Sunday, April 14, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் யாரோடு தான் | சிறுகதை | ​​ஆவூரான்

யாரோடு தான் | சிறுகதை | ​​ஆவூரான்

5 minutes read

“என்னப்பா உங்கிட பிரச்சனை”?

“ஐயோ இந்தக் கேள்வி தானுங்க எல்லாப் பிரச்சனைக்கும் காரணம்.

என்னால முடியாது இனியும் நான் இங்க இருந்தால் என்னை ஏதாவது ஒரு மன நோயாளிகள் வைத்திய சாலையில் தான் கொண்டு போய் சேர்த்து விடுவார்கள். இவர்கள் இது நடக்கும் இவ்வளவு நாளும் நான் வேலை, வேலை என்று ஓடி வேலையும் வீடும் என்றும் இருந்தனான் நாலு மாதத்துக்கு முன் தான் பென்சன் எடுத்து வீட்டோட நிம்மதியா பிள்ளையளோட இருக்கலாம் என்று எவ்வளவோ கனவுகளோடும் திட்டங்களோடும் எப்படி எல்லாம் இருக்கவேணும் என்று இருந்த எனக்கு சத்தியமா பைத்தியம் பிடிக்கும் போல தான் இருக்கு.”

பிள்ளைகள் வளரும் காலத்தில் அதுகளோடு நேரம் செலவழிக்க முடியவில்லை என்ற ஏக்கமும் கவலையும் எப்போதும் இருந்து கொண்டே இருந்தது.

பிள்ளைகளின் பாடசாலையில் நடக்கும் நல்ல நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதில்லை.

ஒரு பூங்கா பாக் என்று கூட்டிக் கொண்டு போனதில்லை.

வடிவா சமைக்கத் தெரிந்தும் சமைச்சு கொடுக்கவில்லை

இனி சமைச்சுக் கொடுக்கவேணும் மேசையில் அதுகள் இருந்து சாப்பிடும் போது நிறையக் கதைக்வேணும் என்று எவ்வளவு… எவ்வளவு ஆசைகள் மனதில் நிறைஞ்சு மிதந்து கொண்டிருந்தது.

முன்பெல்லாம் “எப்ப அப்பா உங்களுக்கு நேரம் இருக்கும் “என்று மகன் கேட்டிருக்க்கிறான். இதை எல்லாம் நிறைவேற்றவேணும் என்ற கனவுகளோடு இருந்த நான் எல்லாம் போச்சு.

“எங்கிட காலத்தில் சொந்த நாட்டில் வாழமுடியாத நிலை வந்த போது எங்காவது கண் காணாத நாட்டுக்கு ஓடி விட வேண்டும் என்று படாத பாடு பட்டு இந்த நாட்டில வந்து இறங்கி சொல்லொணாத் துன்பங்களுக்கு மத்தியில் ஒரு நிரந்தர வேலையை எடுத்து தங்காவைக் கல்யாணம் கட்டி இரண்டு பிள்ளைகளையும் பெற்று வளர்த்து நிமிர்ந்த போது வயதும் 65 தொட்டு இப்ப நிற்கிறேன்”.

மனைவி தங்கா சமைக்கிறாள். மேசையில் சாப்பாடு இருக்கு நல்லாப் போட்டுச் சாப்பிடுகிறேன். தோட்டத்தில் வேலை செய்யிறன், நாயைக் குளிப்பாட்டி அதன் கழிவுகளை எல்லாம் துப்பரவு செய்து, நாயை நடக்கக் கொண்டு போய்வாறன். மூன்று பேரின்ர கார்களையும் கழுவி வைக்கிறன். குசினி, குளியல் அறை எல்லாவற்றையும் சுத்தமாக வைக்கிறன். மனைவி உடுப்புக்களை துவைத்துக் காயப்போட நானே அதனை எடுத்து மடித்து சில நேரம் அயன் பண்ணியும் வைக்கிறேன். “தந்தையர் தினத்துக்கு” வெளியில கூட்டிக்கொண்டு போய் சாப்பிடுறம்.

