ஐஸ்லாந்தில் எரிமலை வெடிக்கும் அபாயம்- ஐரோப்பிய வான்வெளி போக்குவரத்து ?ஐஸ்லாந்தில் எரிமலை வெடிக்கும் அபாயம்- ஐரோப்பிய வான்வெளி போக்குவரத்து ?

ஐஸ்லாந்து நாட்டின் தென்மேற்கே உள்ள வட்நோஜ்குல் பனிப்பாறையின் கீழ் காணப்படும் பர்டர்புங்கா எரிமலை அந்நாட்டின் இரண்டாவது பெரிய எரிமலை அமைப்பாகும். இங்கு கடந்த 1996ஆம் ஆண்டிற்குப் பின்னர் கடந்த திங்கட்கிழமை அன்று அதிகாலை மிகப் பெரிய நிலை நடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் எந்நேரமும் அந்த எரிமலை வெடிக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் இதற்கான முன்னெச்சரிக்கையாக ஐந்து தர நிலைகளைக் கொண்ட குறியீட்டில் நான்காவது தர நிலையான ஆரஞ்சு எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்று அம்மையத்தின் ஆய்வாளர் மார்டின் ஹென்ச் தெரிவித்துள்ளார்.

கடந்த 16ஆம் தேதி முதல் வெடிப்பிற்கான அறிகுறிகள் காணப்பட்ட போதிலும் இதுவரை எந்த சம்பவமும் நிகழவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.  கடந்த 2010ஆம் ஆண்டு இங்குள்ள எய்ஜப்ஜள்ளஜோகுல் எரிமலை வெடித்தபோது தொடர்ந்து ஆறு நாட்களுக்கு பெரும்பாலான ஐரோப்பிய வான்வெளி போக்குவரத்து மூடப்பட்டது.

இதனால் 10 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டதுடன் 1.7 பில்லியன் டாலர் வர்த்தகமும் பாதிக்கப்பட்டது. இதிலிருந்து பர்டர்புங்கா அமைப்பு மாறுபட்டு காணப்படும்போதும் இதன் தாக்கத்தின் அளவு அதிகமாக இருக்ககூடும் என்றும் இதனால் வான்வெளிப் போக்குவரத்து பாதிப்பு காணப்படும் என்றும் ஹென்ச் எச்சரித்துள்ளார்.

பிரஸ்ஸல்சை மையமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ஐரோப்பிய வான்வெளிப் பொறுப்பு நிறுவனம் ஐஸ்லாந்து வானிலை மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பைக் கருத்தில்கொண்டு நிலைமையை விழிப்புடன் கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

ஆசிரியர்