Sunday, March 3, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் போலி சித்திரங்கள் | சிறுகதை | கார்த்திக் கிருபாகரன்

போலி சித்திரங்கள் | சிறுகதை | கார்த்திக் கிருபாகரன்

8 minutes read

மாலை நேரத்தில் குடித்துவிட்டு சாலை ஓரத்தில் விழுந்து கிடப்பவர்களை பார்க்கின்றோம். ஆனால் இது என்ன கொடுமை பகல் பத்து மணிக்கு நல்ல வெயில். தார் வெந்து உருகும் வெப்பத்தில் இந்த சாலை ஓரத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இப்படி ஒருவன் விழுந்து கிடக்கிறான் என்று எண்ணிக்கொண்டு அந்த விநாயகர் கோவிலை அணுகி நான் போய்க் கொண்டு இருந்தேன். உள்ளூரிலும், வெளியூர்களிலும் இப்படி சாராயக் கடைகளை திறந்து விட்டு பல குடிகாரர்களையும் இந்த அரசாங்கம் உருவாக்குகிறது. கடந்த 50 ஆண்டுகளில் எல்லா தேர்தல் வாக்குறுதிகளிலும் “டாஸ்மார்க் நிரந்தரமாக மூடப்படும்” என்று சொல்லுகிறார்களே தவிர செய்வதாக இல்லை. அது சரி சாராய உற்பத்தி ஆலையே அரசாங்க மந்திரிகளும், அவரவர் உறவினர்களும் தான் நடத்தி கொண்டிருக்கிறார்கள். அதனால் இதை எப்படி மூடுவார்கள்? குடிகாரர்கள் சிலர் அடிக்கடி சென்னை புறப்பட்டு வந்து ஏதோ வேலை இருப்பது போல நகரத்தைச் சுற்றித் திரிந்து ஆசை தீர குடித்து மயங்கி இருந்த பிறகு ஊர் திரும்புவார்கள். எனக்கு நன்றாகத் தெரியும். எங்கள் ஊரில் இருந்து பலர் அப்படிப் புறப்பட்டு வந்து சென்னையில் குடித்து விட்டுப் போவது தெரியும். ஒருமுறை வீட்டுக்கு என்னை வந்து பார்த்துவிட்டு நகரத்தில் பல வேலை இருப்பதாகச் சொல்லி விட்டு போகும் உறவினர்கள் கூட அப்படியே போய்விடுவார்கள் அவர்களுக்கு விருப்பமான விருந்து டாஸ்மாக் கடையில் தானே கிடைக்கும். எவ்வளவு விலையேற்றினாலும் ‘ஏன், எதற்கு இப்படி’ என்று கேள்வி கேட்காமல் வாங்கி குடித்துவிட்டு, தள்ளாடியபடியே வாகனத்தில் போய் அடிபட்டு சுருண்டு விழுந்தவர்கள் எத்தனையோ பேர்.

இந்த விநாயகர் கோவில் அருகே சாலையோரத்தில் பகல் 10 மணிக்கு வெயிலில் படுத்து சுருண்டு கொண்டிருந்த உடம்பைக் கண்டபோது இந்த எண்ணமே உண்டானது. ‘நடுப்பகலில் இப்படி குடிக்கிறான்… பொழுது போனால் இவன் எவ்வளவு குடிப்பான்’ என்று தான் சிறுவெறுப்போடு எண்ணிக் கொண்டிருந்தேன். அவன் நிலைமை என்ன என்று பார்க்கலாமே என்று நானும் பக்கமாக நடந்து சென்றேன். அவனைச் சுற்றி ஒரு நான்கைந்து பேர் நின்றார்கள்.

“குடிச்சிட்டு விழுந்து கிடக்கிறானா” என்று அவர்களைப் பார்த்து கேட்டேன்.

“இல்லங்க” என்றார் ஒருவன்.

“வேறு என்ன?” என்றேன்.

“பேச்சு மூச்சு இல்லாமல் சுருண்டு விழுந்து கிடக்கிறான். மயக்கமா கூட இருக்கும்” என்றார் மற்றொருவர்.