அப்பா …என்ன பிரச்சனை. எல்லாம் ஒழுங்காத்தானே இருக்கு. நாங்களும் சந்தோசமாக இருக்கிறோம். அப்பா உங்களையும் சந்தோசமாகத் தானே வைத்துப் பார்க்கிறோம். இரண்டு பிள்ளைகளும் என்னைப் பார்த்துக் கேட்குதுகள்.

அது நியாயம் தான் ஆனால் இதுவா வாழ்க்கை, இது பிழைப்பு. சில நிமிடங்களாக இருந்தாலும் வாழ்க்கையை வாழ்க்கையாக வாழ வேணும் என்பது எனது வாதம்.

​​“வாழ்க்கை வாழ்வதெற்கே”​

எனக்கு இது …..  இது கொடுமை. எப்படி நான் இதில் இருந்து விடுபடுவன். ஏன் மற்றவர்கள் போல நானும் மாறக் கூடாது.

“என்னப்பா உங்கிட பிரச்சனை”?

இந்தக் கேள்வியை இவ்வளவு நாளும் பிள்ளையள் தான் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இன்று மனைவியும் கேட்டுப் போட்டாள்.

பிள்ளையள் காதுக்குள்ள கேட்பன். போட்டுக் கொண்டு படிக்கிறம் எண்டு சொல்லுங்கள். கிட்டப் போய்க் கேட்டால் சினிமாப் பாட்டுக் கேட்கும். அந்த நேரம் மகனிட்டையோ, இளைய மகளிட்டையோ ஏதும் கேட்டால்,

“இப்ப ஏனப்பா கத்துறியள்” என்று என்மீது பாயுங்கள். யாரோடும் கதைக்க முடியவில்லை. யாரும் என்னோட கதைக்குதுகளும் இல்லை.

நாங்கள் யாரு.. கதைச்சுக் கதைச்சு காலம் கடத்திய வரலாற்றுப் பரம்பரை.

வரலாற்றை கடத்திக் கொண்டு போக வேண்டி நான் யாருமே என்னோடு கதைக்காட்டி எப்படி இருக்கும்.

“தங்கா…தங்கா…தா..ங்..கா”

குசினிக்குள் சமைத்துக் கொண்டிருந்த மனைவி தங்காவை கூப்பிட்டுக் கூப்பிட்டுப் பார்த்தன் ஒரு பதிலும் வரவில்லை என்பதால் போய் எட்டிப் பார்த்தால் நீங்க நம்பமாட்டீங்க மனைவி தங்காவும் காதில ஹெட்போன் போட்டுக்கொண்டு ஏதோ நாடகமோ ஏதோ பார்த்து சமைக்கிறாள்.

நான் கூப்பிட்டதற்கு பதில் வராததால் அவளைத் தொட்டு கதை கேட்டுப் போட்டேன்.

உடன ஒரு பாய்ச்சல் பாஞ்சு  “என்னப்பா உங்கிட பிரச்சனை” எண்டு கேட்டுப் போட்டாள்.

அவள் கேட்டதும் தான் நான் சரியா உடைஞ்சு மனம் பதறி மேலெல்லாம் நடுங்கிப் போனன். இந்தப் போன் வந்தது பிரச்சனை இல்லை இந்த ஹெட்போனைக் கண்டு பிடித்தது தான் பிரச்சனை.

எல்லாக் கெற்போணையும் எடுத்து உடைச்சு அடுப்பில போட்டா என்ன எண்டு தான் மனதில தோன்றிக் கொண்டிருக்கு.

நான் என்ன கதைக்கப் போனேன் என்று ஒரு கேள்வியும் கேட்காமல்,

“இந்தாங்கோ வெயிலுக்கு நல்லம் குடியுங்கோ”

எண்டு எதையோ கொண்டு வந்து தந்தாள். இதைத் தான் you tube இல் பார்த்து செய்தவள் போல கிடக்கு.

