செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் தமிழ் உதயாவின் கவிதைகள் | எனது பார்வையில்.. | முல்லை அமுதன்

தமிழ் உதயாவின் கவிதைகள் | எனது பார்வையில்.. | முல்லை அமுதன்

7 minutes read

வாழ்வியலில் தான் கற்றுக்கொண்டவைகளை எதுவித சேதாரமுமற்று வாசகர்களுக்குச் சொல்லிவிட முனையும் தொடரோட்டத்தில் நமது பெண் படைப்பாளர்கள் லாவகமாக தாம் கற்றுக்கொண்ட மொழியில் சொல்லி விடும் சாதூர்யமும் நிறைந்தவர்களாகவே காணப்படுகிறார்கள்.

தாம் அனுபவித்த வலிகள், குதூகலங்கள், இழப்புக்கள், சறுக்கல்கள், தோல்விகள், காதல், திருமணம் இப்படிப் பலவற்றை தம் படைப்புக்கள் ஊடாக  தந்துவிடுவதை நாம் உணர்ந்து வாசித்து,அவற்றுடன்  ஒத்திசைந்து வயப்பட்டு அல்லது ஈர்த்துப்போய்விடும் நிலையில் படைப்பாளர்களுக்கும், வாசகர்களுக்குமான நெருக்கம் அதிகமாக படைப்பாளர்கள் போலவே வாசகர்களும் படைப்புக்களுடன் வாழ்ந்துகொள்கிற சூழலும் அமைய அப்படைப்புகளைத் தேடும் ஆவலை நமக்கு ஏற்படுத்திவிடுகிறது.

அவை கவிதையாக, சிறுகதையாக, நாவலாக இருந்துவிட்டுப் போகலாம். அவற்றை உள்வாங்கி நுகர்கிற சாத்தியத்தை ஏற்படுத்தியும்விடுகிறது.

இங்கு தமிழ் உதயாவின் படைப்புக்களும் அப்படியே நம்முள் ஒன்றிப்போகிற  உணர்வை ஏற்படுத்திடுகிறது.

கவிதை மூலமே நமக்கெல்லாம் அறிமுகமான தமிழ் உதயா ஈழத்தின் வடபுல மல்லாவிக் கிராமத்தில் பிறந்தவர். தன் கல்வியை மல்லாவி மத்தியகல்லூரியிலும், யாழ் இந்து மகளீர் கல்லூரியிலும் கற்றார். அவரின் வாழ்வியற் சூழல் கிராமங்கள் ஊடாகவே நகர்ந்தன. எனினும் பலருடனும் பழகும் வாய்ப்புக்கள் அதிகம் பெறக்கூடிய ஆசிரியத் தொழிலில் ஈடுபட்டு பல இடங்களிலும் கற்பிக்கும் பொழுது இன்னும் வாசிக்கும் ஆற்றலை, எழுதும் பழக்கத்தை தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள முடிந்ததால் பலருக்கும் தெரிந்த நல்லதொரு படைப்பாளியாய் நமக்குத் தெரிந்தார்.

அனைத்து  ஊடகங்களினதும்  வாசிக்கும்  பரிச்சயம்  ஏற்பட  தனது  படைப்புக்களைத்  தருகின்ற ஊடகங்களிலும்  தெரிந்தார்.

பல வருடங்களாக எழுதி வந்திருக்கின்றார். எனினும் தற்போது தான் இன்னும் பலருக்கு அறியும் வாய்ப்புக் கிடைத்திருகிறது.

ஆதிக்கிழவனின் காதக்,போதி மரங்களில் இரத்தப்பூக்கள், அத்லாண்டிக் மகாசமுத்திரத்தில் கரையொதுங்கும் துறவாடைகள்,  பீனோக்கிப் பாயும் நதியில் உருளும் கூழாங்கற்கள், உப்புச்சாடிக்குள் உறையும் துயரக்கடல் என நமக்குத் நூல்களைத் தந்தபோது  இன்னும் ஒரு படிமேலே போய் தன் வாசகத் தளத்தை விரிவுபடுத்தியுள்ளார் என்றே சொல்லமுடியும்.

