Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் நார்த்திசுக் கட்டி என்பது என்ன?

நார்த்திசுக் கட்டி என்பது என்ன?

4 minutes read

பெண்களுக்கு அடி வயிற்றில் மூன்று இடங்களில் கட்டிகள் தோன்றலாம். 1. கருப்பை 2. கருப்பை வாய் 3. சினைப்பை. இவற்றில் கருப்பையில் ஏற்படும் ஃபைப்ராய்டு (Fibroid அல்லது Fibromyoma) எனப்படும் ‘நார்த்திசுக் கட்டி’ பெண்களுக்கு முக்கியமானது. கருப்பையின் உட்புறத் தசைகளில் உருவாகும் ஒருவகை கட்டி இது. இயற்கையாகவே பல பெண்களிடம் இது காணப்படுவதுண்டு.

சாதாரண கட்டிதான் இது; புற்றுநோயைச் சேர்ந்தது இல்லை. எனவே, இதற்குப் பயப்படத் தேவையில்லை. இத்தகைய கட்டிகள் இருக்கும்போது ஒரு பெண் கர்ப்பம் தரிப்பது என்பது சற்று சவாலுக்குரியதுதான். என்றாலும், இன்றைய நவீன தொழில்நுட்ப வசதிகளால், கருப்பையில் கட்டி உள்ள பெண்களும் கர்ப்பம் தரித்து, கர்ப்பகாலத்தில் எவ்விதத் தொல்லையும் ஏற்படாமல், சுகப்பிரசவம் ஆவது சாத்தியமாகியுள்ளது.

முன்பெல்லாம் ஒருவர் அல்லது இருவருக்கு இந்தக் கட்டி தோன்றியது. இப்போதைய உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்களால் அதிகம் பேருக்கு இந்தக் கட்டி தோன்றுகிறது. அதிலும் ‘அல்ட்ரா சவுண்ட்’ எனும் பரிசோதனைக் கருவியின் கண்டுபிடிப்புக்குப் பின், இந்தக் கட்டி உள்ளதை உடனடியாகப் பார்க்க முடிவதால், இதன் தோற்றத்தையும் வளர்ச்சியையும் தெளிவாகக் கவனித்து சிகிச்சை கொடுக்க முடிகிறது.

மேலும் இந்தப் பிரச்னை கால் நூற்றாண்டுக்கு முன்புவரை 50 வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்குத்தான் ஏற்பட்டது. ஆனால். தற்போது இளம் வயதிலேயே இக்கட்டி தோன்றுவது வழக்கமாகி வருகிறது. முக்கியமாக, உடற்பருமன் உள்ள பெண்களுக்கு இது வரும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம். பரம்பரையாகவும் இது வரக்கூடும்.

பெரும்பாலான சமயங்களில் இந்தக் கட்டி இருப்பது வெளியில் தெரியாது. எந்தவித அறிகுறியும் காண்பிக்காமல் ‘அமைதியாக’ இருக்கும். தற்செயலாக வேறு காரணங்களுக்காக வயிற்றை ஸ்கேன் செய்யும்போது பலருக்கும் இது இருப்பது தெரியவரும். இது பெரும்பாலும் ஓர் ஆப்பிள் விதை அளவுக்குத்தான் இருக்கும். சிலருக்கு மட்டும் ஒரு திராட்சைப் பழம் அளவுக்கு இது வளரலாம். ஒருவருக்கு மூன்று கட்டிகள்வரை தோன்றலாம்.

இவை மெதுவாக வளரும் தன்மையுள்ளவை. மாதவிடாய்க்குப் பிறகு கரு உற்பத்தி ஹார்மோன்களின் அளவுகள் குறைந்ததும் தானாகவே இவை சுருங்கிவிடும். கட்டிகளை அகற்றும் அறுவை சிகிச்சை, கருப்பையை அகற்றும் சிகிச்சை போன்றவற்றை வேறு வழியே இல்லாதபோதுதான் மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள்.

கட்டியின் வகைகள்

நார்த்திசுக் கட்டி கருப்பையில் நான்கு இடங்களில் தோன்றுவது வழக்கம்.

