுங்கடா அடிக்கப் போறான்..” என்றதும்

நாலா பக்கமும்  சிதறி ஓடி தமக்கான பாதுகாப்பை உறுதி செய்தனர். உலங்கு வானூர்தி ஒரு வட்டமாக வலம்வந்து மீண்டும் வருவதற்குள் தம்மை சுதாகரித்தபடி எழுந்து ஒவ்வொருவரும் மற்றவர்களை தேடலாயினர்.

“எங்கடா சுபாவ காணல…”

“வாங்க தேடிப் பார்ப்போம்..”

“இதுக்குள்ளால தானே ஓடினவன்..”

“சின்னப் பயல் தானே பயந்து மறைவாக இருப்பான்..”

“காயம் பட்டானோ…”

“இல்ல இல்ல அப்படி ஒண்ணும் இருக்காது..”

என மூவரும் கதைத்தபடி தேட்டும் போது, உயிர்ப் பயம் முழுவதும் குடிகொண்டவனாய் பெருமூச்சை விட்டபடிபற்றைக்குள்ளால் வெளியே வந்தான் சுபா.

“வா சுபா கெதியா போவோம்..”

“எங்க அண்ண இனி போறது…”

“காட்டுல உள்ள ஆமி ஊருக்க வரமுன்ன நாம கொக்கட்டிக்கு போயிடுவம்..”

“சுபாவ பாத்தா பயந்தவன் போல இருக்கிறான் என்ன செய்றது…”

“சுபாவ இந்த சனத்தோட விட்டிற்று போவோமா..”

“இல்ல மச்சான் அவனையும் கூட்டிற்றே போவோம்..”

“இல்லடா காட்டில ஆமிய கண்டு கத்திற்றான் எண்டா…”

“இல்ல இல்ல என்ன நடந்தாலும் அவனக் கொண்டே போவோம்…”

“அப்ப சரி வாங்க கெதியா சுவாந்தரைய கடந்து போவோம்..”

என தமது பயணத்தை விரைவுபடுத்தியபடி காட்டினுள் புகுந்து விலங்குகளின் வழித்தடத்தில் நடக்கலாயினர். அப்போது மீண்டும் உலங்கு வானூர்தி மிக மிக தாழ்வாக பறந்து வட்டமி்ட்டது.

“மச்சான் ஆமி கிட்ட வந்திட்டான் போல..”

“ஏன் மச்சான் அப்படி சொல்லுற…”

“வருகிற ஆமிக்கு பாதுகாப்பாக தான் இந்த கெலி பறக்கிது..”

“நீ சொல்லுறது உண்மை தான் மச்சான்…”

“மாடெல்லாம் வெரண்டு ஓடி வருது பாரன்…”

“ஆமாட கொஞ்சம் கவனமாத் தான் போகணும்…”

“சத்தம் போட்டு கதைக்க வேணாம்…”

“ஓம் ஓம்…”

என்ற படி ஒரு மரத்தில் ஏறி சுற்று முற்றும் பார்த்து விட்டு இறங்கினான் வாசன்.

மரத்தடியில் அமைதியாக இருந்த மற்றவர்களிடம் காதோடு இரைந்தபடி

“ஆமி நம்மள சுத்தி வாறன்.. “

“எத்தன பேர் இருக்கும்…”

“கொஞ்சம் கிஞ்சமில்ல … கறுக்கா பழுத்தமாதிரி வாறானுவள்..”

“அப்ப நாம என்ன செய்வோம்…”

“இந்த காட்ட விட்டு இப்ப வெளியில போக இயலாது…”

“என்ன செய்றது…”

“இந்த ஒத்த அடித் தடத்த விட்டு கொஞ்சம் தள்ளிப் போய் இருப்போம்..”

“நீ சொல்லுறதும் சரிதான், ஏனென்றால் இந்த வழியால தான் ஆமியும் வருவான் போல…”

“ஆமாம் மச்சான் கெதியா எழும்புங்க வந்திடப் போறான்…”

என இருந்த இடத்த விட்டு சற்றே மறைவான இடத்தில் மறைந்து இருந்தனர்.