அவனுக்கு ஒரு இருப்பதைந்து வயது கூட இருக்கலாம். நல்ல கட்டான உடல் இருந்தது. ஆனால் அழுக்கேறிய உடையும், ஆடையும், தாடியும், வாடிய முகமும் கண்டபோது வேறு எங்கயோ பார்த்த முகமாக இருக்க கூடுமோ என்று எண்ணிப் பார்த்தேன். ஒருவேளை கொரோனாவால் பாதிக்கப்பட்டவனோ, இல்லை தீயவழியில் போய் உடல், உயிருக்கு உலைவைக்கும் அளவுக்கு நோயோடு இருப்பானோ என்றும் எண்ணினேன். அதற்குள் யாரோ ஓர் இளைஞன் ஓடி வந்து தண்ணீர் கொண்டு அவன் முகத்தில் தெளித்தான். தண்ணீர் பட்டு அவன் முகத்தில் சிலிர்ப்பு தோன்றியது. அவன் “அம்மா அம்மா எங்க இருக்க” என கூறியபடி மெல்ல விழித்துப் பார்த்தான். அப்போது அந்த இடத்தில் செல்போனை உயர்த்திப் பிடித்து தன் முகம் தெரியும்படி மதிமாறன் முகநூல் நேரலை செய்து கொண்டிருந்தான். “ஒருவழியாக இந்த குடிகார இளைஞன் உயிரோடு தான் இருக்கிறான். அவனின் நிலை என்ன?, ஏன் இந்த நிலைக்கு ஆளானான் என்று தெரியவில்லை. இதற்கு இந்த சமூகமும், அரசாங்கமும் தான் காரணம் என்று நேரலையில் குறை பேசிக் கொண்டிருந்தான். அருகில் இருந்தவர், “தம்பி, பசியாகக் கூட இருக்கும். நீ பாட்டுக்கும் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசாத” என்றார்.

“ஒருவேளை இவன் உணவில்லாமல் மயங்கி விழுந்து கிடக்கலாம்” என எனக்குத் தோன்றியது. நேரலையைத் தொடர்ந்தபடியே அருகில் இருந்த அவன் நண்பன் அழகரிடம் செல்போனைக் கொடுத்து, தன்னைப் படம் பிடிக்கக் கூறிவிட்டு, அருகில் சென்று ஒரு டம்ளரில் காப்பியும், கையில் ஒரு வடையும் கொண்டு வந்தான். அவன் அருகில் குனிந்து, அவனை மெதுவாக எழுப்பினான். அவனை அசைத்துப் பார்த்தான். கூப்பிட்டு பார்த்தான். இறுதியில் மயங்கியவன் சற்று அசைந்தான். இதை அவன் அருகில் இருந்த நண்பன் செல்போனில் அதை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தான். மயங்கி இருந்தவன் அசைந்து மெல்லிய குரலில் ஒலி வந்தது. கண் திறக்கவில்லை. தண்ணீரும் கையுமாக நின்ற ஒரு ஆள் மறுபடியும் அவன் முகத்தில் தண்ணீர் தெளித்து அவன் வாயைத் திறந்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றினார். உள்ளே இழுத்து தண்ணீர் குடித்து மெல்ல தன் கண் திறந்து பார்க்கும்போது, மதிமாறன் தன் கையிலிருந்த காப்பியை வடையும் அவனிடம் நீட்டினான். அந்த காப்பியைக் கண்டதும் மயக்கத்தில் அவனுடைய கண்கள் ஒரே ஆவலாக அந்த காபியை வாஙக்ச் சென்றது. ஆனால் சற்று நிமிர்ந்து அவன் நண்பன் செல்போனில் வீடியோ எடுப்பதை பார்த்து நொந்து, அதை வாங்காமல் விட்டுவிட்டான்.
“இந்தாங்க தோழர் இந்த காப்பியக் குடியுங்கள்” என்று அவர் எவ்வளவோ வற்புறுத்தியும் அவன் அந்த காப்பி டம்ளரைத் தொடவில்லை.

வெகு நேரம் நீட்டியும், அவன் வாங்கிக் குடிக்காமல் இருந்தது அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அவன் மெல்ல எழுந்து உட்கார்ந்தான். அவன் கண்களில் களைப்பு தெரிந்தது. மெதுவாக கண்ணை தேய்த்துக் கொண்டு ‘தண்ணீர் தண்ணீர்’ என்றான். அருகில் தண்ணீர்க் குவளையுடன் நின்றவர் தண்ணீர் கொடுத்தார். குடித்து விட்டு மெதுவாக எழுந்து, தண்ணீர் வைத்திருந்தவரிடம் நன்றி கூறினான்.

