கடந்த 2012ம் ஆண்டு இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக வந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்படிருந்த 07 ரோஹிங்கியா அகதிகளை நாடுகடத்த இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அசாம் சிறையிலிருந்து மணிப்பூரில் உள்ள மியன்மார் எல்லையோர பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள இவர்கள் அனைவரையும் இன்று மியன்மார் அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளதாக அசாம் காவல்துறையின் கூடுதல் தலைமை இயக்குனர் பாஸ்கர் ஜோதி மஹந்தா தெரிவித்துள்ளார்.
இந்த நாடு கடத்தலை தடுக்கக் கோரி வழக்கறிஞர் பிரசாந்த பூஷண் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை, அவசர விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள முடியாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுத்து விட்டார்.
இந்தியாவில் உள்ள 40,000 ரோஹிங்கியா அகதிகளை நாடுகடத்தும் திட்டத்தை கடந்த ஆகஸ்ட் 2017ல் இந்திய அரசு முன்வைத்த போது கடுமையான கண்டனங்கள் எழுந்திருந்தன. இருப்பினும் நாடுகடத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடர்ந்து கூறி வந்த நிலையில், இன்று முதன் முறையாக 7 ரோஹிங்கியா அகதிகள் இந்தியாவிலிருந்து மியன்மாருக்கு நாடு கடத்தப்படுகின்றனர்.