காலமகள் மணலெடுத்து
கோலமிட்ட கடற்புறத்தில்
ஏழை மகள் ஒருத்தி.
முன்னே கடல் விரியும்
முது கடலின் பின்னாடி
விண்ணோ தொடரும்
விண்ணுக்கும் அப்பாலே
விழி தொடர நிற்கின்றாள்.
தாழை மர வேலி,
தள்ளி ஒரு சிறு குடிசை;
சிறுகுடிசைக்குள்ளே
தூங்கும் சிறு குழந்தை
ஆழக் கடலில்
ஆடுகின்ற தோணியிலே
தாழம்பூ வாசம்
தரைக்காற்று சுமந்துவரும்.
காற்று பெருங்காற்று
காற்றோடு கும்மிருட்டு
கும்மிருட்டே குலைநடுங்கி
கோசமிட்ட கடல் பெருக்கு
கல்லுவைத்த கோவிலெல்லாம்
கைகூப்பி வரம் இரந்த
அந்த இரவு
அதற்குள் மறக்காது
திரைகடலை வென்றுவந்தும்
திரவியங்கள் கொண்டுவந்தும்
இந்தச் சிறுகுடிசை,
இரண்டு பிடி சோறு,
தோணி உடையான்
தரும்பிச்சை என்கின்ற
கோணல் நினைப்பு:
பெருமூச்சு.
தானாய் விடி வெள்ளி
தோன்றுகின்ற சங்கதிகள்
வானத்தில் மட்டும்தான்,
வாழ்வில் இருள் தொடரும்.