கவிதை | நம்பிக்கைத் துளி | முல்லை அமுதன் கவிதை | நம்பிக்கைத் துளி | முல்லை அமுதன்

 

 

எப்போதும்

வேர்களின்

நம்பிக்கையில் இறுமாப்புடன்

நிற்கும்…புயல்

வந்து மோதினாலும்

வெற்றிவீரனாகவே சாயும்..

 

நாணல்

மரத்தைப் பார்த்தே கிண்டலடிக்கும்..

 

தன்னைப்போல்

இரு…

வாழலாம்…

 

பூக்கள்

வண்டுடன் காமுற்ற

போதையில்

கிடக்கும்..

 

இலைகள் யாராவது

உரசமாட்டார்களா

என்று சிலிர்த்து

நிற்கும்…

 

சருகாவதற்குள்

வாழ்வை

அனுபவித்துவிடும் துடிப்பு…

 

மரம்

தன்னில்

முளைத்தவற்றைப் பார்த்து

சிரித்துக் கொண்டாலும்

மௌனமாகவே

நிற்கும்..கம்பீரமாக..

 

இலைகளும்..பூக்களும்

விசுவாசமாகவே

இருக்கும்

என்கிற

நம்பிக்கையில்

குருவிச்சை

ஒட்டி

முளைத்ததை

அறியாமாலேயே வளர்ந்தது.

 

பூக்களின்

காமம்,

இலைகள்

குருவிச்சையுடனான

உரசல்..

 

மரத்தை

வெட்டிச் சாய்க்க

சரிந்து வீழ்ந்தது…

 

வேர்கள்

மட்டும் கவலைப்படாதே…

இதுதான் வாழ்க்கை…

நானிருக்கிறேன்..

என்னிலிருந்து

புதிதாய்

வீச்சுடன் மரம்

முளைக்கும் என்றது….

 

 

– முல்லை அமுதன் –

ஆசிரியர்