Wednesday, May 1, 2024

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் யார் பைத்தியம் | சிறுகதை | அமிர்தராஜா

யார் பைத்தியம் | சிறுகதை | அமிர்தராஜா

6 minutes read

சடசடவென பறக்கும் ரயில் மின்னல் வேகத்தில் பறந்து கொண்டிருந்தது. காற்று எதிர்திசையிலே ரயிலை எதிர்த்து போராடி நழுவிக்கொண்டு பாய்ந்தது. நான் ரயில் வாசலில் நின்று, நழுவிக் கொண்டு பாயும் காற்றை முகத்திலே வாங்கிக் கொண்டு, தூரத்திலே தெரியும் மின் விளக்குகளால் மின்னும் சிறு சிறு வீடு, ரயில் தண்டவாள பிரிட்ஜை ஒட்டிச் செல்லும் கழிவு நீர்க் கால்வாய், ரோடுகளிலே மின் விளக்குகளை எரிய விட்டு சீறிப் பாயும் வாகன ஓட்டிகள் என தினமும் பார்த்து ரசித்து உணர்ந்த அனுபவத்தை அன்றும் புதிதாகப் பார்ப்பது போல பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். நாளும் நேரமும் மாறும்பொழுது அதிலும் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்ற ஒரு எண்ணம் என் மனதுக்குள் எப்பொழுதும் தோன்றும். ரயில் ஒரு ஸ்டேஷனில் நின்று பயணிகளை இறக்கிவிட்டு அடுத்த ஸ்டேஷனை நோக்கிப் பாய்ந்தது.

திடீரென நான் நின்று கொண்டிருந்த பெட்டியில் ஒரு சத்தம். சத்தம் வந்த திசையை நோக்கி திரும்பிப் பார்த்தேன். ஒருவர் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்துகொண்டு தனது இரு கரங்களால் மண்டையில் அடித்துக் கொண்டு ஏதேதோ தனக்குள் பேசிக் கொண்டிருந்தார். அருகே இருப்பவரைப் பார்த்து புரியாத தமிழில் கோபமாக ஏதேதோ பேசி புலம்பிக் கொண்டிருந்தார். அந்த ஆசாமியோ சற்றும் திரும்பி அவரைப் பார்க்கவில்லை. பயத்தின் ரேகை அவரது முகத்திலே தெரிந்தது. தான் இங்கு வந்து அமர்ந்ததை எண்ணி அவரையே அவர் சாட்டையால் அடித்துக் கொண்டிருப்பார் போலும். எழுந்து சென்றால் மற்றவர்கள் என்ன நினைக்கக் கூடும் என்ற எண்ணமும் அவரது மனதிலே ஓடுவது தெரிந்தது. ஆங்காங்கே இருப்பவர்கள் அந்த நபரை விட அந்த ஆசாமியையே பாவமாக நினைத்தார்கள். அந்த நபரோ புலம்புவதை நிறுத்திவிட்டு திரும்பி ஜன்னல் வழியே வெளியே பார்க்க ஆரம்பித்தார். இயற்கை அவரை தடவிக் கொடுத்தது.

ரயில் தரமணி ஸ்டேஷனை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தது. அழுக்குப் பாவடை சட்டை அணிந்த ஒரு சிறுமி நான் நின்று கொண்டிந்த பெட்டியில் இருக்கும் ஒவ்வொருவரிடமும் தனது பிஞ்சுக் கையை நீட்டி பிச்சை எடுத்துக்கொண்டு வந்தாள். பெத்துப் போட்டவர்கள் எங்கே பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்களோ? சிலர் கொடுத்தார்கள். சிலர் மரியாதையின் நிமித்தமாக இல்லை என்று தலையை ஆட்டினார்கள். இன்னும் சிலர் இருக்கிறார்கள். யார் வந்து தர்மம் கேட்டாலும் கண்டும் காணாமலும் இருப்பது என்ற முடிவோடு இருப்பவர்கள். ஏன் என்று தெரியவில்லை? ஒருவேளை அவர்களைப் பார்த்து பயமா… இல்லை அவர்கள் அணிந்திருக்கும் உடைதான் பிரச்சனையா… இல்லை தனது ராஜ்ஜியம் சரிந்துவிடும் என்ற எண்ணமா… பரவாயில்லை. ஜனங்களின் குணங்களும் மனங்களும் வேறு வேறாகத்தான் இருக்கும். சரி நாம் கதைக்கு வருவோம்.