மனதில் கருக்கொள்ளும் ஒவ்வொரு கருப்பொருளையும் தனக்குள்ளேயே வடிவமைத்து சொற்சேர்க்கைகளாய்  தாளீல் தந்துவிட அவை அற்புதக்கவிதைகளாய் அமைந்துவிடுவது சாதாரண நிகழ்வுமல்ல.

எழுத்து ஒரு தவம் என்றே அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள். இத்தனை கவிதைகளை அழகுற எழுகின்ற ஆற்றலை பல பெண் எழுத்தாளர்கள் பெற்றிருக்கிறார்கள் என்பது அதிசயம் தான்.

வெறுமனே சின்னத்திரைகளிலும், குடும்பச்சூழலிலும், வேறும் அகப்புறச்சூழலிம் அழுந்திப்போய் நிற்கின்ற பெண்களின் மத்தியில் வித்தியாசமாய் கலை இலக்கியச் செயல்பாடுகளில் தங்களை ஈடுபடுத்தி நிற்கும் பெண்களின் வரிசையில் தமிழ் உதயாவும் ஒருவராகிறார்.

கவிதைகள் எழுதினாலும் அதனை நூலாக்குகின்றவர்கள் ஒரு சிலரே. தமிழ் உதயாவும் தனது நூல்களைத் தந்ததுமாத்திரமல்ல எதிர்கால தன் கவி முயற்சிகளுக்கு ஆத்மார்த்தமான விமர்சனக்களை எதிர்பாத்து நிற்பதும் இன்னும் ஆழமாக கால் ஊன்றிக்கொள்வார் என்கிற நம்பிக்கையையும் விதைத்துச் செல்கிறார்.

குறுகியகாலத்திற்குள் நூல்களைத் தந்து நம்மை ஆச்சர்யப்படுத்தியுமுள்ளார்.

ஆதிக்கிழவனின் காதல்

உப்புச்சாடிக்குள் உறையும் துயரக்கடல்

அத்லாண்டிக் மகாசமுத்திரத்தில் கரையொதுங்கும் துறவாடைகள்

போதி மரங்களில் இரத்தப்பூக்கள்

பின்னோக்கிப் பாயும் நதியில் உருளும் கூழாங்கற்கள்

எனக்குப் பறவைநிழல்

நீரோவின் இசைக்குறிப்புக்கள்

ஆண் நிறவெயில்

அகாலத்தின் நித்தியக் கடல்

பாஷோவின் அறையில்

BLEEDING BLOSSOMS ON BODHI TREES

இத்தனை நுல்களா?

பிரமிப்புக்கள் இன்னும் அடங்கவேயில்லை.

கவிதை நூல்களுக்கான தலைப்பே நூலை வாசிக்கத் தூண்டிவிடுகிறது.

இவரின் கவிதைகள் பிறமொழிகளிலும் மொழிமாற்றம் செய்து பலரும் அறியவும், நமது வலிகள் பிற இன வாசகர்களும் பெறவேண்டும் என்கிற ஆவல் நமக்கும் இருக்கிறது. இப்போது ஆங்கிலத்தில் வருவது பெருமிதமாக இருக்கிறது.

தினக்குரல், காற்றுவெளி, கணையாழி, புதுப்புனல், காணிநிலம், இனிய உதயம், பேசும் புதிய சக்தி, காக்கைச் சிறச்கினிலே, தளம், கீற்று (இணையம்), மலைகள் (இணையம்)  , வல்லினம்,   ஈழநாதம், முரசொலி,  பரணி,  தினமுரசு, வீரகேசரி, , நான்காவது கோணம், அருவி, எம்பெருமான்,  சிற்றிதழ்கள் உலகம்,  தினகரன்,  தினமணி, வளரி  என  பல  ஊடகங்களிலும்  எழுதிவரும்  தமிழ் உதயா  இன்றைய  பெண்  எழுத்தாளர்களில்  கவனம்  பெற்றவராகவும்  தெரிகிறார்.

