அந்தக் கிராமத்தைத் தழுவி செல்லும் ஒரு கிரவல் பாதை. பாதையின் இரு பக்கங்களில் மூன்றடிக்கு வளர்ந்த சணல் புற்களும், ஈச்சம் பற்றைகளும் வளர்ந்த மரங்கள் என்று சொல்லப் போனால் மிக குறைவு . பாதை ஓரம் ஒரு நீர் குட்டை. அதன் அருகே செழித்து வளர்ந்த ஆலமரம்.
ஆலமரத்தின் அருகே ஒரு சுமைதாங்கி. அதன் அருகே ஆடு, மாடு போன்ற கால் நடைகள் தங்கள் உடலில் திணவு ஏற்படும் போது உடலை சொரிந்து கொள்வதற்கு வைக்கப்பட்ட ஆதீண்டுக்கல். இது முன்னோர் வகுத்த 32 அறங்களுள் ஒன்று. பண்டைய தமிழ் மக்கள் கோவிலுக்கு கொடை அளிப்பது, ஏரி குளங்கள் வெட்டுவது போன்ற அறச்செயல்களில் ஒன்றாக, ஆடு மாடுகளின் இயற்கை உணர்வுகளை திருப்தி படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டன . அது குறைந்தது இருபது வருடங்கள் பழமை வாய்ந்தது.
பாதையின் வலது பக்கத்தில் உள்ள வெளியானது தமிழ் விடுதலை புலிகள் தமிழரின் உரிமையைப் பாதுகாக்க அரசோடு நடத்திய போர்ககளம் அந்த வெளி . போரில் பாவித்த பல வித இரும்பு வாகனங்கள் கறள் பிடித்துப் போய் போரின் நினைவு சின்னங்களாக அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தன. ஒரு காலத்தில் பொன் விளையும் பூமியாக இருந்த நிலம் அது அந்த நிலத்தில் தமிழ் மாவீரர்களின் குருதி ஆறாக ஓடியதால் புல் வெளிக்கு “குருதிவெளி” என்ற பெயர் கிடைத்தது.
போரின் விளைவால் பசுமையாக இருந்த அந்த வெளி பாலைவனமாயிற்று. அங்கு வீடுகள் தொன்றவில்லை. அதை அந்த வெளியை இடுகாடாகவே பக்கத்து கிராம வாசிகள் கருதினர். நல்லகாலம் அந்த போரில் தப்பியது சடைத்து வளர்ந்த ஆலமரம் ஒன்றே.
தடித்த பல விழுதுகள். மரத்தில் பறவைகளின் கூடுகள். மரத்தின் கீழ் கிராமத்து வச்சிகள் பூஜிக்கும் கல் ஓன்று. அதுக்குக் கூட ஆலமரத்தடி வீரமறவன் என்று ஊர் மக்கள் பெயர் வைத்து விட்டார்கள். அப்பாதையில் போவோர் வருவோர் அக் கருங்கல்லுக்கு பூ வைத்து மாவீரர் நினைவாக வணங்கி செல்வார்கள் . அதையிட்டு ஆலமரம் பெருமைப் பட்டது.
***
கன்னத்தில் கைவத்தவாறு எதையோ பறி கொடுத்தவன் போல் ஒரு இளைஞன் அந்த மரத்தின் கீழ் அடுத்து என்ன செய்வது என்று யோசித்தவாறு அமர்ந்திருந்தான். அழுது வீங்கிய அவன் முகத்தில் சோகம் பிரதிபலித்தது. அவனைப் பார்த்து மரம் பரிதாபப்பட்டது.
“ஏய் பையா உனக்கு என்ன அப்படி நடந்து விட்டது? சோகமாய் சிந்தித்தபடி இருக்கிறாயே” என்றது மரம் அவனைப் பார்த்து.
“ எனக்கு ஒன்றுமில்லை” என்றான் இளைஞன்
“நீ பொய் சொல்லுகிறாய். உனக்கு பக்கத்தில கயிறு ஒன்று இருக்கிறதே?”
“அதுக்கென்ன உனக்கு?”