நழுவ முடியாமல் தவித்துக் கொண்டிருந்த ஆசாமியை நோக்கி சிறுமி செல்ல, அருகே அந்த நபர் இருப்பதைப் பார்த்துவிட்டு சட்டென விலகி அவர்களைத் தாண்டி இருக்கையில் அமர்ந்து இருப்பவர்களிடம் சென்று விட்டாள். பார்த்துக் கொண்டிருந்த எனக்கோ, இருவருக்கும் இடையே பரிச்சைய பாஷை ஏற்கனவே அரங்கேறி இருக்க வேண்டும் எனப் புரிந்தது.

இரயில் தரமணி ஸ்டேஷனில் நின்றது. அப்பொழுதுதான் அந்த சிறுமிக்கு பிச்சையிட ஒரு இளைஞன் தனது சட்டைப் பையில் கையை விட்டு துழாவிக் கொண்டிருந்தான். இரயில் ஹார்ன் சத்தம் பெரிதாக கேட்டது. இந்தப் பெட்டி முடிந்தாயிற்று அடுத்த பெட்டிக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் அந்த சிறுமியின் மனதிலே ஓடிக்கொண்டு இருப்பது அவளது முகத்திலே தெரிந்தது. இமைகளை உருட்டி அந்த இளைஞனையும் அருகே இருக்கும் வாசலையுமே பார்த்துக் கொண்டிருந்தாள். இரயில் நகர ஆரம்பித்தது. அந்த இளைஞன் காசை அவளது கையில் இட்டதுதான் மிச்சம் மடமடவென ரயிலில் இருந்து குதித்து பாய்ந்து ஓட ஆரம்பித்தாள்.

ஏற்கனவே கையில் ஊன்றுகோலோடு பிளாட்பாரத்தில் இந்த சிறுமிக்காக காத்திருந்த ஒரு பிச்சைக்கார இளைஞன், அவள் இறங்கியதைப் பார்த்ததும் அவளை இன்னும் அவசரப்படுத்தி ஓட சொல்லிக் கொண்டிருந்தான். இரயில் மிதமான வேகத்தோடு சென்று கொண்டிருந்தது. அந்த சிறுமியோ வேகமாக ஓடிச்சென்று ரயிலுக்குள் ஏறிக் கொண்டாள். அவள் ஏறியதைப் பார்த்ததும் ஊன்றுகோலை தரையில் கனமாகப் பணித்தவாறு ஊ‎ன்றி நின்று கொண்டிருந்த அந்த ஊனமுற்ற இளைஞன், உடனடியாக ஊன்றுகோலை தூக்கிக்கொண்டு, வேகமாக நகரும் ரயிலை நோக்கி தனது ஊனமுற்ற காலைப் பதித்து ஓட, நான் ஆச்சர்யமாக அவனை பார்த்துக் கொண்டிருந்தேன். அவனோ ஒரு துள்ளு துள்ளி வாசல் கம்பியைப் பிடித்து, வலது காலை ரயில் பெட்டிக்குள் பதித்து இடது காலை பொறுமையாக காற்றிலே அலையாடவிட்டு தவறேதும் நடந்தேறாதது போல வாசலில் நின்று பயணித்துக் கொண்டிருந்தான்.