வாசகனுடன் பயணிக்கும் இவரது கவிதைகள் நெருங்கிய தோழமையைப்  பேணும் பண்பை சேதாரமில்லாமல், சத்தமிடாமல் உள்வாங்கிவிடுகிறது. சில கவிதைகள் ஆழமான நேசிப்பை எதிர்பார்க்கும் வேளையில் முகத்தில் அறைந்து கேள்விகளைத் தொடுக்கவும் செய்கின்றன. நிராகரித்துவிடமுடியாதபடி கவிதைகள் நம்மீதான கரிசனை கொண்டதாகவும் அமைந்துவிடுவதால் இன்னும் அவரின் கவிதைகள் மீதான பார்வை அல்லது பரிச்சயம் மேலோங்கவே செய்தது.

 

‘துளிர்க்கும்

சந்தனநடுகற்களிடை

செங்காந்தள்

மணக்கும்

என் தேசத்திற்கு 

இது ஏகாந்த மாதம்’

 

‘வழியறியாது 

திகைத்து வீழ்வதில்லை

எந்தப் பறவையும்

எனக்கு பறவை நிழல்’

 

கவிதைகளை இலகுவில் எழுவிடமுடிவதென்றால் அதற்குள் ஒரு சமூக அக்கறை இருக்குமென்று எதிர்பார்க்கமுடியாது. ஒரு தேசாந்திரி அல்லது நாடோடியிடமிருந்தும் நல்ல கவிதை பிறக்கலாம். சமூக அவலங்களுக்கிடையே வாழ்ந்து துன்பப்பட்டு, தானும் அல்லலுற்று, அதிலிருந்து பிறக்கின்ற எந்தக் கவிதையும் வலியை, அதன் வடுக்களைப் பேசாமல் மரித்துவிடாது வாழும். தமிழ் உதயாவின் கவிதைகளும் வாழும் கவிதைகளைத் தந்திருகிறார்.

ஒருவனால் தன் நோவுகளைச் சொல்ல முடியாது போனால் தன் இனத்தின் வரலாறுகள் வேறொருவனால் பிழையாகவும் எழுத்தப்பட்டுவிடலாம். ஆகவே ஒவ்வொரு படைப்பாளியும் நேர்மையுடனும், இதயசுத்தியுடனும் தன் படைப்புக்களைக் கொண்டுவருவராயின் வரலாறு திசை திரும்பிவிடாது. வரலாறு பேசும். தமிழ் உதயாவிற்கு நன்றி சொல்லத்தான் வேண்டும். ஒரு நேரடிசாட்சியாய் நிற்கிற கவிதைகளைத் தந்தமைக்காக பாராட்டவும் வேண்டும்.

தமிழ் உதயாவின் கவிதைகளுக்கு அவரின் கல்வி, பணிபுரிந்த நிறுவனம், அந்த நிறுவனம் அமைந்துள்ள மாவட்டம் மேலும் அனுபவங்களைச் சேகரிக்கும் இடமாகவும் ஆகியிருந்தமை சிறப்பைக் கொடுக்கிறது.

 

‘ஆதித்தாயின் தேகம்

சொட்டிய மழை

எப்போதும் என்

கோப்பையில் நுரைக்கும் திமிர்’

 

எந்தக் கவிதையையும் நிராகரித்து விடாதபடி உணர்ந்து வாசிக்கும் நிலைக்கு ஒவ்வொரு வாசகனையும் உட்கார வைத்துள்ளார்.

