செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் நிலவை விழுங்கிய இரவு | அஜி அஜந்தன்

நிலவை விழுங்கிய இரவு | அஜி அஜந்தன்

0 minutes read

 

இடைவிடாது
இயங்கும்
இருதயங்களை
இளைப்பாற்றும்
இரவுகளின்
இரகசியங்களை
அறிந்ததுண்டா ?

வெண்மேக வானம்
வெண்ணிலவு
கண் சிமிட்டும்
எண்ணற்ற விண்மீன்கள்
விண் பறக்கும்
மின்மினிகள் சூழ்ந்த
இரவொன்றின்
இங்கிதங்களை
இரசித்ததுண்டா ?

ஒழுகும் கருமை
இரவுகளை ஒளியேற்ற
சொரியும் கண்ணீரை
உருகி ஊத்தும்
மெழுகுவர்த்தியும்
திரியின் தூண்டுதலில்
எரியும் நெருப்பால்
கரும்புகை அப்பிய
அரிக்கன் லாம்பும்

இரவின் எதிரிகளா
அல்லது
இரவிற்கு இவை
எதிரிகள் தானா ?

இறந்த காலமொன்றின்
பிறப்பும்
நிகழ்காலத்தின்
இறப்பும் இரவு தானே
இரவின் கதகதப்பே – பல
இதயங்களின் விருப்பு
விழி இழந்தவனுக்கு
இருள் மீது தான் வெறுப்பு

இந்த இரவு தான்
மலட்டுக் கருப்பையிலும்
மழலையை உருவாகிறது
இரப்பை நிரப்ப
எங்கோ ஒருத்தியின்
உடுக்கை அவிழ்கிறது

தெருநாயொன்றை
அடைக்கலம் தேடி
அலைய வைக்கிறது
மொட்டுடைத்து விரியும்
பூவின் புன்னகைக்கு
இடம் கொடுக்கிறது – இந்த
மாய இருள் தானே
மனிதக் காயங்களையும்
மலர்த்தி விடுகின்றது

அகோரங்களை
அள்ளித்தெளிக்கும்
அடர் இருளின் மீது
ஆத்திரங்கொள்வதா
இரவுகளை இரையாக்கி
இதமாய்ப் புணரும்
பகல்களின் மீது
பழிச்சொல் வீசுவதா ?

இல்லை
இப்படியே
இருந்துவிடக் கூடாதா
என்று இரவுகள் மீது
இரக்கம் காட்டவா ?

இரவே நீ இதமா
இல்லை இடரா
என்றறியாமலே
உறங்கும் இரவுகளோடு
விழித்துக்கொள்கின்றன
என் கனவுக் குழந்தைகள்

சுகந்தங்களையும்
சூட்சமங்களையும்
இழுத்துப் போர்த்தி
நிசப்தம் சுமக்கும்
இரவின் மௌனங்களை
யாராகினும்
மொழியெயர்ப்பின்
கூறுங்களேன் ?

அஜி அஜந்தன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More