எனது முகமோ உணர்ச்சியற்ற பொம்மையாகக் காட்சியளிக்க, மனதோ “ச்ச… இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களே” என்று திட்டிவிட்டு அடுத்த வேலைக்குச் சென்று விட்டது. ஆம், மறுபடியும் நான் பராக் பார்க்க ஆரம்பித்து விட்டேன். மற்றவர்களோ உடலை ரயிலின் அதிர்வுக்கு கூட அசையவிடாமல் இமைகளை உருட்டி அந்த ஊனமற்ற பிச்சைக்கார இளைஞனை ஒரு பார்வை பார்த்துவிட்டு “நமக்கேன் வம்பு” என்று திரும்பி விட்டார்கள். இல்லை அவர்களுக்கு இது தவறாகத் தோன்றவில்லையோ என்னவோ?!

ஆனால் அந்த நபரோ எவ்வளவு பெரிய அராஜகம் நடந்து கொண்டிருக்கிறது, ஒரு சமுதாயத்தையே ஒருவன் கேலி கூத்தாகிக் கொண்டிருக்கிறான் என வெகுண்டெழுந்து அவனருகே வந்து ஆத்திரம் பொங்க வசைபாடினார். அந்த ஊனமற்ற இளைஞனோ, இல்லை எப்படி சொல்வது? பரவாயில்லை ஊனமுற்ற இளைஞ‎ன் எ‎‎ன்றே வைத்துக் கொள்வோம். அந்த ஊனமுற்ற இளைஞனோ அவரைக் கொஞ்சம் கூட சட்டை செய்யவில்லை. அவனும் இயற்கையை ரசித்தவாறு வாசலில் தொங்கிக்கொண்டு இருந்தா‎ன். இயற்கை எல்லோருக்கும் சொந்தம்தானே. அந்த நபரோ கோபமாக பயணிகளைப் பார்க்க, எல்லாரும் தான் இறங்கப் போகும் ஸ்டேஷனை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். அவரோ மக்கள் மேல் இருக்கும் கோபத்தை எப்படிக் காட்டுவது எனத் தெரியாமல் தனது தலையில் தானே அடித்துக் கொண்டு புலம்ப ஆரம்பித்தார். நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

வெண்ரோமங்கள் அரணாகக் காட்சியளிக்கும் வழுக்கைத்தலை. நைந்து போன சட்டை. தொளதொளவென ஒரு நீள் கால்சட்டை. பட்டணத்தின் கழிவறையில் பயன்படுத்தும் செருப்பு, இதுதான் அவர். ஆனால் எனக்கு அவர் சமுதாய சீர்கேட்டை ஒழிக்க வந்த புரட்சிகர இளைஞனாகத் தோன்றினார். அக்கிரமங்களைத் தட்டிக் கேட்கும் ஆசானாகத் தோன்றினார். அவரது மனம் இந்த இழிநிலையை எண்ணி துடித்துக் கொண்டிருப்பதை நான் பார்த்தேன்.

என் மனம் அவரது மனதுக்குள் ஊடுருவ ஆரம்பித்தது. மனத்தின் பிறழ்வுக்கு காரணம் என்ன என ஆராய ஆரம்பித்தது. அரசியல் ஈடுபாடு தென்படுகிறதா என்று வேவு பார்க்க ஆரம்பித்தது. இல்லை. அரசியல் ஈடுபாடு இல்லை. இருந்திருந்தால் சொரணையற்று தலைமைக்கு கட்டுப்பட்டு தலையாட்டும் அரசியல் பிரமுகராக மாறி இருப்பாரே. இல்லையன்றால் அரசியல் தலைவர்களை குறை சொல்லிக் கொண்டே வாழ்க்கையோடு ஒட்டிக் கொண்டிருப்பார்களே… அவர்களைப் போல மாறி இருப்பாரே.