“என் பெயருக்கு களங்கம் விளைவிக்கப் பார்க்கிறாயா?”
“உன் பெயர் என்ன? அப்படி உன் பெயருக்கு களங்கம் விளைவிக்க நீ பெரிய ஆளா?”
“ஆமாம். ஆலமரமான என்னை சுருக்கமாக ஆல் என்பார்கள். நான் பரிசுத்தமானவன்.. உன்னிலும் பல ஆண்டுகள் நான் வயது கூடியவன் அந்த வயதுக்கு ஏற்ற மதிப்பை எனக்குக் கொடு. எனக்கு கீழ் பார் ஒரு மாவீரனான உன் அப்பன் துயிலுகிறான் ”
“பரிசுத்தமா?. புதுமையாகயிருக்கிறதே. உன் உடம்பு முழுவதும் தூசியும் சிலந்தி வலைகளும் இருக்கின்றதே. காகங்கள் உன் உடம்பு முழுவதும் எச்சம் விட்டிருக்கின்றனவே. நீ எப்படி பரிசுத்தமானவன் என்று சொல்லமுடியும்?”
“உனக்கு வேதத்தை பற்றித் தெரியுமா? என்னில் சிவன் விஷ்ணு, பிரம்மன் ஆகிய திருமூர்த்திகள் குடியிருக்கிறார்கள் என்று வேதம் கூறுகிறது. அதனால் நான் பரிசுத்தமானவன்.”
ஆலமரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம் மரத்தின் கீழே அமர்ந்து தியானம் செய்தால் தியானம் எளிதாக கைகூடும். எனது மரத்தின் விழுதுகள் ஆண்மை குறைவை நீக்கும் தன்மையுடையது.”
“பறவைகள் தான் உன்னில் குடி இருக்கின்றன. நீ சொன்ன மூர்த்திகளை நான் காணவில்லை”
“சிவன் என் உச்சியிலும், விஷ்ணு என் நடுப்பாகமான தண்டிலும், பிரம்மன் என் அடியிலும் இருக்கிறார்கள் என்கிறது வேதம். ஆகவே நான் மரங்களுக்கெல்லாம் அரசன்”.
“நீ அதனால் எப்படி அரசனாக முடியும்?”
“என் கம்பீரத்தைப் பார்த்தாயா.. நான் எத்தனை விழுதுகள் விட்டு இருக்கிறேன் என்று அவதானித்தாயா.. அவை எல்லாம் எனக்கு பாதுகாவலர்களாக நிலத்தில் வேர் ஊன்றி இருப்பதை கண்டாயா.. நான் வயதில் முதிர்ந்தவன். ஒரு தமிழ் விடுதலை போரைப் பார்த்தவன். என்னை நம்பு. உன் தந்தை ஒரு மாவீரன். அவரை எனக்குத்தெரியும்”
“தெரியுமா.. கேட்க எனக்கு அதிசயமாகயிருக்கிறதே”.
“ஆம். பல வருடங்களுக்கு முன் நீ சிறுவனாக இருக்கும் போது பல் துலக்க ஆலம் விழுது பறிக்க அவர் வருவார். அதன் பின் உன் அக்கா காதலில் தோழ்வி கண்டு என்னில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாள். அந்த தன்னம்பிக்கையில்லாத குடும்பத்தில் சார்ந்த நீயும் உன் அக்காவை போல் என்னில் தூக்கு போட்டு தற்கொலை செய்யப் பார்க்கிறாய் அப்படித்தானே?”
“அது வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்ட விர்கதியால் நான் எடுத்த என் முடிவு. அதுக்கென்ன?”
“ஏற்கனவே “பேய் ஆல்” என ஊர்சனங்களிடம் உன் அக்காவினது செயலினால் கெட்டப் பெயர் வாங்கிவிட்டேன். உன் அப்பனின் வீரத் தியாகம் நினைவாக ஒரு நினைவுக் கல் என் கீழ் உண்டு. அவர்களின் ஆவி இங்கு உலாவுவதாக மக்கள் நம்பி ஒரு கல்லை காவலுக்கு எனக்குக் கீழ் வைத்து போயிருக்கிறார்கள். ஒரு காலத்தில என் விழுதுகளைப் பறித்து பல் தேய்க்க வருபவர்கள் கூட இப்போது பயத்தால் என்னிடம் வருவது கிடையாது.”