  1. கருப்பையின் உட்சவ்வை ஒட்டி வளர்வது ஒரு வகை(Submucous fibroid).
  2. கருப்பைத் தசைகளுக்கு இடையில் வளர்வது மற்றொரு வகை(Intramural fibroid).
  3. கருப்பையின் வெளிச்சுவரை ஒட்டி வளர்வது மூன்றாம் வகை(Sub serous fibroid).
  4. கருப்பை வாய்ப்பகுதியில் தோன்றும் கட்டிகள் கடைசி வகை (Cervical fibroid).

என்ன அறிகுறிகள்?

அடிவயிற்றில் வலி ஏற்படும். அடிவயிற்றைத் தொட்டாலே சிலருக்கு வலி ஏற்படுவதுண்டு. அடி வயிறு சிறிது பெரிதாகவும் தெரியலாம். லேசாக காய்ச்சல், வாந்தி, முதுகுவலி, அடிக்கடி சிறுநீர் கழிதல் அல்லது சிறுநீர் அடைத்துக்கொள்ளுதல், மலச்சிக்கல் போன்ற தொல்லைகள் ஏற்படும்.

சிலருக்கு அதிகப்படியான ரத்தப்போக்கை உண்டாக்கும். பெரும்பாலும் கட்டியின் அளவுக்கும் அறிகுறிகளுக்கும் தொடர்பு இருக்காது. சிறிய கட்டிகள்கூட அதிக ரத்தப்போக்கையும் அடிவயிற்று வலியையும் ஏற்படுத்தலாம். மாறாக, பெரிய கட்டிதான் என்றாலும் எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கவும் வாய்ப்புண்டு.

எப்படி கண்டுபிடிப்பது?
அறிகுறிகளை வைத்து கட்டி இருப்பதாகச் சந்தேகப்படலாம். அப்போது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். அடுத்து மகப்பேறு மருத்துவர் அடிவயிற்றைத் தொட்டுப் பரிசோதிக்கும்போது, வயிறு பெரிதாக இருப்பதாக உணர்ந்தால் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனையை மேற்கொள்ளச் சொல்வார். அதில் ‘நார்த்திசுக் கட்டி’ இருப்பது தெரியும்.

கட்டி எந்த இடத்தில் உள்ளது, அளவு என்ன, எத்தனை கட்டிகள், கர்ப்பத்துக்குத் தொந்தரவாக இருக்குமா என பல தகவல்களை அதில் தெரிந்துகொள்ள முடியும். அதற்கேற்ப தேவையான சிகிச்சை முறைகளைத் தேர்வு செய்துகொள்ள முடியும்.

என்ன சிகிச்சை?
பாதிக்கப்பட்ட பெண்ணின் வயது, திருமணம் ஆகிவிட்டதா, குழந்தைப் பேறு உள்ளதா என்பதைப் பொறுத்தும் கருப்பையில் கட்டி உள்ள இடம் மற்றும் அளவைப் பொறுத்தும் சிகிச்சை அமையும். சிறிய கட்டியாக இருந்து அதிக ரத்தப்போக்கையும் அடிவயிற்று வலியையும் ஏற்படுத்துகிறது என்றால், முதலில் மருந்து சிகிச்சை பரிந்துரை செய்யப்படும். இதில் பிரச்னை தீரவில்லை என்றால் அறுவை சிகிச்சை தேவைப்படும்.

பெண்ணுக்கு 30 வயதுதான் ஆகிறது. ஒரு குழந்தைதான் உள்ளது. அடுத்து ஒரு குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணம் இருக்கிறது என்றால், கருப்பைத் தசைகளுக்கு இடையில் கட்டி பெரிதாக இருந்தால் மயோமெக்டமி(Myomectomy) எனும் அறுவை சிகிச்சையில் கட்டியை மட்டும் அகற்றிவிடுவார்கள்.

இப்போது லேப்ராஸ்கோப்பி முறையில் சிறிய துளைகள் போட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதால், அதிக ரத்தம் இழப்பு இருக்காது; வலியும் குறைவாகவே இருக்கும்.

பெரிய தழும்பும் இருக்காது. சீக்கிரத்தில் இயல்பான வாழ்க்கை முறைகளுக்குத் திரும்பிவிடலாம். பெண்ணுக்கு 45 வயது ஆகிவிட்டது. குழந்தைப்பேறு இனி அவசியமில்லை எனும்போது கருப்பை கட்டியை மட்டும் அகற்றுவதா, கருப்பையையும் சேர்த்து அகற்றுவதா என்று அவரிடம் கேட்டுக் கொள்ளலாம்.

