தமிழ் இலக்கியம் | சிந்து பாடல்கள் தமிழ் இலக்கியம் | சிந்து பாடல்கள்

தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று. வாழ்வின் பல்வேறு கூறுகளை தமிழ் இலக்கியங்கள் இயம்புகின்றன.

தமிழ் மொழியில் மரபுரீதியாக 96 இலக்கிய நூல் வகைகள் உண்டு. இன்று தமிழ் மொழியில் பல புது இலக்கிய வகைகள் உருவாக்கப்பட்டு தமிழ் இலக்கியம் விரிந்து செல்கின்றது.

பண்டைக்காலத்தில் வாழ்ந்த தமிழ்ப்புலவர்கள் என்றும் அழியாத தமிழ் இலக்கியங்களை இயற்றி பல நல்ல கருத்துகளை வெளியிட்டுள்ளனர். தமிழில் உள்ள இலக்கியங்களில் மிகவும் பழமையானவை சங்க இலக்கியங்கள் ஆகும்.

சங்க இலக்கியம் இயல் இசை நாடகம் என மூன்று பிரிவில் அடக்கப் படுகிறது. அதில் இசை என்னும் பிரிவில் சிந்து பாடல்களும் உள்ளடங்குகின்றன.

சிந்து என்பது நடைப்பாடல். பயணத்தின் போதோ, பயணத்துக்கு முன்னரோ உற்சாகம் பற்றிக் கொள்வதற்காகப் பாடுவது! காவடி எடுத்துப் பயணம் போகும் போது பாடுவது காவடிச் சிந்து!

இவற்றுள் ஒரு பாடலை இங்கே பார்க்கலாம்.

 

பல்லவி:

யசோதை:
மாடு மேய்க்கும் கண்ணே நீ
போக வேண்டாம் சொன்னேன்

அனுபல்லவி:

கண்ணன்:
போக வேணும் தாயே
தடை சொல்லாதே நீயே

சரணம்:

காய்ச்சின பாலு தரேன்; கல்கண்டுச் சீனி தரேன்
கை நிறைய வெண்ணைய் தரேன்; வெய்யிலிலே போக வேண்டாம்
(மாடு மேய்க்கும் கண்ணே – நீ போகவேண்டாம் சொன்னேன்)

காய்ச்சின பாலும் வேண்டாம்; கல்கண்டுச் சீனி வேண்டாம்
உல்லாசமாய் மாடு மேய்த்து, ஒரு நொடியில் திரும்பிடுவேன்
(போக வேணும் தாயே – தடை சொல்லாதே நீயே)

யமுனா நதிக் கரையில் எப்பொழுதும் கள்வர் பயம்
கள்வர் வந்து உனை அடித்தால் கலங்கிடுவாய் கண்மணியே
(மாடு மேய்க்கும் கண்ணே – நீ போகவேண்டாம் சொன்னேன்)

கள்ளனுக்கோர் கள்ளன் உண்டோ? கண்டதுண்டோ சொல்லும் அம்மா?
கள்வர் வந்து எனை அடித்தால் கண்ட துண்டம் செய்திடுவேன்
(போக வேணும் தாயே – தடை சொல்லாதே நீயே)

கோவர்த்தன கிரியில் கோரமான மிருகங்கள் உண்டு
கரடி புலியைக் கண்டால் கலங்கிடுவாய் கண்மணியே
(மாடு மேய்க்கும் கண்ணே – நீ போகவேண்டாம் சொன்னேன்)

காட்டு மிருகமெல்லாம் என்னைக் கண்டால் ஓடி வரும்
கூட்டங் கூட்டமாக வந்தால் வேட்டை ஆடி ஜெயித்திடுவேன்
(போக வேணும் தாயே – தடை சொல்லாதே நீயே)

பாசமுள்ள நந்தகோபர் பாலன் எங்கே என்று கேட்டால்
என்ன பதில் சொல்வேனடா என்னுடைய கண்மணியே
(மாடு மேய்க்கும் கண்ணே – நீ போகவேண்டாம் சொன்னேன்)

பாலருடன் வீதியிலே பந்தாடுறான் என்று சொல்லேன்
தேடி என்னை வருகையிலே ஓடி வந்து நின்றிடுவேன்
(போக வேணும் தாயே – தடை சொல்லாதே நீயே)

 

 

 

நன்றி : தமிழ் இலக்கியம்

 

ஆசிரியர்