வீடியோ எடுத்தபடியே தன் நண்பனிடம், “வடையைக் கொடு” என்றான்.

அவன் மீண்டும் காப்பி, வடையை நீட்டி “இந்தாங்க குடிங்க” என்றான்.

அவனைக் கண்டு கொள்ளாது, தள்ளாடியபடியே மெதுவாக நடந்தான்.

ரோட்டில் கிடந்தவனுக்கு உதவ வந்து, கடைசியில் அவமானமே மிச்சம் என்று மதிமாறன் நினைத்துக் கொண்டான் போல, உடனே அந்த கேமரா பக்கம் திரும்பி, “குடிகாரர்கள் இவர்களுக்கு சரக்கைத் தவிர வேறு எதுவும் நினைவில் இல்லை போலிருக்கிறது. அவர்களுக்கு போய் இரக்கம் காட்டுவது தப்பு” என்றான்.

கூட இருக்கும் ஒத்து ஊதும் நண்பர்களும் அவன் கூறியது “சரி” என்று பிதற்ற, அந்த இளைஞர்கள் கூட்டம் கலைந்தது.

மெல்ல நடந்தவன் தடுமாறிக் கொண்டு பேருந்து நிறுத்தத்தில் ஒரு சுவரில் சாய்ந்தவாறு கீழே அமர்ந்தான். தலையைத் தொங்க விட்டுக் கொண்டு சாய்ந்து, சாய்ந்து ஏதோ சொன்னான். யார் காதிலும் அந்தச் சொற்கள் கேட்கவில்லை. ‘பசிக்கொடுமை போலிருக்கிறது’ என்று எண்ணம் எனக்குத் தோன்றியது. ‘அவனுக்கு பசிக் கொடுமை என்றால் ஏன் அவன், அவர்கள் வாங்கிக் கொடுத்த காப்பியும், வடையையும் நிராகரித்தான்?’ என்ற எண்ணமும் தோன்றியது. அருகே சென்று, அவனிடம் “என்ன” என்று கேட்டேன். பசி என்றவாறு அவன் கண் இருண்டது. நாக்கு தழுவியது.

“ஏதோ வைராக்கியகாரன் போல் அவர்கள் கொடுத்த உணவை நிராகரித்தான். இப்போது பசி என்கிறானே” என்ற குழப்பம் எனக்குள் இருந்தது. ‘சரி’ என்று அருகே சென்று டீக்கடையில் இரண்டு வடை, வாழைப் பழம் வாங்கி வந்து அவனிடம் கொடுத்தேன். அதை வாங்கியவன், அண்ணாந்து ஒரு நொடி என்னையும், சுற்றியிருப்பதையும் பார்த்தான். பின் உண்டான். பசிக்கொடுமையால் எல்லாம் மறைந்தன. அப்பாடா என பெருமூச்சு விட்டான். ஆனாலும் அவன் பசி அடங்கவில்லை. இன்னொரு வாழைப்பழமும் சேர்த்துக் கொடுத்தேன். அவனுக்கு இப்போது தான் ஏதோ ஒரு திருப்தி பேச முடிந்த அளவுக்கு சக்தி இருந்தது. “எந்த ஊர்” என்றேன்.

“நாகை பக்கத்துல சின்ன கிராமம்” என்றான் தெளிவான குரலில்.

“எங்கே வந்தாய்?”

“ஒருத்தனை தேடி இங்கு வந்தேன்”

“சரி உன் உடம்புக்கு என்ன?”

“சாப்பிட்டு மூன்று நாளாச்சு” என்று சொல்லி கண் கலங்கினான்.

“உன் பெயர்”

“செல்வம்” என்றவாறு கண்ணீரைத் துடைத்தான்.

செல்வத்தின் உண்மையான நிலையைக் கேட்டுத் தெரிந்து கொள்ள மனம் தூண்டியது. அதனால் நான் புறப்பட முடியாமல் அங்கே நின்று விட்டேன்.

“யாரைத் தேடுற?, சொந்த ஊரில் வாழாமல் இங்கு வந்து ஏன் கிடக்கிற?” என்றேன்.