தோட்டத்தில் மரத்தோடையும், நாயோடையும் கதைத்து முடிஞ்சுது. நல்ல வெய்யில் தான் அடிக்குது வெளியில நானும் போக பக்கத்து வீட்டு கிறீஸ் நாட்டுப் பொம்பிளப் பிள்ளை 2 வயதுப் பிள்ளையையும் கொண்டு நடக்கப் போக வெளிய வந்தாள். அந்தப் பிள்ளையோட கொஞ்சம் பேசலாம் என்ற ஆவல் மேலோங்க ஆர்வமாக நடந்து முன்னுக்கு வந்தால்,

ஐயோ அந்தப் பெட்டையும் காதில ஹெட் போனை போட்டுக் கொண்டு குழந்தைப் பிள்ளையின் காதிலையும் ஹெட்போன் போட்டபடி வண்டிலுக்குள் இருந்து iPad ஐ பார்க்கத் தொடங்கிற்று. பின்னாக வந்த நாயின்ர காதை எட்டிப் பார்த்தேன் என்ன கொடுமை

“நாய்க்கு கூட கெற்போண் மாரித் தான் ஏதோ போட்டிருக்கு ?

அடா கொடுமைய வாயில கைவைச்சு நிமிருறன்.

மகள் தான்..

“அப்பா ….அப்பா …. வாங்கோ

அம்மா சாப்பிடக் கூப்பிடுகிறா”

என்று மகள் கூப்பிட நானும் ஆவலாக மேசைக்குப் போய் எல்லோரோடையும் சேர்ந்து பேசிக் கதைத்துக் கொண்டு சாப்பிடுவம் என்று மேசையில் இருந்தால்,

மகள் மடிக் கணனியுடனும், மகன் iPad உடனும், மனைவி யாருடனோ போனில் chat பண்ணிக் கொண்டும் சாப்பிடத் தொடங்கினார்கள்.

எனக்கு கோபம் தலைக்கேறித் தாண்டவம் ஆட,

“எல்லாத்தையும் நிப்பாட்டுங்கோ சாப்பிட வந்த இடத்திலையும் கெற்போண் போட்டுக்கொண்டு சாப்பிட்டா என்ன சாப்பிடுறம், என்ன கோப்பையில் இருக்கு எண்டு தெரியாமல் சாப்பிட்டுக் கொண்டு போறியளே”

நான் கத்திக் கொண்டு எழும்பி வெளியில போகிறேன்.

“அப்பா உங்களுக்கு என்னப்பா பிரச்சனை”?

என்ற வார்த்தைகளுடன் பிள்ளைகளும் எழும்பி அவரவர் அறைகளை நோக்கிப் போய் விட்டார்கள்.

“வடிவாகச் சமைத்து வைக்க அதைச் சாப்பிடாமல் செய்து போட்டியளே….”

என்று மனைவி சொன்னதும் நானும் மனங்கசிந்து தான் போனேன்.

கவலையாயும் போச்சுது.

“அம்மா … அப்பாவைக் கூட்டிக் கொண்டு போய் சீனியர் சிற்றிசன் ஆட்களோடு சேர்த்து விடுங்கோ அங்க சாம் அங்கிளைப் பார்த்தாவது திருந்தட்டும். சாம் அங்கிள் எப்படி துள்ளிக் குதித்துக் கொண்டு சந்தோசமாக இருக்கிறார். அவரோட சேர்த்து விடுங்கோ”

என்று சொல்லிக் கொண்டு மகள் வெளியே வந்தாள்

நான் இவ்வளவு நாளும் குதிரைக்கு கண்ணைக் கட்டி விட்டமாதிரித் தான் இருந்திருக்கிறேன். வேலை, வேலை முடிய வீடு, அதன் பின்பு சாப்பிட்டுவிட்டு TV பார்த்துவிட்டுத் தூங்குவது.

ஒரு இயந்திர வாழ்வு தான் வாழ்ந்திருக்கிறன் என்பது அப்ப புரிஞ்சுது.

