செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் பயணம் | சிறு கதை | அருணை ஜெயசீலிபயணம் | சிறு கதை | அருணை ஜெயசீலி

பயணம் | சிறு கதை | அருணை ஜெயசீலிபயணம் | சிறு கதை | அருணை ஜெயசீலி

3 minutes read

இருள் பிரியாத அதிகாலைப் பொழுது அது. மணி இரண்டரை இருக்கலாம். கோயமுத்தூரிலிருந்து சேலம் செல்லும் எங்கள் பேருந்து இன்னும் சிறிது நேரத்தில் பெருந்துறை அடைந்து விடும் அறிகுறியாக பேருந்துக்குள் விளக்குகள் போடப்பட்டன. “ பெருந்துறையெல்லாம் வெளியே வா…! ” என்ற நடத்துனரின் சத்தத்தில் என் தூக்கம் கலைந்தது.

மூலை முடுக்கிலிருந்து எறும்புகள் புறப்படுவதைப் போல் மனிதர்கள் எழுந்து படிக்கட்டுப் பக்கம் நெருக்கினர். இன்னும் இரண்டு மணி நேரம் இப்படியே உட்கார்ந்திருக்க வேண்டும் என்கிற நினைவே எனக்கு ஆயாசமூட்டியது. கடவுளே, சேலம் வருவதற்குள் கால் நீர் கோர்த்து மரத்து விடும் போலிருக்கிறதே….

அனிச்சையாக என் பார்வை மேலே வைத்திருந்த சூட்கேஸ் மேல் சென்றது. அழகான சூட்கேஸ் ! அதன் அருமையான கைப்பிடி திருட எண்ணமில்லாதவனையும் திருடத் தூண்டி விடும் போலிருந்தது. இந்த சமயம் தூங்கக் கூடாது. எவனாவது போகிற போக்கில் சூட்கேஸை லவட்டிக் கொண்டு போய் விட்டால் என்ன செய்வது?

வெறுமனே உட்கார்ந்திருந்தாலும் தூக்கம் கண்ணைக் கவ்வியது.

என் கையில் சின்னப் புத்தகமிருந்தது. “ மரணத்துக்கு அப்பால்…. ” என்பது தலைப்பு. டார்ச் அடித்து சும்மா அந்தப் புத்தகத்தில் பார்வையை மேய விட்டேன்.

பெருந்துறையிலேயே கொஞ்ச நேரம் நின்று விட்டது பேருந்து.

நான் புத்தகத்தைப் புரட்டினேன்.

“ நாம் கண்ணால் காணும் சரீரம் ஸ்தூல சரீரம் எனப்படுவது. இதனுள் சூட்சும சரீரம் ஒன்றிருக்கிறது. சூட்சும சரீரம் ஆன்மா அல்ல. மாறிக் கொண்டே இருக்கும் ஸ்தூல சரீரத்தில் இருந்துகொண்டு மாறாத ஒரு நிலையை நாம் அனுபவிக்கிறோம் என்றால் அதற்கு சூட்சும சரீரம் ஒரு காரணமாகும்..

அதாவது நாம் குழந்தையாய் இருந்த போது வாய்த்த ஸ்தூல சரீரம் இப்போதில்லை. இந்த சரீரம் இன்னும் பத்து வருடம் கழித்து இருக்கப் போவதில்லை. ஒவ்வொரு கணமும் ஆகியும் அழிந்தும் நீர்ப் பெருக்காய் நம் உடல் அணுக்கள் ஓடிக் கொண்டிருந்தாலும் நான், எனது என்னும் கிடக்கைகள் நமக்கு இருந்து கொண்டே இருக்கின்றன. நாம் காலம் காலமாக அந்த “ நானோடு ” ஒன்றி வாழ்வது போலவே தோன்றுகிறது. அதற்குக் காரணம் இந்த சூட்சும சரீரம்…!

இந்த சூட்சும சரீரம் எப்படி இருக்கும்?

முழு வளர்ச்சியடைந்த ஸ்தூல சரீரமே சூட்சும சரீரத்தின் வடிவமாகும். முழு வளர்ச்சியடைந்த பிறகு தேகத்துக்கு தேய்மானம் வந்து விடுகிறது. தேய்மானத்துக்கு முந்திய நிலையில் சூட்சும சரீரம் விளங்கும். ஒரு ஐந்து வயதுக் குழந்தையின் சூட்சும சரீரம் கட்டுடல் கொண்ட வாலிப தேகமாய் இருக்கலாம். இதே போல் அறுபது வயது முதியவரின் சூட்சும சரீரமும் வாலிபப் பிராயத்தில் இருக்கும்….

இந்த சூட்சும சரீரத்துக்கு பசி, பிணி, மூப்பு, மரண அவஸ்தை போன்ற உடல் உபாதைகள் இல்லை. உடல் தேவைகளும் இல்லை. ஆண் பெண் போன்ற உடல் உணர்ச்சி, உடல் வழி வந்த சொந்த பந்தங்களின் மீது பாசம் போன்ற விசித்திரங்கள் சூட்சும சரீரத்தை ஆட்டி வைப்பதில்லை. இது இடம் காலம் என்கிற பரிணாமங்களை எளிதில் கடக்கிறது.