“வாழ யாருங்க விட்டா” என்றான் கனத்த குரலில்

“அப்படி என்னாச்சு”

முகத்தில் வடியும் வேர்வையைத் துடைத்துக் கொண்டு, “நானும், இதே ஊர்ல, பி. எம் கல்லூரியில மூன்றாம் ஆண்டு பி. ஏ ஆங்கிலம் படிக்கிறேன்” என்றான்.

“அடப்பாவி, எவ்வளோ, நல்ல படிப்பை படிக்கிறவன். இங்க வந்து, இப்படி கிடக்குற?” என்றேன்.

“கல்லூரியில என்னைய நீக்கி விட்டாங்க” என்றான் அழுதவாறு.

அவனை நோக்கி கோபத்தில், “அப்படி என்ன தப்பு பண்ணின” என்றேன்.

“செய்யாத தப்புக்குத் தான் இந்த தண்டனை” என்றவாறு விம்மி விம்மி அழுதான்.

சில நிமிடங்கள் அந்த அழுகை நீடித்தது. பின் தெளிவான குரலில் பேச ஆரம்பித்தான்.

“என் அப்பா, நான் பிறந்த கொஞ்ச நாள்லயே இறந்து போயிட்டாரு. அண்ணனும், அம்மாவும் தான் என்னையப் பார்த்துகிட்டாங்க. அண்ணன் படிக்காம வேலைக்கு போனார். அப்பறம் சொந்தமாவே எங்க வீட்டுல முறுக்கு போட்டு, அம்மாவும், அண்ணனும் நாகைக்குப் போய் மொத்தமா கடை கடைக்கு வித்துட்டு வருவாங்க. நானும் நல்லா படிச்சேன். அப்பறம் ஊர்க்காரர் கணேசன் மூலமா, சென்னை கல்லூரி விடுதியில் சேர்த்தாங்க. இப்ப கடைசி வருஷம். எல்லா பசங்களும் சுற்றுலா போகலாம்னு திட்டம் போட்டாங்க. ஆனா எனக்கு வர வசதியில்லைன்னு ‘நான் வரலைன்னு’ சொன்னேன். ஆனா என் நண்பன் வெற்றி, “செலவு நான் பாத்துக்குறேன்னு” சொல்லி என்னை கூட்டிட்டுப் போனான். நாங்களும் கல்லூரியில் அனுமதி வாங்காமலே ஊட்டி சுற்றுலா கிளம்பி போனோம். ஊரெல்லாம் சுத்திட்டு இரவு வர ரொம்ப நேரம் ஆயிடுச்சு. நண்பர்களும் அவரவர் வீட்டுக்கு புறப்பட்டுப் போனாங்க. நான் மட்டும் 12 மணிக்கு விடுதிக்கு போக முடியாதுன்னு, ரொம்ப அசதியா இருக்கேன்னு பக்கத்திலே தங்க முடிவு பண்ணினேன். போலீஸ் வருவாங்கன்னு கல்லூரி அடையாள அட்டைய கழுத்தில் மாட்டிகிட்டேன். பேருந்து நிறுத்தம் இருக்கையிலே, கை, கால நீட்டி படுத்து தூங்கிவிட்டேன். அவ்வளவு அசதி, மறுநாள் விடிஞ்சு 11 மணிக்கு தான் கண் முழிச்சேன். அது கிடந்த கிடைப்பு எப்படி இருந்துச்சு தெரியல. எவனோ ஒருத்தன் நான் குடிச்சிட்டு இப்படி படுத்துக் கிடக்கிறேன் அதுவும் காலேஜ் பையன் இப்படி குடிச்சிட்டு கிடைக்கிறான்னு புகைப்படம் எடுத்து முகநூலில் போட்டு அசிங்கப் படுத்தி விட்டான். அதை கல்லூரி நிர்வாகத்தைச் சேர்ந்தவங்க பார்த்துட்டாங்க. என்னை கூப்பிட்டு விசாரிச்சாங்க. ‘எனக்கு குடிப்பழக்கம் இல்லைன்னு நான் எவ்வளவு சொல்லியும்’ கல்லூரி நிர்வாகம் கேட்கவே இல்லை. அதுவுமில்லாம நான் படுத்திருந்தப்ப கழுத்துல கல்லூரி அடையாள அட்டை போட்டிருந்தது பெரிய சர்ச்சை ஆயிருச்சு. அந்த செய்தி பல முக்கிய இடங்களில் பேசு பொருளாகிடுச்சு. அதனால என்னை கல்லூரி நிர்வாகம் கல்லூரியிலிருந்து நீக்கி விட்டாங்க. இந்த செய்திய என் குடும்பத்துக்கும் சொல்லிட்டாங்க. ஆனா, என் குடும்பத்துக்கு என்னைப் பத்தி தெரியும். அதனால அவங்க எதுவும் சொல்லவே இல்லை. ஆனா சொந்தகாரங்க என்னைய தப்பா பேசினாங்க. ‘அப்பா இருந்திருந்தா, வளர்ப்பு நல்லா இருக்கும். அம்மா வளர்த்த பிள்ளை இப்படிதான் குடிகாரனா போகும்னு’ ஊர்க்காரங்க பேச, அம்மா மன வருத்தத்தில உசுற விட்டாங்க. உயிருக்கு உயிரா இருந்த அம்மா இறந்த சோகம் ரொம்ப வேதனையா இருக்கு. அண்ணா எனக்கு ஆறுதல் சொல்லி வேற கல்லூரியில சேர்க்க முயற்சி பண்ணாங்க. எங்கயும் அனுமதி தரலை. என்னோட இந்த நிலைமைக்குக் காரணம் என்னைய போட்டோ எடுத்தவன். அவன் யாருன்னு தெரியலை. அவனைத் தான் தேடுட்டு வந்தேன்” என்றவாறு கோபம் கலந்த குரலில் பேசினான்.