“நீ என்ன வைத்தியனா?”
“ஆம் நான் வைத்தியன் தான். நான் சொல்வதைக் கவனமாக பொறுமையாக கேள் பையா:”
“சொல்லு கேட்கிறேன்”
“என் கிளைகளிலிருந்து விழுதுகள் வளர்ந்து ஊன்றி மரத்தைத் தாங்கும் அமைப்புடையது. நிழல் தரும் மரமாக பல இடங்ககளில் வளர்க்கப்படுகிறது. எனில் வடியும் சாறு பால் வடிவாக இருக்கும். இலை, பூ, பழம், விதை, பால், பட்டை, விழுது ஆகியவை மருத்துவப் பயனுடையவை. விழுது, பட்டை, இலை, ஆகியவை உடல் பலம் பெருக்கியாகவும் வெப்பு அகற்றியாகவும் செயற்படும். ஆலம் பாலை காலை மாலை தடவி வர வாய்ரணம், நாக்கு, உதடு ஆகியவற்றில்வெடிப்பு, கை, கால் வெடிப்பு, பல் ஆட்டம் ஆகியவை தீரும்.
ஆலம் பழம், விழுது, கொழுந்து சம அளவு அரைத்து எலுமிச்சை அளவு காலை மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர விந்து அணுக்கள் உற்பத்தியாகும்.
விழுது துளிரையும் விதையையும் அரைத்து காலையில் மட்டும் பாலில் கொடுத்து வரத் தாய்ப்பால் பெருகும்.
துளிர் இலைகளை அரைத்து ஓரளவுக்கு தயிரில் கலந்து கொடுத்து வர இரத்த பேதி நிற்கும்.
முக்கியமாக விழுதைக் கொண்டு பல் தேய்த்து வரப் பற்கள் உறுதிப்படும்.
என்னில் இருந்து பல ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்க பயன்படுகிறது. அதோ பார் என் விழுதுகளில் தொங்கும் சின்ன தொட்டில்களை குழந்தை இல்லாதவர்கள் நேர்ந்து கட்டி விட்டு சென்றிருக்கிறார்கள். அது மட்டுமா எனக்கு பின் பக்கத்தில் உள்ள சுமைதாங்கியையும் ஆதீண்டுக்கல்லையும் பார்”
“அந்தக் கல் எதற்கு?”
“வெகு தூரம் நடந்துவந்தவர்கள் சுமைதாங்கியில் தம் பொருட்களை வைத்து என் நிழலில் இளப்பாறிச்செல்வதுண்டு. அது எனக்கு பெருமை தரும். என் மரத்தில் உள்ள காகக் கூடுகள் எத்தனையென்று பார்த்தாயா எனக்கு வாடகை தராமல் கூடு கட்டி வாழ்கின்றன. அதில் காகங்கள் முட்டையிட்டு குஞ்சுகள் பொரித்து பறந்து செல்லும் போது நான் எவ்வளவு சந்தோஷம் அடைவேன் தெரியுமா உனக்கு?
“அதில் என்ன சந்தோஷம் உனக்கு. அவர்கள் போகும் போது தம் எச்சத்தால் உன்னை அசுத்தப்படுத்தி விட்டு செல்கிறர்களே.”
“அது பரவாயில்லை. கடும் மழையில் அவை இருந்த இடம் தெரியாமல் கழுவிப்போய்விடும். ஆனால் உன் அக்காவால் எனக்கு ஏற்பட்ட கறை இன்னும் என்னை விட்டு போகவில்லை. மக்கள் பயத்தில் என் அருகே வர யோசிக்கிறார்கள். உன் அப்பனின் மாவீரத்தனம் தான் என்னில் மக்களுக்கு மதிப்பை கொடுத்துள்ளது. நீ அதை என்னில் தற்கொலை செய்து கெடுத்து விடாதே. உன் அப்பன் செய்த பெரும் புகழும் போய்விடும்.