எங்கும் மயான அமைதி. காற்றுக்கூட இலைகளை உரசிட முன்வராத தருணம் அது.  இலைவாய்களின் நாவில்ஈரப்பதன் அற்ற வரட்சி. இலைகள் சருகாகி உதிரும் காலம் ஆகையால் சிறு உயிரி நகர்ந்தாலும் “சரசரவென..” சத்தம் கேட்ட நேரத்தில், சரசர எனும் சத்தம் பெருமளவில் கேட்கத் தொடங்கின.

நிலத்தோடு நிலமாக படுத்தபடி யாவரும் சத்தம் வந்த திசையை உற்றுப் பார்த்தனர். ஆமியின் சப்பாத்துகால்கள் தெரிந்த மாத்திரத்தில் இதயம் பல மடங்கு வேகமாய் துடித்தன. அருகில் இருந்த சுபாவின்முகபாவனையை அறிந்தவ வாசன், சுபாவின் வாயை தன் கைகளால் இறுக பொத்திக் கொண்டார்.

வாயைப் பொத்தா விட்டால், அவன் ஆமியப் பார்த்தை பயத்தால் அழுது எல்லோரின் உயிருக்கும்ஆபத்தாகிடும் என்ற நோக்கிலே அப்படி செய்தார். சுமார் இரு மணி நேரமாக ஆமியின் நகர்வை அவதானித்தபின்னர், மெதுவாக எழுந்து சருகுகள் பாதங்களின் மிதிபடும் ஒலி எழாதவாறு மெல்ல மெல்ல ஊர்ந்துஅபாயத்தின் தடயத்தை கடந்த நிம்மதி பெருமூச்சை விட்டபடி கொக்கட்டியை நோக்கி நடக்கலாயினர்.

கொக்கட்டி எனும் பழம்பெரும் தோட்ட குடியிருப்பு. அதில் முடிசூடா மன்னனாக கொக்கட்டி கணபதி ஐயாவும், அவரது குடும்பமும் வசித்து வந்தனர்.

கொக்கட்டி ஆறு நன்னீரும் உப்பு நீரும் குசலம் விசாரிக்கும் செழிப்பான ஆறாகும். இங்கு இறால்களின்நர்த்தனம், நண்டிகளின் நாடகம், மீன்களின் இன்னிசையோடு பறவைகளின் ஆனந்தமும் கூடிய நெடியவரலாற்றைக் கொண்ட ஆறாகும்.

கொக்கட்டி இவர்களது தேர்வாக அமைந்தமைக்கு பல கரணியங்கள் உள்ளன. அடர்வனம், நீர்நிறை வளம், தோட்டஞ் செய் நிலம் அத்தோடு பால் தயிருக்கு குறைவிலாத பகுதி. மேலும் பாதுகாப்புக்கு நம்பிக்கை தரும்வனம்.கொக்கட்டி கணபதி ஐயா வாழும் இப்பகுதி சிறப்பாக, குலதெய்வ வழிபாடு இடம் பெறும் புனிதபிரதேசமாகும். குலதெய்வ வழிபாடோடு, கிராம தெய்வங்களை வழிபடுவதும் இங்கு மிகவும் சிறப்பாகநடைபெறும்.

கொக்கட்டி மடை என்றால் சம்பூர் மட்டுமல்லாது, சுற்று வட்டார கிராமங்கள் யாவும் மாட்டு வண்டி கட்டியும், கால்நடையாக சென்றும் கிராம தேவதைகளை மற்றும் காவல் தெய்வங்களை உருகி வழிபடுவர்.

ஊர் ஒன்றாக கூடி ஒற்றுமையோடு இந்த கிராம தெய்வ விழா நடைபெறும். ஆதலால் எந்த ஆபத்து வந்தபோதும் மக்களின் நிம்மதியான தெரிவு கொக்கட்டியே ஆகும்.

சுபாவும் அந்த மூவரும் கொக்கட்டியை நோக்கியே செல்லத் தொடங்கினர். அந்தக் குடியிருப்பைஅண்மிக்கையில் தீயில் ஏதோ எரியும் வாசத்தை காற்று சுமந்து வந்து சேர்த்து விட்டு சென்றது.

