காசாவில் உருவாகியுள்ள மனித உரிமை மீறல்களை விசாரிக்க ஐ.நா., மனித உரிமை குழு நியமனம்காசாவில் உருவாகியுள்ள மனித உரிமை மீறல்களை விசாரிக்க ஐ.நா., மனித உரிமை குழு நியமனம்

மத்திய தரைகடல் நாடுகளான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே நடைபெற்று வரும் சண்டையில், இஸ்ரேலின் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காசா பகுதியில் நடைபெற்றதாக கூறப்படும், மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்களை விசாரிக்க, மூன்று நபர் குழுவை, ஐ.நா. மனித உரிமைகள் கமிஷன் நியமித்துள்ளது.

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்கு தலில், 1,948 பாலஸ் தீனியர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும் பான்மையினர் அப்பாவி பொதுமக்கள். 4.25 லட்சம் பாலஸ்தீனியர், அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 12 ஆயிரம் வீடுகள் தரைமட்டமாக்கப் பட்டுள்ளன.

இந்த தாக்குதலின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் குறித்து விசாரிக்க, ஐ.நா., மனித உரிமை கவுன்சில் முடிவு செய்து, மூன்று நபர் குழுவை அமைத்துள்ளது. இதற்காக, நேற்று நடந்த ஓட்டெடுப்பில், இந்தியா உட்பட, 29 நாடுகள் ஓட்டளித்தன. விசாரணை குழு அமைக்கத் தேவையில்லை என, அமெரிக்கா மட்டும் ஓட்டளித்தது. 17 நாடுகள், ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை.

விசாரணை குழுவில், லண்டனைச் சேர்ந்த, பிரிட்டன் – லெபனான் மனித உரிமை பெண் வழக்கறிஞர், அமல் அலாமுதீன், சர்வதேச கிரிமினல் சட்ட பேராசிரியர் வில்லியம் ஸாபாஸ், ஐ.நா., சபையின் சிறப்பு தகவல் தொடர்பாளர், செனெகல் நாட்டைச் சேர்ந்த டவ்டவ் டைனே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குழு, 2015 மார்ச் மாதத்தில், ஐ.நா., மனித உரிமைகள் அமைப்பு கூட்டத்தில், அறிக்கை அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையே, பெண் வழக்கறிஞர் அமல் அலாமுதீன், தன்னால் இந்த குழுவில் இணைந்து பணியாற்ற முடியாது என தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஆசிரியர்