செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் கவிதை | கவிஞர் வைரமுத்து | பூக்களும் காயம் செய்யும்கவிதை | கவிஞர் வைரமுத்து | பூக்களும் காயம் செய்யும்

கவிதை | கவிஞர் வைரமுத்து | பூக்களும் காயம் செய்யும்கவிதை | கவிஞர் வைரமுத்து | பூக்களும் காயம் செய்யும்

1 minutes read

போடி போடி கல்நெஞ்சி!

மார்புக்கு ஆடை
மனசுக்கு பூட்டு

ஒரே பொழுதில்
இரண்டும் தரித்தவளே!

காதல் தானடி
என்மீதுனக்கு?

பிறகேன்
வல்லரசின்
ராணுவ ரகசியம்போல்
வெளியிட மறுத்தாய்?

தூக்குக்கைதியின்
கடைசி ஆசைபோல்
பிரியும்போது ஏன்
பிரியம் உரைத்தாய்?

நஞ்சு வைத்திருக்கும்
சாகாத நாகம்போல்
இத்தனை காதல் வைத்து
எப்படி உயிர் தரித்தாய்?

இப்போதும் கூட
நீயாய்ச் சொல்லவில்லை
நானாய்க் கண்டறிந்தேன்

இமைகளின் தாழ்வில் –
உடைகளின் தளர்வில் –

என்னோடு பேசமட்டும்
குயிலாகும் உன்குரலில் –

வாக்கியம் உட்காரும்
நீளத்தில் –
வார்த்தைகளுக்குள் விட்ட
இடைவெளியில் –

சிருங்காரம் சுட்ட
பெருமூச்சில்

வறண்ட உதட்டின்
வரிப்பள்ளங்களில் –

நானாய்த்தான் கண்டறிந்தேன்
காதல் மசக்கையில்
கசங்கும் உன் இதயத்தை.

சேமித்த கற்பு
சிந்தியா போயிருக்கும்?

நீயாக கேட்டிருந்தால்
நெஞ்சு மலர்ந்திருப்பேன்

உண்டென்றால்
உண்டென்பேன்
இல்லையென்றால்
இல்லையென்பேன்

இப்போதும் கூட
தேசத்துரோகமென்பதை
ஒப்புக்கொள்ளாத தீவிரவாதி மாதிரி

உள்ளாடும் காதலை
ஒளிக்கவே பார்க்கிறாய்

காதலில்
தயக்கம் தண்டனைக்குரியது
வினாடி கூட
விரயமாதல் கூடாது

காலப் பெருங்கடலில்
நழுவி விழும் கணங்களை
மீண்டும் சேகரிக்க
ஒண்ணுமா உன்னால்

இந்தியப் பெண்ணே!
இதுவுன்
பலவீனமான பலமா?
பலமான பலவீனமா?

என்
வாத்தியக்கூடம்வரை
வந்தவளே

உன் விரல்கள்
என் வீணைதடவ வந்தனவா?

இல்லை
புல்லாங்குழல் துளைகளைப்
பொத்திப்போக வந்தனவா?

என் நந்தவனத்தைக்
கிழித்துக்கொண்டோடிச்
சட்டென்று வற்றிவிட்ட நதி நீ

உன் காதலறிந்த கணத்தில்
என் பூமி பூக்களால் குலுங்கியது

நீ வணங்கிப் பிரிந்தவேளை
என் இரவு நடுங்கியது

பிரிவைத் தயாரித்துக் கொண்டுதானே
காதலையே அறிவித்தாய்

இருபதா? முப்பதா?
எத்தனை நிமிடம்?
என் மார்பு தோய்ந்து நீ
அழுததும் தொழுததும்

என் பாதியில்
நீ நிறையவும்
உன் பாதியில்
நான் நிறையவும்
வினாடித்துகள் ஒன்று
போதுமே சிநேகிதி

நேரம் தூரம் என்ற
தத்துவம் தகர்த்தோம்

நிமிஷத்தின் புட்டிகளில்
யுகங்களை அடைத்தோம்

ஆலிங்கனத்தில்
அசைவற்றோம்

உணர்ச்சி பழையது
உற்றது புதியது

இப்போது
குவிந்த உதடுகள்
குவிந்தபடி
முத்தமிட நீயில்லை

தழுவிய கைகள்
தழுவியபடி
சாய்ந்து கொள்ள நீயில்லை

என் மார்புக்கு வெளியே
ஆடும் என் இதயம்
என் பொத்தானில் சுற்றிய
உன் ஒற்றை முடியில்

உன் ஞாபக வெள்ளம்
தேங்கி நிற்குது
முட்டி அழுத்தி நீ
முகம்பதித்த பள்ளத்தில்

தோட்டத்துப் பூவிலெல்லாம்
நீ விட்டுப்போன வாசம்

புல்லோடு பனித்துளிகள்
நீவந்துபோன அடையாளமாய்க்
கொட்டிக் கிடக்கும்
கொலுசுமணிகள்

நம் கார்காலம்
தூறலோடு தொடங்கியது
வானவில்லோடு நின்றுவிட்டது

உன் வரவால்
என் உயிரில் கொஞ்சம்
செலவழிந்து விட்டது

இந்த உறவின் மிச்சம்
சொல்லக்கூடாத
சில நினைவுகளும்

சொல்லக்கூடிய
ஒரு கவிதையும்.

 

 

– கவிஞர் வைரமுத்து –

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More