அப்படி எ‎ன்றால் யார் இவர்?. தேடல் தீவிரமானது. சமுக மாற்றத்தை விரும்பியவராக இருக்க வேண்டும். ஆம் நிச்சயமாக சமுக மாற்றத்தை விரும்பியவராகத்தான் இருக்க வேண்டும். சமுகப் பிரச்சனையை மனதிலே போட்டு குழப்பி இருக்க வேண்டும். ஏற்றத் தாழ்வுகளை எண்ணி மனம் வருந்திருக்க வேண்டும். வலியவன் எளியவனை அடக்குவதை நினைத்து மனம் குமுறி இருக்க வேண்டும். மாற்றம், மாற்றம் என்று காத்திருக்க வேண்டும். ஆனால் சமுகப் பெருச்சாளிகள் இவரது கழுத்தை நெறுக்கி இருக்க வேண்டும். இவரது மனத்தையும் குணத்தையும் கால்பந்தாக உதைத்திருக்க வேண்டும். மாற்றம் இவர்களை மாற்றி விடுமே என்று எண்ணி புத்தி பேதலித்து விட்டதாக பொய்யான பரப்புரையைப் பரப்பி இருக்க வேண்டும். எல்லா அழுத்தமும் ஒன்று கூடி இவரையும் நம்ப வைத்திருக்க வேண்டும்.

ரயில் பறக்கும் பாலத்தில் இருந்து இறங்கி வேளச்சேரியை நோக்கி வந்துகொண்டு இருந்தது. அந்த நபர் சட்டென யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் யோசிக்காமல் அந்த பெட்டிக்குள் எதையோ தேட ஆரம்பித்தார். இருக்கைக்கு கீழே குனிந்து பார்த்தார். ரயிலின் மேல் அடுக்கில் இருக்கும் லக்கேஜ் வைக்கும் இடத்தை நிமிர்ந்து பார்த்தார். சில பயணிகள் இறங்கத் தயார் ஆனார்கள். சில பயணிகள் ரயில் நிற்கட்டும் என்ற நினைப்போடு இருக்கையில் அமர்ந்திருந்தார்கள். அவரோ பயணிகளின் ஊடாக எதையோ தேடிக் கொண்டு சென்றார். ஓர் இருக்கையின் கீழே காலி தண்ணீர் பாட்டல் இருப்பதைப் பார்த்து கோபத்தோடு நிமிர்ந்து இறங்கப் போகும் பயணிகளிடம் அந்த காலி பாட்டலை சுட்டிக் காண்பித்து திட்ட ஆரம்பித்தார். அந்த திட்டல் காற்றோடு மட்டுமே கலந்து கலைந்து சென்றுவிட, பயணிகள் பொம்மைகளாக இறங்குவதற்குத் தயார் ஆகிக் கொண்டு இருந்தார்கள்.

அவர் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டே குனிந்து அந்த பாட்டலை எடுத்து சமூகத் தவறுக்கு தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்வது போல, மறுபடியும் தனது தலையில் தானே பளார் பளார் என அடித்துக் கொண்டார். மறுபடியும் தேட ஆரம்பித்தார். மற்றுமொரு பாட்டல் அவரது கைக்கு கிடைத்தது. அதே கோபம். அதே திட்டல். அதே நிகழ்வு. ரயில் நி‎‎‎ன்றது. ஆனாலும் அவர் தேடல் தொடர்ந்தது.

லக்கேஜ் வைக்கும் இடத்தில் இரு பாட்டல்கள் இருப்பதைப் பார்த்தார். எக்கிக் கொண்டு எடுக்க முனைந்தார். முடியவில்லை. அந்த நேரத்தில் அருகே இருக்கையில் அமர்ந்து இருக்கும் இளைஞன் காதில் ஹெட் போனோடு எந்திரிக்க, அவர் அவனிடம் அந்த பாட்டலை எடுக்கும்படி கூறினார். புரியாதவன் ஹெட்போனைக் கழற்றி விட்டு மிகவும் தோரணையாக “என்ன” என்று கண்ணை மட்டும் அசைத்துக் கேட்க, அவரோ மிகவும் கோபமாக பாட்டலை சுட்டிக் காட்டி எடுக்கும் படி கூற, அவனோ அவரை முறைத்து பார்த்துக் கொண்டே இரு பாட்டலையும் எளிதாக எடுத்து அவரிடம் கொடுத்தா‎ன். அவரோ அதை வாங்காமல் ‘பின்னால் வா’ என்று கையைக் காண்பித்து முன்னால் நடந்து செல்ல, அவனோ அவரை முறைத்து பார்த்துக் கொண்டே அவர் பின்னால் நடந்தா‎ன்.

பிளாட்பாரத்திலே ஜனங்களின் கூட்டம் கால்கள் பரபரக்க, செருப்பின் ஓசை சரசரக்க முட்டி மோதி வேறொரு பயணத்திற்கு தயாராகி வேகவேகமாக சென்றுகொண்டு இருந்தார்கள். அவர் ரயிலில் இருந்து இறங்கி எதிரே இருக்கும் சிமெண்ட் இருக்கையோடு சேர்த்து இரும்பு சங்கிலியால் கட்டப்பட்டிருக்கும் குப்பைத் தொட்டியை நோக்கிச் செல்ல, அந்த இளைஞனும் ஒரு வித சலிப்போடு அவரின் பின்னால் செ‎ன்றா‎ன். அவர் அந்த குப்பைத் தொட்டி அருகே போய் நின்று அந்த இளைஞனைப் பார்த்து “ஹ… ஹா…” என்று அதிகாரத்தோடு செய்கை செய்து கூற, அந்த இளைஞனும் கோபமாக நடந்து வந்து குப்பைத் தொட்டிக்குள் வாட்டர் பாட்டலை தூக்கி எறிந்துவிட்டு தலையைக் குனிந்தவாறு கடகவென நடந்து சென்றா‎ன்.

அவரோ தன்னிடம் இருக்கும் பாட்டலை தலைக்கு மேல் தூக்கிக் காண்பித்து ஏதோ உலகிற்கு உணர்த்துவது போல புரியாத மொழியில் கத்தி கூப்பாடு போட்டு கூறி விட்டு, கையில் இருக்கும் பாட்டலை குப்பைத் தொட்டி அதிரும்படி எறிந்துவிட்டு மாற்றம் விரும்பாத ஜனங்களை கோபத்தோடு பார்த்தார். கடந்து செல்லும் ஜனங்களில் சிலர் எட்டிக் கூட பார்க்காமல் “பைத்தியம் ஏதோ செய்து கொண்டிருக்கிறது” என்று நினைத்தவாறு வேக வேகமாக கடந்து செ‎ன்றார்கள். சிலரோ “பைத்தியம்” என்று தலையில் அடித்துக் கொண்டார்கள். சிலரோ திரும்பிப் பார்த்தால் தானும் பைத்தியம் ஆகிவிடுவோம் என்ற எண்ணத்தோடு திரும்பிப் பார்க்காமல் செ‎ன்றார்கள்.

நான் ரயிலை விட்டு இறங்காமல் அவர் ஆற்றும் அந்த சமூகப் பணியை படிக்கட்டில் நின்றவாறு பார்த்துக் கொண்டிருந்தேன். ஜனங்களை கோபமாகப் பார்க்கும் கண்கள் இப்பொழுது என்னை நோக்கின. என்னைப் பார்த்ததும் அவரது உதட்டிலே சிறு புன்னகை உருவெடுத்தது. ரயிலோட்டத்திலேயே அவர் என்னைப் பார்த்திருப்பார் போல. அவருள் ஒருவராக என்னை ஏற்றுக்கொண்டாரோ என்னவோ? அந்தப் புன்னகை எதை உணர்த்தியது என்பது எனக்குப் புரியவில்லை. எனது மனம் அவரது செயலை ரசித்தாலும் ஏதோ ஒரு குற்ற உணர்வு அவரது தீரப் பார்வைக்கு ஈடு கொடுக்க முடியாமல் போக, எனது கால்கள் அவசர அவசரமாக நடந்து செல்லும் ஜனங்களோடு கலந்தது. இல்லை, பைத்தியக்காரக் கூட்டத்தோடு கலந்தது.

புறப்படத் தயாராகும் ரயிலின் ஹார்ன் சத்தம் அண்ட சராசரத்தை மூழ்கடித்தது.

– அமிர்தராஜா

 

நன்றி : கீற்று இணையம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More