கருவானேன்
ஊண் மறந்தாய்,
உருவானேன்
துயில் துறந்தாய்,
பாயோடு பாயாய்
பல நாள்க் கிடந்தாய்
முட்களில் நடந்தாய்,
நீர்க்குடமுடைத்தேன்
வலி பொறுத்தாய்,
உயிர்த்தேன்
நீயும் உயிர்த்தாய்,
உலகை ஜெயித்ததாய்
கடை விழி நனைய
சிலிர்த்தாய்.
மார்புக்குள்
எனை மறைத்தாய்,
முத்து முத்தாய்
கன்னத்தில்
முத்தங்கள் பதித்தாய்,
தாலாட்டுக்குள்
தத்துவங்கள் புதைத்தாய்.
கொத்துக் கொத்தாய்
அன்பை அள்ளிக் கொடுத்தாய்,
நாட்கள் நகர நகர
அகர முதல
சொல்லிக் கொடுத்தாய்,
கருத்தாய்
எனை வளர்த்தாய்.
தாயே..!
நிறைவாய் சிரித்தாய்,
குறைவாய் மொழிந்தாய்,
வறுமை மறைத்து
மறைவாய் அழுதாய்.
ஒரு வாய்
இன்னுமொரு வாய் என
பாசத்தை ஊற்றி
பிசைந்துணவு தந்தாய்,
நானுண்ண
அக மகிழ்ந்தாய்.
வெயிலில்
முந்தானை குடை பிடித்தாய்,
குளிரில் முந்தானையில்
அடை காத்தாய்.
என்
சின்னச்சின்ன பிணியிலும்
உடைந்தாய்,
இறை தொழுதாய்,
பணி புரிந்தே கரைந்தாய்.
தோழியாய்,
நல்ல தாதியாய்,
வேலியாய்,
மெய்யில் பாதியாய்,
நிழலாய் என்னோடு நடந்தாய்.
தாயே..!
இதயத்தில் உறைந்தாய்,
உயிரில் காற்றாய்
நிறைந்தாய்,
முப்பொழுதும் இச்சேய்க்காய்
வாழ்ந்தே உதிந்தாய்.
உயர்ந்த சொத்தாய்
உள்ளங்கை முத்தாய்
உயிருள்ள வரை
உள்ளத்தில் சுமக்க வேண்டியவள்
தாய்.
நன்றி : றாபி | கலைச் சுடர்