0
மலேசியாவில் பணியாற்ற செல்லும் நேபாள் தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில் இரு நாடுகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையிழுத்தாகியுள்ளது. நேபாள் தொழில்துறை அமைச்சர் கோகர்னா பிஸ்தா மற்றும் மலேசியாவின் மனித வளத்துறை அமைச்சர் குலசேகரன் தலைமையில் இப்புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
மலேசியாவுக்கு வேலைக்கு செல்லும் நேபாள் தொழிலாளர்கள் எந்த கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை. விமானக் கட்டணம், விசா கட்டணம், மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட அத்தனைக்கும் ஒரு தொழிலாளியை வேலைக்கு அமர்த்தும் மலேசிய நிறுவனமே பொறுப்பெடுக்க வேண்டும். கூடுதலாக, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் தரையிறங்கும் தொழிலாளிகளை 6 மணிநேரத்துக்குள் தங்கள் இடத்துக்கு குறிப்பிட்ட நிறுவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அத்துடன் ஒப்பந்த தொழிலின் கால எல்லை 3 ஆண்டிலிருந்து 2 ஆண்டுக்கு குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தொழிலாளர்களின் மாத சம்பளத்தை 7ம் தேதிக்குள் நிறுவனம், வங்கி , கணக்கில் செலுத்த வேண்டும், போனஸ் மற்றும் அதிக நேரம் பணியாற்றுவதற்கான தொகை மலேசிய அரசு நிர்ணயித்துள்ள தொகையை காட்டிலும் குறைந்ததாக இருக்கக்கூடாது, தொழிலாளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை வேலைக்கு அமர்த்தும் நிறுவனமே உறுதி செய்ய வேண்டும். என்பன கைச்சாத்திடப்பட்டுள்ளது.