“அப்பா வாங்கோ கடைக்கு போய் வருவோம் என்று மகள் கேட்டாள் நானும் சந்தோசமாக காரில ஏறி இருந்து கொண்டு,

“ மகள் மன்னிச்சு கொள்ளுங்கோ மதியம் சாப்பிடும் போது நான் கொஞ்சம் கோவப்பட்டுப் போனன் “

நான் கதைக்க ஆரம்பிக்கிறன் பார்த்தா அவள் தலையை ஆட்டுறாள்

அது எனக்கில்லை அவள் மற்றக் காதில போட்டிருக்கிற கெற்போணில கேட்கிற பாட்டுக்கு என்பது நான் எட்டிப் பார்த்த போது தான் தெரிந்தது.

மகள் தான் கையை நிட்டி வெளியில் பார்க்கச் சொல்லி சைகை செய்யிறாள்

வெளியில பார்த்தா,

நான் திடீர் என்று தான் இந்த உலகத்தைப் பார்க்கிறன் போல. நூற்றுக்குத் தொண்ணூறு வீதமானவர்கள் ஹெட்போன் போட்டிருக்கிறார்கள், தனியப் பேசுகிறார்கள் தலையை ஆட்டிக்கொண்டு போகிறார்கள், தனிய நின்று கையை மேலையும் கீழயும் காட்டி ஆட்டிக் கதைக்கிறார்கள் பெரிதாக வாய் விட்டுச் சிரிக்கிறார்கள்

என்றோ பார்த்த சார்ள்ஸ் வாத்தியாற்ர நாடகம் மாதிரி இருக்குது

இப்படியே நானும் இருக்கேலாது. இது ஒரு புதிய உலகம் இந்தக் காட்டுக்குள் வழி தவறி வந்தவன் மாதிரி. நான் நின்று கொண்டு இருக்கிறன் இப்படி இருக்க முடியாது நானும் மாறவேண்டும். முடியுமா?..

இந்த நவீன உலகம் அபாரமான வளர்ச்சியில் நிற்கும் போது நானும் என் போன்றோரும் மூடத்தனமான எதிர் வாதங்களையும் அடாவடித் தனங்களையும் செய்து மாற்றலாம் என்று ஒரு காலைத் தூக்குவது கவிஞர் வாலி சொன்னமாதிரி “ எல்லோரும் அம்மணமாக நிற்கும் போது நான் மட்டும் …..”

ஆனால் இதை எதிர்த்து இதில் இருந்து விடுபட்டு தனிய எல்லோரும் ஒரு நிலைக்கு வர வேண்டும் என்ற புதிய பிரதி வாதக் கருகூலம் உருவாகும் அப்போ,,,,,”

சங்கரின் திரைப் படம் மாதிரி.

அப்படி ஒரு நிலையை எண்ணிப் பார்த்து மனதுக்குள் சிரிக்கிறன்

ஒரு கடையின் முன்னால் காரை நிறுத்தி எனக்கொரு ஹெட்போன் வாங்கிக் கொண்டுவந்து தந்தாள் மகள் . என்ர போனில் இருந்து ஏதோ செற் பண்ணி விட்டு காதில் போட்டு விட்டாள்.

என்ர போனில் இருந்து,

“ காதோடு தான் நான் பாடுவேன்

மனதோடுதான் நான் பேசுவேன்”

என்ற அருமையான பாடல் ஒலிக்க மகள் நிதானமாக காரை ஓட்டிக் கொண்டிருந்தாள்.

பாடல் முடியவும் வீடு வந்து சேர்ந்ததும் மனைவி ஓடி வந்து எட்டிப் பார்த்து வாயில கை வைத்து நகட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டு உள்ளே போய் கைப் பெருவிரலைத் தூக்கி மகனுக்குக் காட்டிக் கொண்டு போகிறாள்

நான் இன்னொரு பாட்டுக் கேட்க போனை எடுத்துப் பார்க்கிறேன்.

 

ஆவூரான் | மெல்பேர்ண்​

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More