 

‘ஒற்றை அறையின் வாசல் விளிம்பில் 

நொடிக்குவளையில் ஒரு செடி வளர்க்கிறேன்,

பச்சை கனிந்து கிடக்கிறது,

கடைசிக் கனிகளை

பரிமாறிக் கொண்டிருக்கும் சில மனிதர்கள் போல,

சிலுவையில் அறைந்து

சாத்திவிட்டே வருகிறார்கள் பூட்டப்படாத கதவை,

என் கவிதை எங்கும் இரத்தம் வடிகிறது,

காலச்சிறகுரித்து விருந்துக்கறி சமைக்கிறான் வனவேடன்,

முனகும் வேர்களின் நறுமணம் நாசி நிறைக்கிறது,

பிளவு நாவுகள் மேய்வதற்கு 

படம் விரித்து ஆடுகிறது மகிழம்பூ, 

கடல் பூத்த பிச்சிகள் 

நதியின் உயிர் வைரங்கள் என்கிறேன்,

கனத்த இறந்த காலத்தை புதைக்க முடியவில்லை இன்னும்

உயிருடன் சிரிக்கிறது நிகழ்காலம்,

இறுதியில் யாருக்கும் வாய்ப்பதில்லை 

அனிச்சம் பூவின்

ஒரே ஒரு பருவத்தின் 

உதிர்க்கும் ஊமை ஓசை.’

 

*

‘காடுறையும் ஒரு வேர் 

நுனியில் அமர்கிறேன்

கவிதைகளால் சிலைத்தவளுக்கு 

கண்களை உயிர்த்துவார்த்த 

உங்கள் தீட்டிய உளியின் 

கண்கள் கூர்மையானவை

அவை வேர்களின் 

உணர்ச்சி பாய்ச்சியவை

மலரல்ல

மலர்த்தும் வேர் 

இருங்கள் இல்லையேல் 

இப்பொழுதே ஒரு மலராக வெளியேறுங்கள்’

 

தன் கவிதைகளால் வாசகர்களைக் கட்டிப்போடவும், ஆட்கொள்ளவும், ஆற்றுப்படுத்தவும் முடிந்திருக்கிறது. ஆற்றுப்படுத்தலிலும் தன்னையும் சேர்த்துக் கொள்கிறார். தன் தனிமையின்  அழுகை மற்றவர்களுக்குத் தெரிந்துவிடாகூடாது என்பதிலும் கவனம் இருக்கவேண்டும். ஆனாலும் கவிதைகளால் அழுகை மற்றவர்களுக்கும் தொற்றிவிடவைக்கிற லாவகம்  அவரின்  கவிதைக்களுக்குள்ளும் இருக்கிறது. அதன் சூட்சுமம்புரிந்தவர்கள் ஒரு இனத்தின் வரலாற்றையும், அந்த இனத்தின்  மீது காலாகாலமாய் நடத்தப்பட்ட சங்காரங்களையும், அங்கு கனவுகளுடன் மடிந்து போன மானுடத்தின் மிச்சமாய் நிற்கின்ற ஒரு படைப்பாளியின் உரத்துச் சொல்லுகின்ற வரலாற்றுச் சாட்சியமாய் இவர் கவிதைகளும் இருக்கும்.

 

“ஷெல் துண்டில் 

அரிந்த முலையில்

பால் அருந்தி

அடுத்த குண்டுக்கு 

இரையானது பச்சை மண் 

சாவுக்கு பால் வார்த்த 

புத்தன் எப்போதோ 

புதைந்து போனான்”

 

நிறைய வாசிக்கிறார்.நிறைய சிந்திக்கிறார். நீர்த்துப்போகாத சொற்களைக்கொண்டே சிற்பங்களாக்கிவிடுகிறார்.

 

“பூவிரிதல் கணமொன்றை

கொறித்த படியே இருக்கிறது 

கூசும் இரவின் கனவு நீட்சிகள்

மேற்குத் தூளியில் கரைந்து 

ஆடிக் கொண்டிருக்கிறாள் 

மறு உலக இளம்பிறை”

 

தமிழ் உதயா நிறையவே தான் அல்லது தன்னைப் பாதித்தவற்றை அழகாக கட்டமைக்கப் பெற்ற கவிதைகளாக்கி இருக்கிறார்.

 

“இரவிரவாய் படர்ந்த 

குடல் கருகிய

வெம்மையைக் கரைத்த 

மழலைச் சொல் உருகி

மடி சாய நந்திக்கடலை 

சூல்ப்பையாக்கி

தாய்மையாய்

மார்பு நனைகிறது 

என் நிலம் இப்போதும்.”