“ உனக்குத் தெரியுமா எனக்கு உள்ள பிரச்சனைகள்?”
“ அப்படி என்ன தற்கொலை செய்ய உன்னைத் தூண்டிய பிரச்சனை? காதலில் தோல்வியா? அல்லது உனக்கு வேலை கிடைக்க வில்லையா? அல்லது உனக்கு தாழ்வு மனப்பான்மையயா?
“இல்லை இல்லை. என் தந்தை ஒரு மாவீரன் என்று மதிப்பளித்து எனக்கு ஒருவரும் உத்தியோகம் தரமாட்டார்களாம். அரசியல் கைதியாக சிறையில் சில வருடங்கள் இருந்து வந்து மாதங்கள் ஆகிறது என் மனைவியையும் ஒரு வயது குழந்தையையயும் என்னால் காப்பாற்ற முடியாது இருக்கிறது. நான் வாழ்ந்து என்ன பயன்? அது தான் தூக்குப்போட்டுச் சாகலாம் என்று வந்தால் உன் நச்சரிப்பு வேறு”
“தம்பி நீ ஒரு கோழை. உன்னில் நம்பிக்கையில்லாதவன். என்னைப்போல் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை உனக்கு வேண்டும். உத்தியோகம் உன்னைத் தேடிவரும். இயற்கையன்னையின் குழந்தைகள் நாம். ஆகவே ஒருத்தருக்கு ஒருவர் உதவ வேண்டாமா?”
“உதவியா. நான் போக வழியைக் காணோமாம். நான் எப்படி உதவ முடியயும்?
“உன்னால் முடியும் தம்பி. சற்று சுற்றுமுற்றும் பார். எத்தனை எத்தனை விழுதுகள் தொங்குகின்றன என்று பார்த்தாயா? அது மட்டுமா? அந்த சுமைதாங்கியில் எக்தனை பேர் களைப்பாறி செல்வதையும் பார்த்தாயா?”
“தெரிகிறது.. இப்ப அதற்கு என்னை என்ன செய்யச் சொல்கிறாய்?”
“இரண்டு மைல்தூரத்தில உள்ள பக்கத்து ஊர்களில் ஆலமரங்கள் கிடையாது. அங்குள்ள ஆயுர்வேத வைத்தியருக்கு பல்வைத்தியத்துக்கு மருந்து தயாரிக்க என் விழுதுகள் தேவைப்படும். நீ ஏன் அவற்றை சிறுதுண்டுகளாக வெட்டி எடுத்துச் சென்று அவருக்கு கொடுத்து ஏன் பணம் சம்பாதிக்க முடியாது? அதோடு அந்த சுமைதாங்கிக்கு அருகே இளனி வியாபாரம் ஆரம்பி. வந்து தங்கி போகிறவர்கள் தாகத்துக்கு நிச்சயம் வாங்கிக்குடிப்பார்கள். இரண்டு மைல் தூரத்துக்கு நல்ல தண்ணீர் கிணறு கிடையாது.”
“நல்ல யோசனைதான். என்னால் முடியும் என நீ நினைக்கிறாயா?”
“உன்னால் முடியும் தம்பி. தற்கொலை முடிவை மாற்றி துணிந்து செயல்படு. வெற்றி நிச்சயம். உன் மாவீரனான உன் அப்பன் பெயரை கெடுத்து விடாதே”
இளைஞனின் மனம் மாறியது. சிந்தித்தான். கயிற்றை சுழற்றி தூர எறிந்தான். மரத்தடியில் உள்ள மாவீர வைரவவருக்கு ஒரு கும்பிடு போட்டான். திடமான மனதுடன் தன் புதுப்பயணத்தை ஆரம்பித்தான். மரத்தில் இருந்த குயில்கள் கூவி அவனை வாழ்த்தின. ஆலமரத்தின் இலைகள் காற்றில் அவன்மேல் சொறிந்தன…தென்றல் காற்று அவனுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுத்தது…. அவன் ஒரு புதுமனிதனானான்.
****
( யாவும் புனைவு )
– பொன் குலேந்திரன்- கனடா –