உடம்பை மீறி எதிர்காலத்தில் பயணிக்கும் சூட்சும சரீரம் நடக்கவிருக்கும் நன்மை தீமைகளை சில அறிகுறிகள் மூலம் உணர்த்துகிறது. சிலர் இடது கண் துடித்தால் நல்லது நடக்கிறது; அதே போல் வலது கண் துடிப்பது வில்லங்கத்துக்கு அறிகுறி என்று சொல்வதன் காரணம் இதுதான்….!

இன்னும் சில பேருக்கு புதிய இடம் பழகியது போல் தோன்றும். காரணம் அவர்களுடைய சூட்சும சரீரம் அவர்களுக்கு முன் அங்கு வந்திருக்கலாம்…!

நாம் அனுதினமும் உடல் தேவைகள், அவற்றை திருப்திபடுத்தும் செயல்களையே செய்து கொண்டிருக்கிறோம். இவ்வகைச் செயல்களின் போது சூட்சும சரீரம் சும்மாவே இருக்கும். உடம்பை மீறி நம்பிக்கையுடன் நாம் எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் சூட்சும சரீரத்தை செயல்படுத்தி விடுகின்றன. உண்மையைத் தேடும் ஆவல், கைம்மாறு கருதாத அர்ப்பணிப்பு, விருப்பு வெறுப்பற்று கடமையைச் செய்வது, அபாய காலத்தில் பிற உயிர்களைக் காப்பாற்ற மனப்பூர்வமாக விழைவது முதலியன சூட்சும சரீரத்தை இயங்க வைக்கின்றன…! இயக்கப்பட்ட சூட்சும சரீரம் மரணத்துக்குப் பின்னரும் சில கணங்கள் தனது பணியைத் தொடர்கிறது.. !

அடுத்து படிப்பதற்குள் பேருந்து எடுக்கப்பட்டு விட்டது. ம்..ம்… நான் புத்தகத்தை மூடி வைத்தேன். சில நிகழ்வுகளுக்கு விஞ்ஞானத்தில் விடையில்லை…! இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டது எந்த அளவு உண்மை?

இந்த உடம்பு வேறு, நான் வேறு என்று நிறைய மகான்கள் சொல்லியிருக்கிறார்கள்.

நடத்துனர் பயணச்சீட்டு கொடுத்துக் கொண்டிருந்தார். நான் சுற்றியுள்ளவர்களைப் பார்த்தேன்..

இருக்கையில் உட்கார்ந்து பயணம் செய்தவர்களைத் தவிர பேருந்தின் அடி மட்டத்திலும் ஒரு வரிசை உட்கார்ந்திருந்தது. ஜன்னலுக்குப் பக்கத்தில் நான், என் பக்கத்தில் என் வயதை ஒத்த இருவர், அந்த வரிசையில் கைக்குழந்தையோடு கணவன் மனைவி…

நான் சூட்கேஸை பார்த்துக் கொண்டேன்.

விளக்கு அணைந்ததும் திரும்பவும் எல்லோரும் தூக்கத்துக்குத் தாவினோம்.

ஒரு கட்டத்தில் குறுக்குச் சாலை வழியே படு வேகமாக வந்த லாரி எங்கள் பேருந்தின் பக்கவாட்டில் மிகச் சரியாக என் இருக்கைக்கு நேராக வந்து மோதியது.

என் தலை கழுத்திலிருந்து பத்து சென்டிமீட்டர் தள்ளப்பட்டு திரும்பியது. உயிர் முடிச்சு எனப்படும் முகுளத்தின் மேல் பலத்த அடி ! ! !

அதே சமயம்….

“ ஐயோ, யாராவது என் குழந்தையைக் காப்பாத்துங்களேன் “ – கைக்குழந்தையை வைத்துக் கொண்டிருந்த அந்தப் பெண் அலறினாள்.

நான் கை நீட்டி…… னே……… ………..

எழுத்தில் விவரிக்க இயலாத ஒரு பயங்கர சத்தம்….! பேருந்து அப்படியே பக்கவாட்டில் கவிழ்ந்ததில் பயணிகள் வெளியேறும் வழி தரையில் படிந்தது.

ஒருவர் மீது ஒருவர் அடியற்ற மரமாய் சாய்ந்தனர்.

அடுத்து நடந்தவை எல்லாம் சில நொடிகளில் நடந்தேறின.

“ சார், சார்…! இவர் இறந்துட்டார்.. “ – பக்கத்து இருக்கைக்காரரின் கதறல்..!

ஒரே தள்ளுமுள்ளு.. ! அலறல்…! முண்டியடித்து தப்பிக்க முயற்சித்ததில் ஏற்பட்ட உயிர்ச்சேதம் மற்றும் காயங்கள்… !

சிலர் ஜன்னல் வழியாக வெளியேறினர்.

லாரி இடித்த பக்கம் சில தீப்பொறிகள் தென்பட்டன…..! ! ! !

அடுத்த நொடி….

குபீரென்று தீப்பிடித்தது…! ! !

இற்று விழுந்த என் கையிலிருந்து இன்னொரு கை புறப்பட்டது. அந்தக் குழந்தையைப் பிடித்து, பக்குவமாக சாலையோரத்தில் உட்கார்ந்திருந்த ஒரு பெண்மணியின் மடியில் விழுமாறு தூக்கிப் போட்டது….!

முற்றும்…

நன்றி : எழுத்து.காம் | அருணை ஜெயசீலி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More