 

பிறரின் வலிகளைக் கண்டு தன்னுள் அழுபவனிடமிருந்து புறப்படும் வார்த்தைகள் தாக்கமாகவே வெளிவரும். இங்கு ஒரு இனத்தின் நீண்ட நெடு யுத்தம் தந்த வடுக்கள் கொண்ட ஒரு சமூகப் பிரதிநிதியிடமிருந்து நல்ல எழுத்தை நமக்குத் தந்திருக்கிறது. யுத்தம் முடிவிற்கு வந்திருந்தது என்று யாரும் பேசிக்கொள்ளலாம். ஆனால் காலம் காலமாய் தொடரும் வலிகள்… இலகுவில் மறந்துவிடமுடியாது.மேலும், இனத்தின் யுக அழுகை அடுத்த தலைமுறைக்கும் அதன் வரலாறு இம்மியும் பிசகாமல் சொல்லிக்கொடுக்கவேண்டும் என்கிற பணியும் நம்மிடம் தரப்படுள்ளது.

அந்த ரணகளச் சுவடுகளிலிருந்து எழும் எழுத்துக்கள் நிறையப் பேசும். அதற்குள் உயிர் இருக்கும் என்கிற நம்பிக்கை கொண்டவன் நான். ஆதலினால் தான் தமிழ் உதயாவின் கவிதைகள் என்னை ஆகர்சித்தன என்பேன். என் கதையைச் சொல்ல்வது போல உணர்ந்தேன். எந்த ஒரு விரசங்களுமின்றி வார்த்தைகளைக் கோர்த்து கவிதையாக்கியிருக்கிறார்.

ஒரு அனுபவம் மிக்க கவிஞரைப்போன்று இவரிடமிருந்து கிடைக்கும் கவிதைகள் நல்ல அழகியலையும் கற்றுத்தருகிறது.

கவிஞனுக்கு சமூக அக்கறை வேண்டும் என்பர். சமூகத்துடன் ஒன்றிப்போய்,தான் பட்ட இன்னல்களை ,பதுங்குகுழி வாழ்க்கை, இடப்பெயர்வு,காணாமல் போக்கடிக்கப்பட்ட உறவுகள்,வீ ரச் சாவைத் தழுவிக்கொண்ட தோழர்கள், கண் முன்னே ஷெல் விழுந்து துடித்திறக்கும் குழந்தைகள், சரணடைந்தவர்களையே துவம்சம் செய்யும் இராணுவத்தினர், இதையெல்லாம் வேடிக்கை பார்க்கும் உலகத்தினர்.. அளவும் காட்டிக்கொடுக்கும் மனநிலையிலுள்ளோர்னர்..

இப்படி எத்தனையோ வலிகளுக்குள்ளும் வாழ்ந்து கொண்டு அனாதையாகி,, அகதியாகி… உறவுகள் ஓரிடம்… கணவர், குழந்தைகள் ஓரிடம்… தான் வாழ்கிற சூழலில் தன்னை தக்கவைத்துக் கொள்ள போராடுகிற மானுட வாழ்வு எழுத்தில் சொல்லி விடமுடியாது. ஆனாலும் அவற்றை கவிதைகளாக்கி நமக்குத் தருகையிலும், அவற்றை நாம் வாசிக்கும்போது நமக்குள் ஏற்படுகின்ற வாரத்தைகளில் சொல்லமுடியாத கண்ணீரும், நோவுகளும்… அசைக்க முடியாமல் சொல்லி விடலாம்.

வாழ்வின் வலிகளை சிறிதும் பிசகாமல் தரும் கவிஞருள் தமிழ் உதயாவும் ஒருவராகி விடுகிறார்.

