தேனீக்கள் கொட்டினால் கடும் பாதிப்பு ஏற்படக்கூடும். கொட்டிய இடத்தில் கடுமையான அரிப்பு, வீக்கம், வலி, சருமம் நிறம் மாறுதல், நாக்கு-தொண்டையில் அழற்சி, வாந்தி போன்ற பிரச்சினைகள் ஏற்படும். சிலருக்கு தலைச்சுற்றல், சுவாசிப்பதில் சிரமம், இதய துடிப்பு அதிகரிப்பு, வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளும் ஏற்படக்கூடும். தேனீ கொட்டினால் உடனடியாக முதலுதவி சிகிச்சை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பாதிப்பு கடுமையாகிவிடும்.
- தேனீ கொட்டிய இடத்தில் சோப்பு நீரை தடவி மசாஜ் செய்துவிட்டு கழுவிவிடலாம். பிறகு காட்டன் டவலை கொண்டு சுத்தம் செய்துவிட்டு ஐஸ்கட்டியால் ஒத்தடம் கொடுக்கலாம். அவ்வாறு செய்வது ஒவ்வாமையை தடுக்கும். வீக்கத்தையும் குறைக்கும். உடலுக்குள் விஷம் செல்வதும் தடுக்கப்படும்.
- தேனீயின் விஷம் உடலுக்குள் ஊடுருவாமல் தடுப்பது முதலுதவி சிகிச்சையில் முக்கியமானது. பேக்கிங் சோடாவுக்கு விஷத்தின் வீரியத்தை கட்டுப்படுத்தும் தன்மை இருக்கிறது. மேலும் வலி, வீக்கம், சருமம் சிவத்தல், அரிப்பு போன்றவற்றையும் கட்டுப்படுத்தும் பண்புகளையும் கொண்டிருக்கிறது. சிறிதளவு தண்ணீரில் பேக்கிங் சோடாவை குழைத்து தேனீ கொட்டிய இடத்தில் பூசலாம்.
- தேனீயின் விஷத்தன்மையை நீக்குவதற்கு வினிகரையும் உபயோகிக்கலாம். ஆப்பிள் சிடேர் வினிகரை சிறிதளவு தண்ணீரில் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசலாம்.
- பற்பசையையும் இதற்கு பயன்படுத்தலாம். அதில் இருக்கும் காரத்தன்மை தேனீயின் விஷத்தில் இருக்கும் அமிலத்தன்மையை குறைக்க உதவும். பற்பசையை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவிவிட்டு கால் மணி நேரம் கழித்து கழுவி அப்புறப்படுத்திவிடலாம்.
- பெரும்பாலானோருக்கு தேனீ கொட்டினால் கடும் பாதிப்பு ஏதும் ஏற்படாது. முதலுதவி சிகிச்சை மேற்கொண்டாலே போதுமானது. அதில் நிவாரணம் கிடைக்கவில்லை என்றால் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியமானது.
தேனீ கொட்டிய இடத்தில் தேனையும் தடவலாம். தேன் ஆண்டி பாக்டீரியல் பண்புகளை கொண்டது. நோய்த்தொற்றுக்குள்ளாகி இருக்கும் பகுதியில் படிந்திருக்கும் கிருமிகளை நீக்கவும் உதவும். அரிப்பு, வலியையும் குறைக்கும். குறிப்பாக வீக்கம் ஏற்பட்டால் அதில் சிறிதளவு தேன் தடவி துணி கொண்டு கட்டிவைக்கலாம். பின்னர் ஒரு மணி நேரம் கழித்து கழுவிவிடலாம்.
நன்றி | மாலை மலர்