அவன் கதை கேட்ட எனக்கு அவனின் மனநிலை புரிந்தது.

“இங்க எப்படி அவனை தேடுவ” என்றேன்.

“ஒரு வாரமா அவன் யாருன்னு பல பேர்கிட்ட கேட்டேன். கடைசியா அவன் பேரு சமூகத் தொண்டன் மதிமாறன். என் கல்லூரி முதலாமாண்டு படிக்கிற ராமனுக்கு அவனைத் தெரியும். இந்த தெருவுல தான் இருக்கான்னு ராமன் சொன்னான். அதான் இரவு பொழுதே இங்க வந்தேன்.

ஆனால் பசி மயக்கம் அப்படியே விழுந்து கிடந்துட்டேன்” என்றான்.

“அட்டா! மதிமாறானா, இப்ப இவ்வளவு நேரம் இங்க தானே, இவனை வீடியோ எடுத்துகிட்டு, பேசிட்டு நின்னான். அவன்தான் மதிமாறன்னு இவனுக்கு தெரியாதோ! அதுமாதிரி செல்வத்தையும் மதிமாறனுக்கு அடையாளம் தெரியவில்லையோ!, இப்ப செல்வம் தாடி, அழுக்கு முகம் அதன் மதிமாறனுக்கு ஒருவேளை அடையாளம் தெரியாம இருக்குமோ! அவன் பார்த்த வேலையா இப்படி ஒருவனின் நிலையை ஆக்கியிருக்கு” என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

“இப்ப கூட பாருங்க, இங்க எனக்கு காப்பி கொடுக்க வந்த ஆள். உதவி செய்யுறத, முகநூலில் போட்டோ எடுத்து போட்டு, உதவி பண்ணுறாங்க. இப்படி பண்ணுறதுக்கு செய்யாமலே இருக்கலாமே! அதனால் தான் அவன் வாங்கிக் கொடுக்க வந்ததை வாங்காம நிராகரிச்சேன்” என்றான்.

அவன் பேசுவதை கேட்டு உறைந்து போய் நின்றேன்.