 

‘நீக்குவதற்கும் நீங்குவதற்கும் 

நெடு நேரமாகாது

நொடி ஏன் முள்ளாலானது

*

உறைதலும்

ஆழ்தலும் அன்றி

நீங்குதல் வேறில்லை

*

இங்கே தெரிபவர்கள் தான் 

அங்கேயும் தெரிகிறார்கள் 

சூரியனும் சந்திரனும் மனிதனுக்குள் அப்படித்தானே’

 

கவிதைகளில் மரபுக் கவிதை, புதுக்கவிதை என்பதற்கப்பால் நவீனத்துவம்,பின் நவீனத்துவம் என படைப்புக்களை கனதியாக்கும் காலகட்டத்தில் துளிப்பாக்கள், தன்முனைக்கவிதைகள், குறும்பாக்கள் எனவெல்லாம் எழுதிவரும் சூழலில் இலகுவாக வாசகனை சென்றடைந்து அவனை ஆக்கிமிக்கும் வகையில் எழுதும் கவிதைகளையே நாம் பழக்கப்படுத்திக் கொண்டோம். எனவே எந்தச் சிக்கலுமின்றி எம்மை ஆகர்சித்த கவிதைகளையே தமிழ் உதயாவிடமிருந்து தமிழ் உலகம் எதிர்பார்த்து நிற்கிறது.

 

‘விலக விலக 

நெருங்குகிறது அலை 

என்னிடமிருந்தும் 

உன்னிடமிருந்தும்’

 

ஒரு வாழ்வியல் தத்துவம். மீள நமக்குள் சொல்லிப்பார்க்கிற வார்த்தைகள். என்னை உசுப்பி விட்டதும் இங்கே தான்.

தமிழ் உதயாவின்  நூல்களணைத்தும்  சிறப்பாக அதிக  கரிசனை  கொண்டு  தயாரிக்கப்பட்டிருப்பதாய் உணர்கிறோம். ஒவ்வொரு நூலுக்குமான அட்டை ஒவிய வடிவமைப்பு பிரமிக்க வைக்கிறது. அதை விட முகநூலில் அவ்வப்போது  பதிவிடப்படுகிற கவிதைகளும் அனுபவித்து எழுதப்பட்டவைக்கப்பால் நம்மையும் மீளவும் வாசிக்க உந்துகிறது. எதனை விட.. எதைத் தொட என விக்கித்து நிற்கிற வாசகனைப்போல நானும் வாசிக்கிறேன்..

வாசகர்கள் மனங்கோணாமல் படைப்புக்கள் இருக்க வேண்டும் தான். ஆனால் தன் படைப்பின் பக்கம் நின்றே பார்க்கிற வாசகனை ஏற்கிற மனப்பக்குவமும் படைப்பாளர்க்குத் தேவைப்படுகிறது. நிறைய வாசிக்கும் தமிழ் உதயாவின் எழுத்து பண்படுத்தப்பட்டு  எழுதப்பட்டுகிறது எனலாம்.

நடைமுறை  அவலங்களுடன்  வாழ்ந்தாலும்,அதற்குள்ளும் வரலாற்றை தெளிவுற வைக்கின்ற படிப்பினைகளைக் கற்றுக்கொண்ட  அறிவையும் பெற்றுக்கொண்டு அவற்றை வடிவமைக்கிற தன் எழுத்தை வடிவமைக்கிற கவிஞர் இன்னும் வருங்கால சந்ததிக்கு எமது வரலாற்றைச் சொல்லும் எண்ணங்களையும் படைப்புக்குள் தர முனைகின்ற செயல்பாட்டினையும் தந்துவிடுகின்ற தமிழ் உதயா நம்பிக்கை தருகின்ற பல பெண் படைப்பாளர்களுள் ஒருவராகவே தெரிகிறார்.

 

வாழ்த்துக்கள்.

புத்தாண்ண்டில் புதிதாய் வரட்டுமே.

புலம்பெயர் சூழலுக்குள் வாழப்பழகிக்கொண்டாலும், தனது எழுத்து மண்மணம் சார்ந்தே தொடர்ந்து எழுதுவாராகில் இன்னும் இன்னும் எதிர்பார்ப்போடு இவரின் நூல்கள் பேசப்படும் காலத்துள் நிற்கும் என்பது திண்ணம்.

வாழ்த்துவோம்.

 

நம்பிக்கையுடன்,

முல்லைஅமுதன்

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More