கவிதை | மனதோடு மழைக்காலம் | ஏ. கோவிந்தராஜன்கவிதை | மனதோடு மழைக்காலம் | ஏ. கோவிந்தராஜன்

ஒரு மழைநாளில்

குடை பிடித்திடித்திருந்தேன்

நீ நனையக்கூடாதென

மழையில் நனைந்தபடி….

 

உன்னை நனைக்க வந்த

மழைத்துளிகள் எல்லாம்

கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தன

குடையோரக் கம்பிகளில்…..

 

குடையின் உள்ளே

கம்பிகளெல்லாம்

சிலிர்த்துக் கொண்டிருந்தன

உன்னைப் பார்த்தபடி……

 

உன் அழகைப் படம் பிடிக்க

அடிக்கடி வந்து ஃப்ளாஷ்

அடித்துவிட்டுப் போகிறது

மின்னல் ஒளி…..

 

மின்னல் ஓளியில் உன் அழகைக்

கண்டு ரசிக்க முட்டி மோதி

சண்டையிட்டுக் கொள்கின்றன

மேகங்கள் எல்லாம்…….

 

மேகங்களெல்லாம் உன்னை

நனையச் சொல்லி

மிரட்டிக் கொண்டிருக்கின்றன

இடியோசைகளாய்…….

 

எவ்வளவோ முயன்றும்

கடைசியில் தோற்றுப் போகிறது

என்னிடம் குடையைப்

பறிக்க முயற்சித்த காற்று……

 

மழைத் துளிகளிடமிருந்து

எப்படியோ உன்னைக்

காப்பாற்றி விட்டதாய்

நான் மகிழ்கையில்

 

காலடியில் திடீரென சிரிப்பொலி

உன் பாதம் நனைத்த

மழைத் துளிகளெல்லாம்

துள்ளிக் குதித்தோடின

என்னைப் பார்த்து

ஏளனமாய்ச் சிரித்தபடி…!

 

 

 

நன்றி : நிலாச்சாரல் | ஏ. கோவிந்தராஜன்

ஆசிரியர்