ஆனாலும் 45 வயதுக்கு மேல் கருப்பையை அகற்றிவிடுவது நல்லது. கருப்பையின் உட்சவ்வை ஒட்டி வளரும் கட்டிகளை ஹிஸ்ட்ராஸ்கோப்பிக் மயோமெக்டமி (Hysteroscopic Myomectomy) எனும் சிகிச்சையில் அகற்றிவிடலாம். கருப்பையின் உள்ளே வளரும் கட்டிகளையும் இந்த முறையில் அகற்றலாம்.

வாய் வழியாக குழாயை நுழைத்து இரைப்பையைப் பரிசோதிக்கப் பயன்படும் எண்டோஸ்கோப்பி மாதிரிதான் இதுவும். கருப்பையின் வாய் வழியாகக் குழாயை நுழைத்து கருப்பையில் உள்ள கட்டியை அகற்றுவது இதன் செயல்முறை. ஹிஸ்ட்ராஸ்கோப்பிக் ரிசக்சன்(Hysteroscopic resection) என்று இதற்குப் பெயர்.

குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு நார்த்திசுக் கட்டி இருந்தாலும், அறிகுறிகள் இல்லை என்றால் எந்த சிகிச்சையும் தேவையில்லை. 5 செ.மீ. அளவுக்கு கட்டி இருந்தாலும் 47 வயதைக் கடந்துவிட்டது என்றால் அப்போதும் சிகிச்சை தேவையில்லை. மாதவிலக்குக்குப் பிறகு கட்டி சுருங்கி விடும்.

அச்சம் தவிர்!
நார்த்திசுக் கட்டியை நினைத்துப் பயப்படத் தேவையில்லை. இது புற்றுக்கட்டியாக மாறுவதற்கு 1 சதவீதம்தான் வாய்ப்பு உள்ளது. கருப்பைக்கு இருபுறமும் உள்ள சினைப்பைகளில்தான் சினை முட்டைகளும் பெண்ணுக்கான ஹார்மோன்களும் சுரக்கின்றன.

ஆகவே 30-லிருந்து 38 வயது வரை உள்ள பெண்களுக்குக் கருப்பையை மட்டும் அகற்றும்போது அந்தப் பெண்ணுக்கு இயற்கையாக மாதவிலக்கு நிற்கும்வரை தேவையான பாலின ஹார்மோன்கள் சுரந்துகொண்டுதான் இருக்கும். ஆகவே, கருப்பையை அகற்றிய பிறகு தாம்பத்திய உறவில் சிக்கல் வருமோ என்று பயப்படத் தேவையில்லை. கருப்பை கட்டியையோ கருப்பையையோ அகற்றிய பிறகு 6 வாரங்கள் அல்லது 2 மாதங்களுக்குப் பிறகு தாம்பத்ய உறவு வைத்துக் கொள்ளலாம்.

இளம்பெண்களுக்கு நவீன சிகிச்சை!

இளம்பெண்களுக்கு கருப்பையில் உள்ள நார்த்திசுக் கட்டி குழந்தை உண்டாவதற்குத் தடை ஏற்படுத்துகிறது என்றால் மருந்துகள் கொடுத்து கட்டியைச் சுருங்க வைக்கலாம். இதில் குணப்படுத்த முடியாதவர்களுக்குக் கருப்பையை அகற்றாமல் கட்டியை மட்டும் அகற்ற ஒரு நவீன சிகிச்சை வந்துள்ளது. High-Intensity Focused Ultra Sound என்று அதற்குப் பெயர்.

அல்ட்ரா சவுண்ட் அலைகள் மூலம் ஒரே நாளில் கட்டியைச் சுருங்க வைத்துவிடலாம். இந்த இரண்டு வழிகளிலும் கட்டியை முழுவதுமாக அகற்ற முடியாது. சுருங்க வைக்கவே முடியும். காலப்போக்கில் சிலருக்கு மறுபடியும் அங்கே கட்டிகள் உருவாகலாம். இது இந்த சிகிச்சைகளில் உள்ள ஒரு குறைபாடு.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More