கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த மூன்று முத்திரைகளையும் ஒரு சிகிச்சையாக ஒன்றன்பின் ஒன்றாக பயிற்சி செய்யுங்கள். ஒரு மண்டலம் 48 நாட்கள் விடாமல் பயிற்சி செய்யுங்கள்.
நமது உடலில் வாதம் (காற்று) சரியான விகிதத்தில் இல்லாததால் தச வாயுக்களும் அதன் தன்மையில் இயங்காததால் முக வாத பிரச்சனை வருகின்றது. இதற்கு முத்திரையில் வாயு முத்திரை, அபான முத்திரை, அபான வாயு முத்திரை மூன்றையும் ஒரு சிகிச்சையாக இரண்டு நிமிடங்கள் பயிற்சி செய்ய வேண்டும்.
வாயு முத்திரை
நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் ஆள்காட்டி விரலை மடக்கி உள்ளங்கையில் வைத்து அதன் மையத்தில் கட்டை விரலை வைக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடம் இருக்கவும். காலை / மதியம் / மாலை மூன்று வேளையும் சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும்.
அபான முத்திரை
நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கூர்ந்து கவனிக்கவும். பின் நடு விரல் மோதிர விரலை மடக்கி அதன் மையத்தில் கட்டை விரலை வைக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் முதல் ஐந்து நிமிடங்கள் பயிற்சி செய்யவும். காலை / மதியம் / மாலை சாப்பிடும்முன் பயிற்சி செய்யவும்.
அபான வாயு முத்திரை
நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கூர்ந்து தியானிக்கவும். பின் நடு விரல், மோதிர விரலை மடக்கி அதன் மையத்தில் கட்டை விரலை வைக்கவும். உடன் ஆள்காட்டி விரலை மடித்து கட்டை விரலின் அடியில் வைக்கவும், சுண்டு விரல் மட்டும் தரையை நோக்கியிருக்கும் . இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் முதல் ஐந்து நிமிடங்கள் செய்யவும். காலை / மதியம் / மாலை மூன்று வேளைகளும் பயிற்சி செய்யவும்.
மேற்குறிப்பிட்ட மூன்று முத்திரைகளையும் ஒரு சிகிச்சையாக ஒன்றன்பின் ஒன்றாக பயிற்சி செய்யுங்கள். ஒரு மண்டலம் 48 நாட்கள் விடாமல் பயிற்சி செய்யுங்கள். வாதம், முக வாதம், வாயு பிரச்சனை பசியின்மை, வயிறு உப்பிசம் நீங்கும்.
இத்துடன் உணவிலும் ஒரு ஒழுக்கத்தை கடைபிடியுங்கள். கிழங்கு வகைகள் குறைத்து பழவகைகள் கீரை உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள். முடக்கத்தான் கீரை, பசலை கீரை, தண்டங்கீரை, அரைக்கீரை,உணவில் எடுங்கள். மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை மாதம் ஒரு முறை உணவில் எடுத்துக் கொள்ளுங்கள். கொய்யாபழம், மாதுளம்பழம், உணவில் எடுத்துக் கொள்ளுங்கள். இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் உணவில் அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.
நன்றி | மாலை மலர்