“எங்கள மாதிரி வசதியில்லாதவர்கள் பேருந்து நிறுத்தத்தில், சத்திரம்ன்னு இந்த மாதிரி படுத்து தூங்க முடியும். அதை அவனுங்க புரிஞ்சுக்காம, இப்படி கண்டமேனிக்கு, புகைப்படம் எடுத்து எழுதினால் என்ன பண்ண முடியும். என்னை பார்த்து குடிகாரன்னு சொல்றாங்க. தாடி, மீசை, கருப்பு, அழுக்கு முகம் இருந்தா, யார்ருன்னு தெரியாமலே குடிகாரன், பொறுக்கின்னு முடிவு பண்ணுறாங்க. அப்பறம் இவர்கள் எல்லாம் செய்கிற உதவியை புகைபடம் எடுத்து, வீடியோ எடுத்து அதில் பேசி, பெரிய நல்லவன், நேர்மையானவன்னு காண்பிக்கிறாங்க. உதவி வாங்குற ஏழைகளுக்கும் சுயமரியாதை இருக்கும்னு அவங்களுக்குத் தெரிய மாட்டேங்குது. அரசியல்வாதிகளும் இப்படி தான் நம்ம வரிப் பணத்தில் சலுகை குடுத்து, அதில் அவங்க புகைபடத்தை, பெயரை போட்டுகிறாங்க. இவர்களையெல்லாம் என்ன சொல்லுறது” என்றவாறு வேதனைப்பட்டான்.

சற்று திரும்பி, அவன் பேசியதை நினைத்து வாயடைத்து போய் நின்றேன். நாமே இவனை தவறாக நினைத்ததை எண்ணி வருந்தினேன். நிறைய நல்ல உள்ளம் இருக்கிற மனிதர்கள் செய்கின்ற உதவியை வெளிகாட்டியது இல்லை. ஆனால் மதிமாறன் உதவி செய்தால் புகைப்படம், ஒருவரைச் சந்தித்தால் புகைப்படம், பேசினால், நடந்தால், அமர்ந்தால் என சர்வகாலமும் புகைப்படத்தை முகநூலில் ஓட விட்டுக் கொண்டிருப்பான். ‘சமுதாய தவறுகள்ன்னு’ கேலிச் சித்திரம் வேறு வரைவான். என்னை பொறுத்த வரை இவனே போலியான சித்திரம்.

நிவாரண உதவி எல்லோரிடமும் வசூல் செய்து, இவன் சென்று வழங்கி புகைப்படம் எடுத்துக் கொள்வது, செல்வம் சொன்னது போல் மனிதாபிமானம், மனிதத்திற்காக உதவப் போய், மதிமாறனைப் போன்றோர் விளம்பரம் தேட உதவி செய்து கொள்கிறார்கள்.

சில நிமிட யோசனைக்குப் பிறகு, அவனை மதிமாறன் வீட்டிற்கு அழைத்துப் போக நினைத்து, திரும்பிப் பார்த்தேன். அவன் அந்த இடத்தில் இல்லை. சுற்றி முற்றி தேடியும் அவன் என் கண்ணில் தட்டுப்படவில்லை. பின் அவனைத் தேடுவதை விட்டு புறப்பட்டுச் சென்றேன்.

ஆறு நாட்களுக்குப் பின் விநாயகர் கோவில் வழியாகச் சென்றபோது மதிமாறன் அவனது நண்பனோடு செல்வதைக் கவனித்தேன். மதிமாறன் முகம் சற்று வீங்கிய நிலையில் இருந்தது. இடது கை முறிந்த நிலையில் மாவு கட்டு போடப்பட்டிருந்தது. அவனின் பருத்த தடிமான உடல் சற்று மெலிந்திருந்தது. அவனுக்கு ஏற்பட்டிருக்கும் காயத்தைப் பார்க்கும் போது யாரோ தாக்கியது போல இருக்கும் என்று எண்ணினேன். ஒருவேளை செல்வம் தாக்கியிருப்பானோ என்றும் சிந்தித்தேன்.

“ஊர் முக்கியஸ்தரை கேலி சித்திரம் பண்ணியும், தரக்குறைவா விமர்சனம் பண்ணியும், முகநூல்ல போட்டோ, வீடியோ போட்டான். அவரோட ஆள் மதிமாறனை பயங்கரமா அடிச்சிருக்கார். செல்போனையும் புடுங்கி உடைச்சாங்களாம். நல்ல மனுசங்கள, உண்மை தெரியாம விமர்சனம் பண்ணினா இப்படிதான். அதுவும் அடி வாங்கும் போது ‘இனி வீடியோ போட மாட்டேன்னு’ மதிமாறன் கதறிட்டனாம்” என்று இரண்டு இளைஞர்கள் மதிமாறனைக் கிண்டலாகப் பேசியது என் காதில் விழுந்தது.

– கார்த்திக் கிருபாகரன்

 

நன்றி : கீற்று இணையம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More