“ எதையோ எரிச்சுப் போட்டு போறானுகள்”

“ஆமாடா காத்துல சாம்பல் பறக்கிறத பாரன்..”

“எதற்கும் கொஞ்சம் அவதானமாக போவோம். ஏனென்றால் எதையாவது வெடிய கிடியபோட்டிருப்பானுவள்…”

“அதென்டா உண்மை தான்…”

கணபதி ஐயாவின் இருப்பிடம் நெருங்கியதும்

“அங்க பாருங்கடா அவர்ட குடிசை அப்படியே சாம்பலா போச்சு, நாசம் பிடிச்சவனுக எல்லாத்தையும் எரிச்சுப்போட்டானுக…”

“பாவம்டா அவர், சேர்த்து வெச்ச நெல்லு, இராசவள்ளி கிழங்கு மற்றும் பயிர்க் கொட்டை எல்லாம் போச்சு….”

“இங்கால வந்த பாரன் மீன்பிடிக்கிற வலையும் போச்சு..”

“அங்க என்னடா சுபா பொறுக்கிறா…”

“இல்ல உண்டியல் ஒடைஞ்சு கெடக்கிது, அந்த குத்தி காசும் சுடுது..”

“காச பொறுக்கி என்ன செய்யப்போறா…”

“வா போவோம்.. இனி இந்த இடமும் நமக்கு சரிவராது….”

“இனி எங்க போறது நாம…”

“ தொடுவான் குளம் போவோம் அங்க நம்மட மாமா குடில் வெச்சிருக்கார். அங்க போவோம்…”

நால்வரும் தாகம் தண்ணீரை குடித்து விட்டு தொடுவான் குளத்தை நோக்கி நடந்தனர். தொடுவான் குளம்மதுரை மரங்களால் அழகு மெருகேறிய குளம். அந்த மதுர மர நிழலில் குணம் ஐயா தனது தற்காலிக தேநீர்க்கடையோடு அமர்ந்திருந்தார். இவர்களது பசிக்கு அவரது கடை உணவை பரிமாறியது.

மூன்று நாட்களாக தொடுவான் குளத்தில் நிம்மதியாக இருந்து விட்டு, அரச இயந்திரம் அதன் வேட்டையைமுடித்து விட்டு சென்ற செய்தி அறிந்ததும் சம்பூரை நோக்கி சென்றனர்.

சுபா வீடு செல்ல முன்பே, சுபாவின் மரணச் செய்தி அவனது வீடெல்லாம் பரவியபடி, எல்லோரும் அழுதுபுரண்டனர். சுபாவை கண்டதும் அழுத கண்ணீர் ஆனந்த கண்ணீராக மாறியது. இருந்தும் ஊரெங்கும்அழுகையின் ஓலம் நீண்டு கொண்டே இருந்தது.

சுபா தான் கடந்து சென்ற உறவுகளை தேடி கல்லடி காடுவரை சென்று பார்த்தான். மூன்று நாளுக்கு முன்புதன்னோடு கதைத்து சிரித்த உறவுகள் பலரும் அரச இயந்திரத்தின் வேட்டையில் படுகொலைசெய்யப்பட்டதை நினைத்து மிகவும் வேதனைப்பட்டான்.

கத்தியால் கழுத்தறுக்கப்பட்டும், துப்பாக்கியால் துளையிடப்பட்டதும், தீயினால் எரிந்தும் எரியாத தன்உறவினரின் வெற்றுடல் கண்டு அழுது தீர்த்தது அந்த பிஞ்சு மனசு. தீராத வலியோடு இருந்தது அவனது இதயம்மட்டுமல்ல. சம்பூரின் ஒவ்வொரு வீட்டு வாசலும் அழுகையே ஏந்தியபடியே கண்ணீரின் கோலமாய் கிடந்தது.

காலத்தின் கால்கள் கடுகதியில் சுழன்றன.

.

நிறைவு..

.

– ரேணுகாசன் ஞானசேகரம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More