வங்கதேசத்தில் தஞ்சமடைந்திருக்கும் ரோஹிங்கியா அகதிகளை மியன்மாருக்கு திருப்பி அனுப்பும் பணி அடுத்த சில வாரங்களில் தொடங்கவிருக்கின்றது.
கடந்த ஆகஸ்ட் 2017 இல் மியன்மாரில் ஏற்பட்ட தொடர் வன்முறைகள் மற்றும் ராணுவத்தின் தேடுதல் வேட்டை காரணமாக உயிருக்கு அஞ்சிய 8 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள் வங்கதேசத்தில் தஞ்சமடைந்திருந்தனர்.
இது வங்கதேசத்திற்கு பல்வேறு நெருக்கடிகளை உருவாக்கியிருந்த நிலையில், ரோஹிங்கியா அகதிகளை மியான்மாருக்கே திருப்பி அனுப்பும் விதமாக இருநாடுகளுக்கிடையே கடந்த நவம்பர் 2017இல் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இம்மாத நடுப்பகுதியிலிருந்து ரோஹிங்கியாக்களை மியன்மார் திரும்ப பெற்றுக்கொள்ளும் என வங்கதேச வெளியுறவு செயலாளர் ஷாஹிதுல் ஹக்கூ தெரிவித்துள்ளார்.